முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, March 24, 2016

மனிதகுலம் இருக்கும் வரை நிலைத்திருக்கும் தொண்டு, கல்வித்தொண்டு மட்டுமே - TBAK கல்லூரியில் வைரமுத்து!!

No comments :
கல்விக்கு செய்த தொண்டு மட்டும் தான் மனிதகுலம் இருக்கும் வரை நிலைத்திருக்கும் என்று கவிஞர் வைரமுத்து செவ்வாய்க்கிழமை பேசினார்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசீம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற 28-ஆம் ஆண்டு விழாவில் அவர் மேலும் பேசியதாவது:

பெண்களை சிதைக்க நினைத்தாலோ, ஒடுக்க நினைத்தாலோ, மூட நம்பிக்கையில் மூழ்கடிக்க நினைத்தாலோ அது தவறு. பின்னால் வருவதை முன்கூட்டியே அறிந்து சொல்வதால் தான் பெண்புத்தி பின்புத்தி என்று பழமொழி சொன்னார்கள். ஆண்களின் இதயத்தை விட பெண்களின் இதயத்தின் எடை குறையலாம். இதயத்தின் எடை மாறி இருக்கலாமே தவிர எண்ணத்தின் எடை, ஆற்றலின் எடை, சகிப்புத்தன்மையின் எடை மாறவில்லை.

உலகம் முழுவதும் பிரசவ வலியை மறப்பதற்கான மருந்தை பெண்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்தியப் பெண்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த வலியை தாங்கிக் கொள்ள நெஞ்சிலும் உடம்பிலும் உறுதி உள்ளது என்று சொன்னார்கள்.



உலக வரலாற்றில் எது வேண்டுமானாலும் மாறலாம். ஆனால் இந்த பெண்கள் கல்லூரியை துவக்கிய சீதக்காதி அறக்கட்டளை கல்விக்கு செய்த தொண்டு என்றும் மாறாமல் இருக்கும். கல்விக்கு செய்யும் மூலதானம் தான் தலைமுறைக்கு செய்யும் மூலதானமாகும். இவ்வாறு பேசினார்.

முன்னதாக இவ்விழாவுக்கு சீதக்காதி அறக்கட்டளை தலைவர் ஆரிப் புகாரி ரஹ்மான் தலைமை வகித்தார். செயலாளர் காலித் ஏ.கே.புகாரி, கல்லூரி முன்னாள் மாணவிகள் தலைவி பஜீலாஆசாத், அறக்கட்டளை உறுப்பினர்கள் சரீபாஅஜீஸ், குர்ரத்ஜமீலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி முதல்வர் சுமையா வரவேற்றார். இவ்விழாவில் சிறந்த மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இறுதியில் கல்லூரி மாணவி அசீமா நாச்சியா நன்றி கூறினார்.

செய்தி: தினமணி


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)