முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, October 27, 2016

10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுக்கான வினா-விடை புத்தகங்கள் விற்பனை!!

No comments :
ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுக்கான வினா-விடை புத்தகங்கள் செவ்வாய்க்கிழமை முதல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இது குறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க. ஜெயக்கண்ணு கூறியது:

பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வினா-விடை புத்தகம், ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளியில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பத்தாம் வகுப்புக்கான கணிதப் பாட வினாக்கள் அடங்கிய ஸ்கோர் புத்தகம், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களுக்கான தீர்வுப் புத்தகம் ஆகியன விற்பனை செய்யப்படுகின்றன.



அதேபோல், 12 ஆம் வகுப்புக்கான கணிதப் பாட வினா-விடைகள் அடங்கிய கம் புத்தகம் மற்றும் அனைத்துப் பாடங்களுக்கான வினா-விடை புத்தகங்களும் விற்பனை செய்யப்படுகின்றன.


அரசுப் பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற விரும்பும் மாணவர்களுக்கு இப்புத்தகங்கள் மிகவும் உதவியாக இருக்கும் வகையில், கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையில் அரசு பொதுத் தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்கள் மற்றும் அவற்றுக்கான விடைகள் புத்தகமாகத் தொகுக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதை, மாணவ, மாணவியர் வாங்கிப் பயனடையுமாறு, முதன்மைக் கல்வி அலுவலர் கேட்டுக் கொண்டுள்ளார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமேசுவரம் - சென்னை பகல் நேர விரைவு ரயில் இயக்க முயற்சி - எம்.பி!!

1 comment :
ராமேசுவரத்திலிருந்து சென்னைக்கு பகல் நேர விரைவு ரயில் இயக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக, ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் அ. அன்வர்ராஜா தெரிவித்தார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடையே புதன்கிழமை மேலும்  தெரிவித்ததாவது: 


ராமேசுவரத்திலிருந்து சென்னை செல்லும் சேது விரைவு ரயில், சென்னைக்கு காலை 7 மணிக்கு சென்று சேரும் வகையில் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ரயில் அதிவிரைவு ரயிலாகவும்  மாற்றப்பட்டுள்ளது. இந்த ரயில், ராமேசுவரத்திலிருந்து இரவு 8.15 மணிக்கும், சென்னையிலிருந்து மாலை 5.45 மணிக்கும் புறப்படுகிறது.

ராமேசுவரம்-மதுரை-ராமேசுவரம் இடையே செல்லும் அனைத்து பயணிகள் ரயில்களிலும் 12 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.   ராமநாதபுரம் மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான ராமேசுவரம்-சென்னை-ராமேசுவரம் பகல் நேர விரைவு ரயில் இயக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையிலிருந்து இரவு 9.40-க்கு புறப்படும் சென்னை-ராமேசுவரம் விரைவு ரயில், இரவு 7,15 மணிக்கு புறப்படும் வகையில் பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் நேரம் மாற்றியமைக்கப்படுகிறது. இந்த ரயில் ராமேசுவரத்துக்கு காலை 7.30 மணிக்கு வந்து சேரும்.

ராமேசுவரம்-பாலக்காடு-ராமேசுவரம் பயணிகள் ரயில் மற்றும் ராமேசுவரத்திலிருந்து கோயம்புத்தூர் செல்லும் இரவு நேர பயணிகள் ரயிலும் விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தை பிரசவித்த பெண் உயிரிழந்தார்!!

No comments :
ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் புதன்கிழமை பெண் குழந்தை பிரசவித்த பெண் உயிரிழந்தார்.

மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததாலேயே உயிரிழந்ததாக கணவர் புகார் தெரிவித்துள்ளார்.   

ராமநாதபுரம் அருகே தெனனவனூர் பகுதி டி.கண்ணபுரம் கிராமத்தைச் சேர்ந்த வாசுதேவன் மனைவி அனிதா (29). இவர் பிரசவத்துக்காக கடந்த 20 ஆம் தேதி ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மறுநாள் 21 ஆம் தேதி, இவருக்கு அறுவைச் சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது.  அதையடுத்து, கடந்த 25 ஆம் தேதி இரவு அனிதாவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அப்போது, மருத்துவமனையில் மருத்துவர்கள் யாரும் இல்லாததால், அனிதா உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக வாசுதேவன் கூறியதாவது: 

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அனிதாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், பலமுறை மருத்துவரை அழைத்தபோதும் யாரும் பணியில் இல்லை. தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கவும் மறுத்துவிட்டனர்.    இதன் காரணமாக, என் மனைவி உயிரிழந்துவிட்டார். சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளேன். கோட்டாட்சியர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

இது குறித்து, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜனிடம் கேட்டபோது அவர் கூறுகையில், அரசு மருத்துவமனையில் பெண் உயிரிழந்திருப்பது தொடர்பாக விசாரணைக் குழு அமைக்கப்படும். விசாரணையில் சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)