Wednesday, November 16, 2016
சிறுபான்மையின மாணவ–மாணவிகள் கல்வி உதவி தொகை, விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர்-30!!
சிறுபான்மையின மாணவ–மாணவிகள் கல்வி உதவி தொகை
பெறுவதற்கான விண்ணப்பங்களை அளிக்க வருகிற 30–ந்தேதி வரை கால
அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ராமநாதபுரம் கலெக்டர் வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களிலும்
பள்ளிப்படிப்பு படித்து வரும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், புத்தமதத்தினர்,
சீக்கியர், பார்சியம் மற்றும் ஜெயின்
வகுப்பை சார்ந்த மாணவ–மாணவியருக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் கல்வி உதவித்தொகை
திட்டத்தின் கீழ் உதவித்தொகை ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கல்வி
உதவித்தொகையை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற 1–ம் வகுப்பு முதல் 10–ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ–மாணவியரின் பெற்றோர்.
பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்குள் இருக்க
வேண்டும். பிளஸ்–1,
பிளஸ்–2 படித்து வரும் மாணவ–மாணவியரின் பெற்றோர்,
பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
மாணவ–மாணவியர் முந்தைய கல்வி ஆண்டின்
இறுதித் தேர்வில் (1–ம் வகுப்பு நீங்கலாக) 50
சதவீத மதிப்பெண்களுக்கு குறையாமல் பெற்று தேர்ச்சி
பெற்றிருத்தல் வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை,
மற்றும் இதர துறைகள், நலவாரியங்கள் மூலம் கல்வி
உதவி தொகை பெற்றிருக்கக்கூடாது. ஆதார் எண் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.
கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாக
மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது இணைக்க வேண்டிய
ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்வதில் அனைவருக்கும் விலக்கு
அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பித்த பின் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து
மாணவ, மாணவியர் படித்து வரும் கல்வி நிலையத்தில் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு வருகிற
30–ந்தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கல்வி நிலையங்கள் மாணவ–மாணவியரிடமிருந்து பெற்ற
விண்ணப்பங்களை சரிபார்த்து ஆன்லைன் மூலம் வருகிற 30–ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
மேலும் தகுதி உள்ள மாணவ–மாணவியரின்
விண்ணப்பங்களில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கையொப்பமிட்டு மாவட்ட கலெக்டர்
அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை
அலுவலருக்கு அளிக்க வேண்டும்.
உரிய காலத்தில் சிறுபான்மையின மாணவ–மாணவிகள் விண்ணப்பித்து கல்வி உதவிதொகை பெற்று பயனடையுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
குழந்தைகளுக்கு மருத்துவ உதவி தேவையா, அழையுங்கள் சைல்டுலைன் 1098!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள
குழந்தைகளில் மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகள் சைல்டுலைன் அமைப்பினரை 1098 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட குழந்தைகள்
பாதுகாப்பு அலுவலர் டி.துரைமுருகன், சைல்டுலைன் இயக்குநர் எஸ்.கருப்புச்சாமி ஆகியோர் கூறியது:
ஆதரவற்ற குழந்தைகள், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும்
குழந்தைகள், வன்முறையாலும், பல்வேறு கொடுமைகளாலும் பாதிக்கப்பட்டுள்ள
குழந்தைகளும் சைல்டுலைன் அமைப்பினரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
முக்கியமாக மருத்துவ உதவி தேவைப்படுவோர்
சைல்டுலைன் அமைப்பினரை தொடர்பு கொண்டால் அவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ
உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளோம். சைல்டுலைன் அமைப்பின் உதவியால் மொத்தம் 6 பேருக்கு இருதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு
குணமடைந்துள்ளனர். வாய்பேச முடியாத செவித்திறன் குறைபாடுடைய இரு குழந்தைகளுக்கு
அரசின் நிதியுதவியை பெற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் 94 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
குழந்தைத் தொழிலாளர்கள் 7 பேரும், பள்ளியிலிருந்து இடைநின்ற குழந்தைகளாக 75 பேரும் கண்டறியப்பட்டுள்ளனர். பிச்சையெடுத்த குழந்தைகள் 28 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. வீட்டை விட்டு ஓடிப்போனதாக 10 பேரும், காணாமல் போனதாக 18 குழந்தைகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். சைல்டுலைன் அமைப்பின் மூலம் மருத்துவ உதவி 36 பேருக்கும், கல்வி உதவி 139 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
பேட்டியின் போது சைல்டுலைன் மையத்தின்
துணை இயக்குநர் எஸ்.தேவராஜ் உடனிருந்தார்.
செய்தி: தினமணி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)