(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, October 31, 2016

கொடி - தமிழ் திரை விமர்சனம்!!

No comments :
தமிழ் சினிமாவில் இதுவரை காதலர்களுக்கு இடையில் சாதி, மதம், வர்க்கம் உள்ளிட்ட சில காரணங்கள் இடையூறாய் வந்து நின்றிருக்கின்றன. ஆனால், முதன்முறையாக இருவேறு கட்சியின் அரசியல் உணர்வு தடைக்கல்லாக இருக்கும் சுவாரசியமான பின்னணியில் இயங்குகிறது 'கொடி' திரைப்படம். தனுஷ் முதன்முறையாக இரு வேடங்களில் நடித்திருக்கிறார். படத்தின் முக்கால் பாகம் வரை எதற்காக இத்திரைப்படத்துக்கு இரண்டு தனுஷ்கள் தேவை என்ற குழப்பம் இருந்துகொண்டே இருந்தது. ஆனால் ஒரு கட்டத்தில், நாடகத்தனமாக இருந்தாலும் இதற்கான அவசியத்தை வலுவாகவே சித்தரித்திருக்கிறார் இயக்குநர் துரை செந்தில்குமார்.

'ஒருதலை ராகம்' திரைப்படத்தின் போஸ்டர் பின்னணியோடு காலத்தைச் சுட்டும் அடையாளத்துடன் படம் துவங்குகிறது. அரசியலில் தீவிர ஈடுபாடுள்ள ஒருவர் (கருணாஸ்) தனக்குப் பிறந்த இரட்டை மகன்களில் ஒருவனை கோயிலுக்கு நேர்ந்துவிடுவதுபோல, தாம் நம்பும் கட்சியின் அரசியலுக்கு நேர்ந்துவிடுகிறார். பாதரசக் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு போராட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு தந்தை தீக்குளித்து இறந்து போக, அவரின் பாதையில் தன் அரசியல் பயணத்தை தீவிரமாகத் தொடர்கிறான் மகன்.

இதே போன்றதொரு அரசியல் லட்சியத்தோடு முன்னகர்கிறாள் இவனின் தோழியும் காதலியுமான ருத்ரா (திரிஷா). ஆனால் எதிர்க்கட்சியைச் சார்ந்தவள். வெளிப்பார்வைக்கு இருவரும் சண்டைக்கோழிகள்போல தெரிந்தாலும், ஒருவரையொருவர் நேசிக்கிறார்கள். தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் அரசியல் எவ்வகையிலும் குறுக்கிடக்கூடாது என்கிற தெளிவுடன் இயங்குகிறார்கள். என்றாலும், அரசியல் அவர்களை அவ்வாறு நிம்மதியாக இருக்க விடுவதில்லை. காதலை விடவும் அதிகாரத்தின் மீதான ஈர்ப்பே ருத்ராவுக்கு அதிகமாக இருக்கிறது. ஒருநிலையில், அப்பாவியாக வளரும் இன்னொரு தனுஷ், இந்த அரசியல் பாதையில் வர வேண்டிய சூழல் ஏற்படுகிறது. 

அரசியல்வாதிகளான தனுஷ் - ருத்ராவின் காதல் என்னவானது, ருத்ரா தன் லட்சியத்தை அடைந்தாளா, இன்னொரு தனுஷின் பங்கு இதில் என்ன என்பதையெல்லாம் அரசியல் பரமபத விளையாட்டுகளின் பின்னணியில் சுவாரசியமாக நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குநர்.

***
முதலில் இயக்குநர் துரை செந்தில்குமாருக்கு ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காகப் பெரிய பாராட்டைச் சொல்ல வேண்டும்.

ஹீரோக்களின் ஆதிக்கமே நிறைந்து வழியும் தமிழ் சினிமாவில், நாயகிகள் பெரும்பாலும் லூஸுகளாவே சித்தரிக்கப்படும் தமிழ் சினிமாவில், ஏறத்தாழ நாயகனுக்கு இணையான வலிமையான பாத்திரத்துடன் நாயகியை வைத்து திரைக்கதையை உருவாக்கியதற்காக. 

'எங்க வீட்டுப் பிள்ளை' மாதிரி இரண்டு தனுஷ்கள். அரசியல் தனுஷ் ஆக்ரோஷமானவர். இன்னொரு தனுஷ், உப்பு பெறாத காரணத்துக்காக ஓர் இளம்பெண்ணிடம் கன்னத்தில் அறை வாங்குகிற அப்பாவி. அந்த இளம்பெண்ணை தன்னால் பழிவாங்க முடியாத காரணத்தினால், தன் அண்ணனை உபயோகித்து பழி தீர்த்துக்கொள்ளும் காட்சிகள் நகைச்சுவையாக உள்ளன. போலவே, அவளிடம் வம்பு செய்யும் கந்துவட்டிக்காரனையும் அண்ணனை அனுப்பி சண்டை போடவைத்து, அதன்மூலம் தான் பெயர் வாங்கிக்கொள்ளும் காட்சிகள். 
அப்பாவி தனுஷ்-ன் நடிப்பு சராசரியானது என்றால், அரசியல்வாதி தனுஷ் தன்னுடைய ஆக்ரோஷமான உடல்மொழியில் அசத்துகிறார். 'புதுப்பேட்டை' அரசியல்வாதியின் சாயல் ஏதும் இல்லாமல், வேறு பாணி. காதலியால் துரோகம் செய்யப்படும் ஒரு சிக்கலான காட்சியிலும், தன்னைப் புரியவைப்பதற்காக அவரிடம் போராடும் ஒரு காட்சியிலும் இவரது நடிப்பு அபாரமாக உள்ளது. வழக்கமான மசாலா காட்சிகளின் இடையேயும் தான் ஒரு இயல்பான நடிகன் என்பதை அழுத்தமாக நிறுவத் தவறவில்லை. 
***
திரிஷாவுக்கு இது ஒரு மைல்கல் திரைப்படமாக அமைந்திருக்கக்கூடிய அரிய வாய்ப்பிருந்தது. அந்தளவுக்கு வலிமையான பாத்திரம். அரசியலின் வழியாக அதிகாரத்தைக் கைப்பற்றி சட்டென்று மேலுயர வேண்டும் என்பதே இவரது வாழ்நாள் லட்சியம். அதற்காகப் பதுங்கவும் பாயவும் தயாராக இருக்கிறார். அதே சமயத்தில் காதலா, அரசியலா என்கிற மெல்லிய தடுமாற்றமும் இவருக்குள் இருக்கிறது. இந்த உணர்வுகளை தனது முகபாவங்களால் வெளிப்படுத்த முயன்றிருக்கிறார். அவரின் தோற்றம் இயல்பானதாகவும் வசீகரமானதாகவும் இருக்கிறது. 

ஆனால், குருவி தலையில் பனங்காயை வைத்தது போன்ற வலிமையான பாத்திரத்தை அவரால் சிறப்பாகக் கையாள முடியவில்லை என்றே சொல்ல வேண்டும். திரிஷாவின் அப்பாவித்தனமான தோற்றமும் உடல்மொழியும், அவரது பாத்திர வடிவமைப்புக்கு முரணாக உள்ளது. படையப்பாவில் 'நீலாம்பரி' பாத்திரத்தை ரம்யா கிருஷ்ணன் ஆக்ரோஷமாக கையாண்டிருப்பது நினைவுக்கு வருகிறது. 

ஆணாதிக்கமும் ஆண்மைய சிந்தனையும் போட்டியும் வலுவாக உள்ள அரசியல் போன்ற சிக்கலான தளங்களில் பெண்கள் நுழையும்போது கடுமையானவர்களாக மாறிவிடுகிறார்கள். இதன் சர்வாதிகார உளவியல் தன்னிச்சையாக உருவாகிவிடுகிறது. சுற்றியிருக்கும் ஆண்களைக் கட்டுப்படுத்தவதற்காக ஒரு நெருப்பு வளையத்தை தன்னைச் சுற்றி அமைத்துக்கொள்கிறார்கள். முரட்டுத்தனமான முடிவுகளை எளிதில் எடுத்து ஆண்களை மிரட்சியில் வைத்துக்கொள்கிறார்கள். அவர்களிடமுள்ள பாதுகாப்பற்ற உணர்வே இதற்குக் காரணம். உலகமெங்கிலும் பெரும்பாலான பெண் அரசியல்வாதிகளின் வரலாற்றைப் பார்த்தால் இதை அறிய முடியும்.

இந்த வகையில், திரிஷாவின் பாத்திர வடிவமைப்பு உருவாக்கப்பட்டிருப்பது சிறப்பே என்றாலும், இன்னமும்கூட வலிமையாக சித்தரிக்கப்பட்டிருக்கலாம். அரசியல் தனுஷ்-ன் லட்சியத்தின் பின்னணி துல்லியமாக சித்தரிக்கப்பட்டிருப்பதுபோல, திரிஷாவின் பின்னணி சொல்லப்படாதது ஒரு குறை. ஆனால், நாயகனே எப்போதும் ஜெயிக்கும் கதையாக இத்திரைப்படமும் நிறைவது ஒரு நெருடல். 

சரண்யா வழக்கமான லூஸு அம்மாவை சற்று கட்டிப் போட்டிருப்பதே பெரும் ஆறுதல். இதில் அவர் நடிப்பதற்கான சந்தர்ப்பங்களும் அமைகின்றன. பல வருடங்களாக ஒதுக்கிவைத்திருக்கும் மகன், ஒருநாள் 'அம்மா' என்று அழைக்கும்போது இவரின் உடல் தன்னிச்சையாக பதறுவது நல்ல காட்சி. பழைய படங்களில் தாம் நடித்திருப்பதைப்போல முஷ்டியை உயர்த்திப்பிடித்து கண்களை சிவக்கவைத்து நம்மை வேதனைப்படுத்தாமல் அடக்கமாக நடித்திருக்கிறார் எஸ்.ஏ. சந்திரசேகர். அனுபமா பரமேஸ்வரனால், தமிழ் சினிமாவின் வழக்கமான நாயகியாக மட்டுமே இருக்க முடிகிறது. 
***
இரண்டு கழகங்களின் பின்னணியில் திரைக்கதையை அமைத்திருப்பதின் மூலம், தமிழகத்தின் அரசியல் பின்னணியையும் சூசகமாக இயக்குநர் சொல்ல முயன்றிருப்பது சிறப்பு. ஆட்சிகள் மாறினாலும் ஒரு தீவிரமான சமூகப் பிரச்னை மட்டும் மாறாமல், இரு கட்சிகளாலும் பரஸ்பர ஆதாயங்களோடும் குற்றச்சாட்டுகளாலும் பந்தாடப்பட்டு தீர்க்கப்படாமல் உறைந்திருக்கும் அவலம் சரியாகவே சொல்லப்படுகிறது. ஆனால், பாத்திரங்களின் உணர்ச்சி மோதல்களுக்குள் இந்தப் பிரச்னை மழுங்கடிக்கப்பட்டு ஒரு பாவனைக்காவது தீர்க்கப்படாமலேயே முடிந்துபோவது, சினிமாவின் வேடிக்கை அரசியலைக் காட்டுகிறது. 

அரசியல் கட்சிக்குள் நுழைபவர்கள் சேவை மனப்பான்மை என்பதே துளியுமின்றி சுயநல அரசியல் காரணமாக ஒருவரையொருவர் துரோகித்துக்கொள்வதும், அரசியல் தொண்டர்களின் படிநிலைகளுக்குள் உள்ள அடிமைத்தனமும் விரோதமும் நகைச்சுவை போர்வையில் அசலான சித்திரங்களாக விரிகின்றன. திரிஷா கெட்ட அரசியல்வாதியாக சித்தரிக்கப்பட்டிருக்கும்போது, இரண்டு தனுஷ்களுமே நாயகத்தன்மைக்கு பாதகமின்றி நேர்மையான அரசியல்வாதிகளாகக் காட்டப்படுவது யதார்த்தத்துக்கு முரணாக உள்ளது. 

அதிரடியான காட்சிகளுக்கு சந்தோஷ் நாராயணனின் ரகளையான இசை பொருத்தமாக ஒலிக்கிறது. ஆனால், பாடல்கள் எதுவும் நினைவில் தங்கவில்லை. இயக்குநர் வெற்றிமாறனின் தயாரிப்பு. வணிகரீதியாக வெற்றியடையக்கூடிய திரைக்கதையை தேர்ந்தெடுத்தது புத்திசாலித்தனம்.

அரசியல் ரீதியாக எதிரெதிர் தரப்பில் உள்ள காதல். இதில் உண்மையின் பக்கம் நாயகனும், துரோகத்தின் பக்கம் நாயகியும். இந்தப் பின்னணியை வைத்து இன்னமும் சுவாரசியமான திரைக்கதையை இயக்குநர் உருவாக்கியிருக்கலாம். இன்னொரு தனுஷ்-ன் வழகக்கமான தமிழ் சினிமாத்தனமான காட்சிகளைக் குறைத்துவிட்டு இந்தப் பகுதியைப் பிரதானப்படுத்தியிருந்தால், கொடி இன்னமும் உயரப் பறந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும்.

விமர்சனம்:     சுரேஷ் கண்ணன்



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment