Wednesday, August 24, 2016
தேசிய இளைஞர் விருதுபெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
தேசிய இளைஞர் விருதுபெற தகுதியானவர்கள்
விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 12–ந்தேதி சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளையொட்டி நடைபெறும்
தேசிய அளவிலான இளைஞர் விழாவில் மத்திய அரசால் சமூக நலன் மற்றும் தேசிய
வளர்ச்சிக்கான பணிகளை சிறப்பாக செய்து வரும் இளைஞர்களுக்கும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் தேசிய இளைஞர் விருது
வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி இந்த நிதியாண்டில் கடந்த 1.4.2015 முதல் 31.3.2016 வரையிலான காலகட்டத்தில் செய்த நலப்பணிகளுக்காக இந்த விருது
வழங்கப்பட உள்ளது.
இளைஞர் விருது பெற தனிநபர் 15 வயது முதல் 29 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். தன்னார்வ
அடிப்படையில் நிதி ஆதாயம் பெறப்படாமல் தொண்டு செய்திருக்க வேண்டும். இதற்கு முன்
விருது பெற்றவர்கள் இந்த ஆண்டு விருது பெற விண்ணப்பிக்க முடியாது. மத்திய, மாநில, பல்கலைக்கழகங்கள்
மற்றும் இதர அரசு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க
முடியாது.
இதேபோல இந்த விருது பெற தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் சங்க பதிவு சட்டத்தின்பிடி பதிவு செய்திருக்க வேண்டும். எவ்வித லாப
நோக்கத்துடன் தொண்டு பணிகள் ஆற்றியிருக்கக்கூடாது. குறிப்பிட்ட சாதி, சமய அடிப்படையில் தொண்டாற்றிய நிறுவனங்கள் இந்த விருதுக்கு
விண்ணப்பிக்க இயலாது. ஏற்கனவே விருது பெற்ற தொண்டு நிறவனங்களும் விண்ணப்பிக்க
முடியாது. சமுதாய பணிகளில் ஈடுபட்டு தொண்டாற்றிய புகைப்படம் மற்றும்
செய்திக்குறிப்பு மற்றும் இதர ஆவணங்களுடன் சான்றொப்பமிட்ட ஆதாரங்கள் இணைக்கப்பட
வேண்டும்.
இதற்கான விண்ணப்ப படிவங்களை மாவட்ட விளையாட்டு
அலுவலர் அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து 2 நகல்களுடன் மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தில் வருகிற 2–ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். தகுதியான
விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழு பரிசீலித்து மாநில அளவிலான
குழுவுக்கு பரிந்துரைக்கும். பின்னர் மாநில குழுவினர் தகுதியான விண்ணப்பங்களை
மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பார்கள்.
எனவே கடந்த 2015–16–ம் நிதியாண்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக
பணியாற்றிய இளைஞர்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் உரிய காலகட்டத்திற்குள்
விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் நடராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
ராமநாதபுரம் பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகத்தில் தீ விபத்து, தொலைபேசி இணைப்புகள் துண்டிப்பு!!
ராமநாதபுரம் பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகத்தில்
செவ்வாய்க்கிழமை திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் மாவட்டம் முழுவதும் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
ராமநாதபுரம் அரண்மனை அருகே மில்லர் பங்களா சாலையில் பி.எஸ்.என்.எல்.தலைமை
அலுவலகம் உள்ளது. இங்கு 2ஆவது மாடியில் தரைவழித் தொடர்பு மற்றும் இணையம் தொடர்பான சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இணைப்புகள் உள்ளன. இத் தளத்திலிருந்து
செவ்வாய்க்கிழமை மாலை ஜன்னல் வழியாக திடீரென புகை வெளியேறியது. இதைக்கண்ட
அலுவலர்கள்,
ஊழியர்கள் உடனடியாக வெளியே ஓடிவந்து தீயணைப்புத்துறைக்கு
தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து வந்த ராமநாதபுரம் தீயணைப்புக் கோட்ட அலுவலர் முரளி தலைமையிலான
வீரர்கள் 2ஆவது மாடிக்குள் நுழைய முயன்றனர். ஆனால், புகைமூட்டம் மற்றும்
துர்நாற்றம் காரணமாக நுழைய முடியவில்லை. பின்னர் கார்பன்டை ஆக்ஸைடு நிரப்பப்பட்ட
புகையை கக்கும் கருவியை பயன்படுத்தி வயர்கள்,பிளாஸ்டிக் பொருள்கள்
ஆகியவற்றின் மீது பீய்ச்சியடித்து புகை மூட்டத்தை அணைத்தனர்.
இதனால் மாவட்டம் முழுவதும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட
தொலைப்பேசி இணைப்புகள் செயலிழந்தது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)