முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, May 22, 2016

திமுக கூட்டணிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி - ம.ம.க தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா!!

No comments :

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிகார பலம், பண பலம், ஓரவஞ்சனையுடன் செயல்பட்ட தேர்தல் ஆணையத்தின் துணையுடன் தேர்தலை சந்தித்த அதிமுகவை விட 1.2 சதவீதம் வாக்குகள் மட்டுமே குறைவாகப் பெற்று திமுக கூட்டணி சாதனைப் படைத்துள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி நிலைகூட இல்லாத திமுக இன்று மிகப்பெரும் எண்ணிக்கையில் எதிர்க்கட்சியாக உருவாகி இருக்கின்றது. இந்த நிலையை உருவாக்கிட திமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


சிறப்பான கூட்டணியை அமைத்து அதனை சீரிய முறையில வழிநடத்திய திமுகவின் தலைவர் கலைஞர் அவர்களுக்கும், தனது கடும் உழைப்பால் களத்தை வலுப்படுத்திய திமுக பொருளாளர் சகோதரர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 100 சதவீதம் வாக்கு எண்ணிக்கையை அடைவோம் என்ற நல்ல முழக்கத்துடன் செயல்பட்டாலும் தேர்தலில் வாக்களிப்பதற்கு பணம் கொடுத்து ஜனநாயகப் படுகொலை நடப்பதை தேர்தல் ஆணையத்தால் தடுக்க முடியாதது வேதனைக்குரியது.

நாங்கள் ஆற்றும் பல்வேறு மக்கள் சேவைப் பணிகளில் ஒன்றுதான் அரசியல் பணி. இந்தத் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட்ட நான்கு தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் எமது சேவை தன்னலமின்றி அனைத்து மக்களுக்கும் வீரியத்துடன் அயராது தொடரும். மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட்ட நான்கு தொகுதிகளிலும் எவ்வித ஆசாபாசங்களுக்கும் இடம் கொடுக்காமல் எமது வேட்பாளர்களுக்கு வாக்களித்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆறாவது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்கும் செல்வி ஜெயலலிதாவிற்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகளை குறிப்பாக மதுவிலக்கு தொடர்பான வாக்குறுதியை நிறைவேற்ற அவர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்,
மனிதநேய மக்கள் கட்சி


பகிர்வு: திரு. அஸ்கர் அலி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

தொடரும் வரலாறு - இராமநாதபுரத்தில் வெற்றி பெறும் வேட்பாளரின் கட்சியே தமிழக்த்தில் ஆட்சி அமைக்கும்!!

No comments :
ராமநாதபுரத்தில் போட்டியிடுபவர்களில் எந்தக் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெறுகிறாரோ அதே கட்சி தான் ஆட்சி அமைக்கும் என்ற கடந்தகால வரலாறு மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் என்றாலே தமிழக அரசியல் தலைவர்களுக்கு ராமநாதபுரம் மாவட்டமும், ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியும் பற்றிய நினைவுகளே மேலோங்கி நிற்கும். ஏனெனில், நடந்து முடிந்த எல்லாத் தேர்தல்களிலும் ராமநாதபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற கட்சியே தமிழகத்தில் ஆட்சி அமைத்து வந்துள்ளது. பொதுவாக ராமநாதபுரம் தொகுதி மக்கள் தேர்வு செய்யும் பேரவை உறுப்பினர் எதிர்க்கட்சி வரிசையில் இருந்ததே இல்லை.



ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி (தனி), திருவாடானை, முதுகுளத்தூர் மற்றும் ராமநாதபுரம் என 4 தொகுதிகள் உள்ளன. இதில் கடந்த 1952,1957,1962 ஆகிய பொதுத் தேர்தல்களில் ராமநாதபுரம் மன்னரான ராஜா சண்முக ராஜேசுவர நாகநாத சேதுபதி காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த நேரத்தில் காங்கிரஸ் தான் ஆட்சியைக் கைப்பற்றியது.

1967 இல் தங்கப்பன் திமுக சார்பில் வெற்றி பெற்ற போது திமுக ஆட்சி அமைத்தது. 1971 இல் திமுக வேட்பாளர் எம்.எஸ்.கே. சத்தியேந்திரன் வெற்றி பெற்றார். இதன் பின்பு 1977,1980,1984 ஆகிய தேர்தல்களில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ராமசாமி 3 முறை வெற்றி பெற்றார். இதனையடுத்து திமுக வேட்பாளர் எம்.எஸ்.கே.ராஜேந்திரன் வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் தென்னவனும், 1996 இல் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ரகுமான்கானும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இவர்கள் வெற்றி பெற்ற அனைத்துக் காலங்களிலும் அந்தந்த கட்சியே ஆட்சி அமைத்திருப்பதை காண முடியும். கடந்த 2001 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.பி.யுமான அ.அன்வர்ராஜா வெற்றி பெற்ற போது அதிமுக ஆட்சி அமைத்தது.

திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கே.ஹசன்அலி 2006 ஆம் ஆண்டு வெற்றி பெற்ற போது கருணாநிதி முதல்வராக இருந்தார்.

கடந்த 2011 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியாக சேர்ந்து போட்டியிட்ட மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா வெற்றி பெற்ற போது முதல்வராக ஜெயலலிதாவே ஆட்சி அமைத்தார். இத்தேர்தலில் அதிமுகவின் மருத்துவ அணியின் மாநில துணைச் செயலாளரான டாக்டர்.முரு.மணிகண்டன் 33222 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். இப்போதும் அதிமுகவே ஆட்சி அமைத்து ஜெயலலிதா மீண்டும் முதல்வராகிறார்.

இவ்வாறாக ஒவ்வொரு தேர்தல்களிலும் ராமநாதபுரம் தொகுதி மக்கள் தேர்ந்தெடுக்கும் வேட்பாளரின் கட்சியோ அல்லது கூட்டணி கட்சியினர் சார்ந்திருக்கும் ஆட்சியோ அமைந்துள்ளது என்பது வரலாற்று உண்மைகளாகும்.

எனவே ராமநாதபுரம் தொகுதி மக்களின் தீர்ப்பே தமிழக மக்களின் தீர்ப்பு என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

செய்தி: தினமணி



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)