(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, January 4, 2017

ராமநாதபுரத்தில் முதல் முறையாக தேசிய அளவிலன ஹாக்கி போட்டிகள்!!

No comments :
ராமநாதபுரத்தில் முதல் முறையாக தேசிய அளவில் 7 ஆவது சப்-ஜூனியர் மகளிர் ஹாக்கிப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின. இதில் பங்கேற்க வெளிமாநிலங்களிலிருந்து 800 விளையாட்டு வீராங்கனைகள் வந்துள்ளனர்.
 
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வேலுமாணிக்கம் சர்வதேச ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டிகளை,  ஆட்சியர் எஸ். நடராஜன் தலைமை வகித்து தொடக்கி வைத்தார். செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியின் தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா, மாவட்ட ஹாக்கி சங்க துணைத் தலைவர் வேலு. மனோகரன், ஒலிம்பிக் விளையாட்டு வீரர் புபீந்தர்சிங், அர்ஜூனா விருது பெற்ற வி.ஜெ. பிலிப்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, தமிழக ஹாக்கி சங்கத்தின மாநிலத் தலைவர் செல்லத்துரை அப்துல்லா வரவேற்றுப் பேசினார்.


இப்போட்டிகளில் பங்கேற்க, தமிழ்நாடு, ராஜஸ்தான், குஜராத், ஜம்மு-காஷ்மீர், உத்தரகண்ட், மணிப்பூர், அஸ்ஸாம், ஹிமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வெளிமாநிலங்களைச் சேர்ந்த 800 விளையாட்டு வீராங்கனைகள் ராமநாதபுரத்துக்கு வந்துள்ளனர்.   

தொடக்க விழாவை முன்னிட்டு நடைபெற்ற அணிவகுப்பில், வீராங்கனைகள் ஹாக்கி கொடியை ஏந்தியவாறு வந்தனர். இதில், பல்வேறு மாநில அணிகளும் வரிசையாக அணிவகுத்து வந்தன. புதன்கிழமை அதிகாலை முதல் போட்டிகள் தொடங்கி, 22 ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகின்றன. போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீராங்கனைகள் இரு அணிகளாகவும், ஒரு அணிக்கு தலா 400 பேர் வீதம் மொத்தம் 800 பேர் பங்கேற்கவுள்ளனர்.

இதில், மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜனுக்கு, தமிழக ஹாக்கி சங்கத்தின் மாநிலத் தலைவர் செல்லத்துரை அப்துல்லா வலம்புரிச் சங்கு ஒன்றை பரிசாக அளித்தார். விழா நிறைவாக, தமிழகத்தின் கலாசாரத்தை பறைசாற்றும் வகையில் பரதநாட்டியம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

முடிவில், தமிழக ஹாக்கி சங்கப் பொருளாளர் செந்தில் ராஜ்குமார் நன்றி கூறினார்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment