Wednesday, March 2, 2016
நவரச திலகம் - தமிழ் திரை விமர்சனம்!!
காதல், கல்யாணம், கருமாதியெல்லாம் சரிதான். ஆனால் உறவு முறை மாறி போகும் காதல் என்றால் எப்படி
சரியாகும் என்பதை கலகலப்புடன் குடும்பப் படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர்
காம்ரன்.
ஹீரோ ஆனந்த். வழக்கம்போல வெட்டி ஆபீஸர்தான். அப்பாவின்
குடும்பச் சொத்தை அழித்தவர். என்னென்னமோ பிஸினஸ் செய்வதாகச் சொல்லி
பிழைப்பை ஓட்டி இப்போது கடைசியாக ரியல் எஸ்டேட் பிஸினஸ் செய்து வருகிறார். இவருடைய
நண்பர் கருணாகரன்.
கருணாகரனின் டெம்போ
வேனை வட்டி கட்டவில்லையென்பதால் கடன் கொடுத்த சேட்டுவின் ஆட்கள் அள்ளிக் கொண்டு
போக.. அதை மீட்கச் செல்கிறார்கள் நண்பர்கள். செல்லும் வழியில் ஹீரோயினை
பார்த்தவுடன் அப்படியே ஆஃப் ஆகிறார் ஹீரோ.
வண்டியை மீட்க
மதுரை செல்ல வேண்டியவர்கள் ஹீரோயினை பார்த்துவிட்டு தஞ்சாவூர் ரயில் ஏறி கூடவே
செல்கிறார்கள். ஹீரோவின் ஜொள்ளை பார்த்து ஹீரோயினின் அப்பாவான ஜெயபிரகாஷே
ஹீரோவிடம் தன் மகள் ஒரு ஊமை என்று சொல்லி பிளேட்டை மாற்றிப் போடுகிறார். ஆனாலும்
ஹீரோவுக்குள் காதல் பூத்துவிட்டது.
இந்த நேரத்தில்
ஹீரோயினின் அக்காவுக்கு திருமண நிச்சயத்தார்த்த ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
ஹீரோயினை மடக்க வேண்டுமெனில் முதலில் அந்த வீட்டிற்குள் நுழைய வேண்டும்.
வீட்டுக்குள் நுழைய வேண்டுமெனில் பலமான சிபாரிசும், ஒரு சரியான
காரணமும் இருக்க வேண்டும் என்று யோசிக்கிறார் ஹீரோ.
தன் காதலியின்
அக்கா மாப்பிள்ளையை கரெக்ட் செய்தால் இது எல்லாமே நடக்குமே என்றெண்ணி அக்கா
மாப்பிள்ளையான சித்தார்த் விபினை பாலோ செய்கிறார்கள் நண்பர்கள். அனைத்துவித கெட்ட
பழக்கங்களையும் தன்னகத்தே வைத்துக் கொண்டு நல்லவன்போல டிராமா போடும் சித்தார்த், இவர்களிடம்
உண்மை முகத்துடன் மாட்டிக் கொள்ள.. வேறு வழியில்லாமல் இவர்களுக்கு நண்பராகிறார்.
நிச்சயத்தார்த்த
தினத்தன்று மாப்பிள்ளைக்காக ஹீரோ செய்த பிளக்ஸ் போர்டு டிஸைனை தற்செயலாகப்
பார்க்கும் ஹீரோவின் அப்பா இளவரசு பெரும் அதிர்ச்சியாகிறார். நிச்சயத்தார்த்த
மாப்பிள்ளை அவருடைய மனைவியின் தம்பியாக இருப்பதைக் கண்டு உடனே ஹீரோவுக்கு போன்
போட்டு கிளம்பி வரச் சொல்கிறார்.
இப்போது உறவு முறை
சிக்கல் பூதாகரமாக கண் முன்னே வந்து நிற்கிறது ஹீரோவுக்கு. தாய் மாமன் அக்காவை
கல்யாணம் செய்து.. அவனுடைய அக்கா மகன், அதே குடும்பத்தில் தங்கையை
கல்யாணம் செய்வது உறவு முறையில் தவறாச்சே என்பதை உணர்ந்த ஹீரோ பட்டென்று அந்த
திருமணத்தை சதி செய்து நிறுத்துகிறார்.
திருமணம்
நிறுத்தப்பட்டாலும் பெண் வீட்டார் செய்ய முன் வந்த சீர்வரிசைகளை நினைத்து
அவமானப்பட்டாலும் பரவாயில்லை என்று மீண்டும் அவர்களுடனேயே சம்பந்தம் வைத்துக்
கொள்ள நினைக்கிறார் சித்தார்த்தின் தாய். இதற்காக அவர் ஒரு அரசியல்வாதியின் மூலமாக
ஹீரோயின் குடும்பத்தை அணுக நினைக்கிறார்.
இந்த நேரத்தில் ஒரு
குடுகுடுப்பைக்காரன் மூலமாக அன்றைய நிச்சயத்தார்த்தத்தை சதி செய்து நிறுத்தியது
ஹீரோதான் என்பது ஹீரோயினின் குடும்பத்திற்கு தெரிய வர. அனைவரும் அவர் மீது
கடுப்பாகிறார்கள். ஹீரோயினும் மனம் மாறி தனது தந்தையிடம் ஹீரோவை மறந்துவிடுவதாக
வாக்குக் கொடுக்கிறார்.
இது தெரியாமல் ஹீரோ
ஹீரோயினை திருமணம் செய்ய நினைக்கிறார்.. இன்னொரு பக்கம் சித்தார்த் இப்போதும் அதே
வீட்டுக்கு மூத்த மருமகனாக நினைக்கிறார்.. இந்த இரண்டுமே முடிந்ததா இல்லையா
என்பதுதான் திரைக்கதை..!
ஹீரோ
ம.கா.பா.ஆனந்த், ஹீரோயின்
சிருஷ்டி டாங்கே, கருணாகரன், ஜெயபிரகாஷ், சித்தார்த்
விபின், ஹீரோவின்
அப்பாவான இளவரசு, ஹீரோயினின்
பாட்டி.. என்று அத்தனை பேருமே கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் நடித்திருக்கிறார்கள்.
இயக்குநரின் சிறப்பான காமெடி இயக்கத்தினால் படம் தொய்வு விழாமல் போரடிக்காமல்
செல்கிறது.
நமோ நாராயணன் அடி
வாங்கிவிட்டு வரும் காட்சிகள்.. அவரே விடுதலையாகி கோர்ட்டில் மனைவியிடம் பேசும்
காட்சிகள்.. சித்தார்த்தின் அபான வாயு வெளியேற்றக் காட்சிகள்.. அவருடைய அட்ராசிட்டியான
இன்னொரு பக்க வாழ்க்கை.. இளவரசுவின் காலர் டியூன்.. இவர்களை பழி வாங்க சித்தார்த்
சொல்லும் அந்த ஒரேயொரு காரணம்.. “மதுரைக்காரங்கன்னா சும்மாவா..” என்று
சொல்லி முடிப்பதற்குள் சொன்னவர் பல்பு வாங்கும் காட்சி.. என்று பரவலாக படத்தில்
நிறைந்திருக்கும் காமெடி காட்சிகளே படத்தை நிச்சயம் ஓட வைக்கும்.
நடிப்பென்று
பார்த்தால் ஹீரோவின் நடிப்பை பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. இயல்பாக தனக்கு என்ன
வருமோ அதையே செய்திருக்கிறார். ஹீரோயின் சிருஷ்டியின் கன்னக்குழி அழகுடன் கொஞ்சம்
இடுப்பழகையும் இந்தப் படத்தில் கூடுதலாக காண்பித்திருக்கிறார். கோடம்பாக்கத்துல
இன்னமும் இடத்தைப் பிடிக்கணும்னா இதையெல்லாம் செஞ்சாகணும்னு யாரோ ஒரு பிரகஸ்பதி
போட்டுக் கொடுத்துட்டான் போலிருக்கு.. பொண்ணு கொஞ்சம் கொஞ்சமா வேலையை ஆரம்பிச்சிருச்சு.
உறவுமுறை சிக்கல்
வந்த பின்பு ஹீரோ சட்டென்று மனம் மாறி நிச்சயத்தார்த்தத்தை நிறுத்துவது
என்பதெல்லாம் காதல் மயக்கத்தில் என்பதை பிற்பாடு
பல இடங்களில் வசனம் மூலமாக இயக்குநர் நிறுவியிருந்தாலும், தன்னுடைய
காதல்தான் முக்கியம்.. அடுத்தவரின் குடும்பம் முக்கியமல்ல என்று நினைத்து
அமைந்திருக்கும் திரைக்கதை சமூகத்திற்கு சற்று ஆபத்தான விஷயம்.
இத்தனை காலமாக
பிரிந்திருந்த மாமாவை பார்த்ததும் ஒரே வரியில் “செளக்கியமா?” என்று
கேட்டுவிட்டு மருமகன் சித்தார்த் அடுத்த பேச்சைத் துவக்குவதும், மாமா
இளவரசுவும் அப்படியே ஜம்ப் ஆவதும் டிவி சீரியலில்கூட பார்க்க முடியாத திரைக்கதை.
தன் கல்யாணத்தை தடுத்து
நிறுத்தியவன் தன் தங்கையை உயிருக்கு உயிராகக் காதலிப்பதாகச் சொல்லி தங்கையின்
காதலுக்கு ஓகே சொல்லும் நவீன பாசமலர் அக்கா எந்த ஊரில் இருப்பார் என்று
தெரியவில்லை.. ஆனாலும் இதுதான் படத்தில் ஒரு முக்கியமான
டிவிஸ்ட்டு.. இந்தக் காதல், கசமுசால்லாம்
நாசமாப் போகக் கூடாதா என்றெல்லாம் நினைக்க வைத்துவிட்டது இந்தக் காட்சி..
ரமேஷின்
ஒளிப்பதிவில் வெளிப்புறக் காட்சிகள்தான் அதிகம். அதிலும் பகல் நேரக் காட்சிகளே
என்பதால் கவனிக்க வைத்திருக்கிறார். சித்தார்த் விபின் தான் நடிக்கும் படம்
என்பதால் கூடுதல் அக்கறையோடு இசைத்திருக்கிறார். ‘அய்ய்யோ’, ‘கொள்ளை
அழகுக்காரி’,
‘டம்மி டவாளி’ பாடல்கள் கேட்க
வைக்கின்றன. ‘கொள்ளை
அழகுக்காரி’யில்
சிருஷ்டியின் கொள்ளை அழகும் ஒளிப்பதிவால் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது..!
ஒரு சீரியஸான
விஷயத்தை காமெடி கலந்து சொல்லிவிட்டால் அதன் சீரியஸ்னெல் புரியாமலேயே போய்விடும்
என்பது இயக்குநருக்குத் தெரியாததல்ல. ஆனால் அனைத்து சினிமா இயக்குநர்களும்
இப்படித்தான்.
இப்போதைய பல
தற்கொலைகள் மற்றும் காதல் தடுப்பு ஆர்ப்பாட்டங்களில் இந்த உறவு முறை சிக்கல்களும்
முக்கிய பங்கு வகிக்கின்றன. அதை தவறு என்று சொல்லும் அதே நேரத்தில் அதிலிருந்து
வெளியே வரும்போது யாரையும் காயப்படுத்தாமல் வர வேண்டும்.. குடும்பங்களை பாதிக்காத
வகையில்தான் அதைச் செய்ய வேண்டும் என்பதை அழுத்தமாகச் சொல்லியிருந்தால் சமூக
கண்ணோட்டத்தோடு சிந்தித்திருக்கும் இயக்குநர் என்று பாராட்டலாம். ஆனால்
செய்யலையே..?
ஒரு சராசரி
இயக்குநராக.. தயாரிப்பாளருக்கு போட்ட காசை திருப்பி சம்பாதித்துக் கொடுக்கும்
கோடம்பாக்கத்து இயக்குநராக தன் பணியை செவ்வனே செய்திருக்கிறார்.
எப்படியிருந்தாலும்
கலகலப்புக்கு பஞ்சமில்லாத படம் ‘நவரச திலகம்’ என்பதில் சந்தேகமில்லை..!
விமர்சனம்: ட்ரூ தமிழன்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
ஏர்வாடி பகுதியில் ரூ. 2 கோடியில் கட்டப்பட்ட மனநலக் காப்பகத்தை முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார்!!
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே ஏர்வாடி
பகுதியில் ரூ. 2
கோடியில் கட்டப்பட்ட மனநலக் காப்பகத்தை செவ்வாய்க்கிழமை
முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தார்.
திறப்பு விழாவை அடுத்து, ராமநாதபுரம் மாவட்ட
ஆட்சியர் எஸ். நடராஜன் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
விழாவில், கீழக்கரை வட்டாட்சியர்
கமலாபாய்,
கடலாடி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மூக்கையா, மாவட்ட மனநல திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பெரியார் லெனின், ஏர்வாடி ஹக்தார் நிர்வாக சபையினர், ஊராட்சி செயலர்
அஜ்மல்கான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)