முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, October 31, 2016

கொடி - தமிழ் திரை விமர்சனம்!!

No comments :
தமிழ் சினிமாவில் இதுவரை காதலர்களுக்கு இடையில் சாதி, மதம், வர்க்கம் உள்ளிட்ட சில காரணங்கள் இடையூறாய் வந்து நின்றிருக்கின்றன. ஆனால், முதன்முறையாக இருவேறு கட்சியின் அரசியல் உணர்வு தடைக்கல்லாக இருக்கும் சுவாரசியமான பின்னணியில் இயங்குகிறது 'கொடி' திரைப்படம். தனுஷ் முதன்முறையாக இரு வேடங்களில் நடித்திருக்கிறார். படத்தின் முக்கால் பாகம் வரை எதற்காக இத்திரைப்படத்துக்கு இரண்டு தனுஷ்கள் தேவை என்ற குழப்பம் இருந்துகொண்டே இருந்தது. ஆனால் ஒரு கட்டத்தில், நாடகத்தனமாக இருந்தாலும் இதற்கான அவசியத்தை வலுவாகவே சித்தரித்திருக்கிறார் இயக்குநர் துரை செந்தில்குமார்.

'ஒருதலை ராகம்' திரைப்படத்தின் போஸ்டர் பின்னணியோடு காலத்தைச் சுட்டும் அடையாளத்துடன் படம் துவங்குகிறது. அரசியலில் தீவிர ஈடுபாடுள்ள ஒருவர் (கருணாஸ்) தனக்குப் பிறந்த இரட்டை மகன்களில் ஒருவனை கோயிலுக்கு நேர்ந்துவிடுவதுபோல, தாம் நம்பும் கட்சியின் அரசியலுக்கு நேர்ந்துவிடுகிறார். பாதரசக் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு போராட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு தந்தை தீக்குளித்து இறந்து போக, அவரின் பாதையில் தன் அரசியல் பயணத்தை தீவிரமாகத் தொடர்கிறான் மகன்.

இதே போன்றதொரு அரசியல் லட்சியத்தோடு முன்னகர்கிறாள் இவனின் தோழியும் காதலியுமான ருத்ரா (திரிஷா). ஆனால் எதிர்க்கட்சியைச் சார்ந்தவள். வெளிப்பார்வைக்கு இருவரும் சண்டைக்கோழிகள்போல தெரிந்தாலும், ஒருவரையொருவர் நேசிக்கிறார்கள். தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் அரசியல் எவ்வகையிலும் குறுக்கிடக்கூடாது என்கிற தெளிவுடன் இயங்குகிறார்கள். என்றாலும், அரசியல் அவர்களை அவ்வாறு நிம்மதியாக இருக்க விடுவதில்லை. காதலை விடவும் அதிகாரத்தின் மீதான ஈர்ப்பே ருத்ராவுக்கு அதிகமாக இருக்கிறது. ஒருநிலையில், அப்பாவியாக வளரும் இன்னொரு தனுஷ், இந்த அரசியல் பாதையில் வர வேண்டிய சூழல் ஏற்படுகிறது. 

அரசியல்வாதிகளான தனுஷ் - ருத்ராவின் காதல் என்னவானது, ருத்ரா தன் லட்சியத்தை அடைந்தாளா, இன்னொரு தனுஷின் பங்கு இதில் என்ன என்பதையெல்லாம் அரசியல் பரமபத விளையாட்டுகளின் பின்னணியில் சுவாரசியமாக நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குநர்.

***
முதலில் இயக்குநர் துரை செந்தில்குமாருக்கு ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காகப் பெரிய பாராட்டைச் சொல்ல வேண்டும்.

ஹீரோக்களின் ஆதிக்கமே நிறைந்து வழியும் தமிழ் சினிமாவில், நாயகிகள் பெரும்பாலும் லூஸுகளாவே சித்தரிக்கப்படும் தமிழ் சினிமாவில், ஏறத்தாழ நாயகனுக்கு இணையான வலிமையான பாத்திரத்துடன் நாயகியை வைத்து திரைக்கதையை உருவாக்கியதற்காக. 

'எங்க வீட்டுப் பிள்ளை' மாதிரி இரண்டு தனுஷ்கள். அரசியல் தனுஷ் ஆக்ரோஷமானவர். இன்னொரு தனுஷ், உப்பு பெறாத காரணத்துக்காக ஓர் இளம்பெண்ணிடம் கன்னத்தில் அறை வாங்குகிற அப்பாவி. அந்த இளம்பெண்ணை தன்னால் பழிவாங்க முடியாத காரணத்தினால், தன் அண்ணனை உபயோகித்து பழி தீர்த்துக்கொள்ளும் காட்சிகள் நகைச்சுவையாக உள்ளன. போலவே, அவளிடம் வம்பு செய்யும் கந்துவட்டிக்காரனையும் அண்ணனை அனுப்பி சண்டை போடவைத்து, அதன்மூலம் தான் பெயர் வாங்கிக்கொள்ளும் காட்சிகள். 
அப்பாவி தனுஷ்-ன் நடிப்பு சராசரியானது என்றால், அரசியல்வாதி தனுஷ் தன்னுடைய ஆக்ரோஷமான உடல்மொழியில் அசத்துகிறார். 'புதுப்பேட்டை' அரசியல்வாதியின் சாயல் ஏதும் இல்லாமல், வேறு பாணி. காதலியால் துரோகம் செய்யப்படும் ஒரு சிக்கலான காட்சியிலும், தன்னைப் புரியவைப்பதற்காக அவரிடம் போராடும் ஒரு காட்சியிலும் இவரது நடிப்பு அபாரமாக உள்ளது. வழக்கமான மசாலா காட்சிகளின் இடையேயும் தான் ஒரு இயல்பான நடிகன் என்பதை அழுத்தமாக நிறுவத் தவறவில்லை. 
***
திரிஷாவுக்கு இது ஒரு மைல்கல் திரைப்படமாக அமைந்திருக்கக்கூடிய அரிய வாய்ப்பிருந்தது. அந்தளவுக்கு வலிமையான பாத்திரம். அரசியலின் வழியாக அதிகாரத்தைக் கைப்பற்றி சட்டென்று மேலுயர வேண்டும் என்பதே இவரது வாழ்நாள் லட்சியம். அதற்காகப் பதுங்கவும் பாயவும் தயாராக இருக்கிறார். அதே சமயத்தில் காதலா, அரசியலா என்கிற மெல்லிய தடுமாற்றமும் இவருக்குள் இருக்கிறது. இந்த உணர்வுகளை தனது முகபாவங்களால் வெளிப்படுத்த முயன்றிருக்கிறார். அவரின் தோற்றம் இயல்பானதாகவும் வசீகரமானதாகவும் இருக்கிறது. 

ஆனால், குருவி தலையில் பனங்காயை வைத்தது போன்ற வலிமையான பாத்திரத்தை அவரால் சிறப்பாகக் கையாள முடியவில்லை என்றே சொல்ல வேண்டும். திரிஷாவின் அப்பாவித்தனமான தோற்றமும் உடல்மொழியும், அவரது பாத்திர வடிவமைப்புக்கு முரணாக உள்ளது. படையப்பாவில் 'நீலாம்பரி' பாத்திரத்தை ரம்யா கிருஷ்ணன் ஆக்ரோஷமாக கையாண்டிருப்பது நினைவுக்கு வருகிறது. 

ஆணாதிக்கமும் ஆண்மைய சிந்தனையும் போட்டியும் வலுவாக உள்ள அரசியல் போன்ற சிக்கலான தளங்களில் பெண்கள் நுழையும்போது கடுமையானவர்களாக மாறிவிடுகிறார்கள். இதன் சர்வாதிகார உளவியல் தன்னிச்சையாக உருவாகிவிடுகிறது. சுற்றியிருக்கும் ஆண்களைக் கட்டுப்படுத்தவதற்காக ஒரு நெருப்பு வளையத்தை தன்னைச் சுற்றி அமைத்துக்கொள்கிறார்கள். முரட்டுத்தனமான முடிவுகளை எளிதில் எடுத்து ஆண்களை மிரட்சியில் வைத்துக்கொள்கிறார்கள். அவர்களிடமுள்ள பாதுகாப்பற்ற உணர்வே இதற்குக் காரணம். உலகமெங்கிலும் பெரும்பாலான பெண் அரசியல்வாதிகளின் வரலாற்றைப் பார்த்தால் இதை அறிய முடியும்.

இந்த வகையில், திரிஷாவின் பாத்திர வடிவமைப்பு உருவாக்கப்பட்டிருப்பது சிறப்பே என்றாலும், இன்னமும்கூட வலிமையாக சித்தரிக்கப்பட்டிருக்கலாம். அரசியல் தனுஷ்-ன் லட்சியத்தின் பின்னணி துல்லியமாக சித்தரிக்கப்பட்டிருப்பதுபோல, திரிஷாவின் பின்னணி சொல்லப்படாதது ஒரு குறை. ஆனால், நாயகனே எப்போதும் ஜெயிக்கும் கதையாக இத்திரைப்படமும் நிறைவது ஒரு நெருடல். 

சரண்யா வழக்கமான லூஸு அம்மாவை சற்று கட்டிப் போட்டிருப்பதே பெரும் ஆறுதல். இதில் அவர் நடிப்பதற்கான சந்தர்ப்பங்களும் அமைகின்றன. பல வருடங்களாக ஒதுக்கிவைத்திருக்கும் மகன், ஒருநாள் 'அம்மா' என்று அழைக்கும்போது இவரின் உடல் தன்னிச்சையாக பதறுவது நல்ல காட்சி. பழைய படங்களில் தாம் நடித்திருப்பதைப்போல முஷ்டியை உயர்த்திப்பிடித்து கண்களை சிவக்கவைத்து நம்மை வேதனைப்படுத்தாமல் அடக்கமாக நடித்திருக்கிறார் எஸ்.ஏ. சந்திரசேகர். அனுபமா பரமேஸ்வரனால், தமிழ் சினிமாவின் வழக்கமான நாயகியாக மட்டுமே இருக்க முடிகிறது. 
***
இரண்டு கழகங்களின் பின்னணியில் திரைக்கதையை அமைத்திருப்பதின் மூலம், தமிழகத்தின் அரசியல் பின்னணியையும் சூசகமாக இயக்குநர் சொல்ல முயன்றிருப்பது சிறப்பு. ஆட்சிகள் மாறினாலும் ஒரு தீவிரமான சமூகப் பிரச்னை மட்டும் மாறாமல், இரு கட்சிகளாலும் பரஸ்பர ஆதாயங்களோடும் குற்றச்சாட்டுகளாலும் பந்தாடப்பட்டு தீர்க்கப்படாமல் உறைந்திருக்கும் அவலம் சரியாகவே சொல்லப்படுகிறது. ஆனால், பாத்திரங்களின் உணர்ச்சி மோதல்களுக்குள் இந்தப் பிரச்னை மழுங்கடிக்கப்பட்டு ஒரு பாவனைக்காவது தீர்க்கப்படாமலேயே முடிந்துபோவது, சினிமாவின் வேடிக்கை அரசியலைக் காட்டுகிறது. 

அரசியல் கட்சிக்குள் நுழைபவர்கள் சேவை மனப்பான்மை என்பதே துளியுமின்றி சுயநல அரசியல் காரணமாக ஒருவரையொருவர் துரோகித்துக்கொள்வதும், அரசியல் தொண்டர்களின் படிநிலைகளுக்குள் உள்ள அடிமைத்தனமும் விரோதமும் நகைச்சுவை போர்வையில் அசலான சித்திரங்களாக விரிகின்றன. திரிஷா கெட்ட அரசியல்வாதியாக சித்தரிக்கப்பட்டிருக்கும்போது, இரண்டு தனுஷ்களுமே நாயகத்தன்மைக்கு பாதகமின்றி நேர்மையான அரசியல்வாதிகளாகக் காட்டப்படுவது யதார்த்தத்துக்கு முரணாக உள்ளது. 

அதிரடியான காட்சிகளுக்கு சந்தோஷ் நாராயணனின் ரகளையான இசை பொருத்தமாக ஒலிக்கிறது. ஆனால், பாடல்கள் எதுவும் நினைவில் தங்கவில்லை. இயக்குநர் வெற்றிமாறனின் தயாரிப்பு. வணிகரீதியாக வெற்றியடையக்கூடிய திரைக்கதையை தேர்ந்தெடுத்தது புத்திசாலித்தனம்.

அரசியல் ரீதியாக எதிரெதிர் தரப்பில் உள்ள காதல். இதில் உண்மையின் பக்கம் நாயகனும், துரோகத்தின் பக்கம் நாயகியும். இந்தப் பின்னணியை வைத்து இன்னமும் சுவாரசியமான திரைக்கதையை இயக்குநர் உருவாக்கியிருக்கலாம். இன்னொரு தனுஷ்-ன் வழகக்கமான தமிழ் சினிமாத்தனமான காட்சிகளைக் குறைத்துவிட்டு இந்தப் பகுதியைப் பிரதானப்படுத்தியிருந்தால், கொடி இன்னமும் உயரப் பறந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும்.

விமர்சனம்:     சுரேஷ் கண்ணன்



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கண்மாய்கள் மற்றும் ஊருணிகளில் தூர்வாரும் பணிகள்!!

No comments :
வடகிழக்கு பருவமழை காலத்தில் மழைநீரை சேமிக்க ஏதுவாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கண்மாய்கள் மற்றும் ஊருணிகளில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் தூர்வாரும் பணிகள், ஆழப்படுத்தும் பணிகள் நீர்வரத்து கால்வாய்களை சீர்செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



இந்த நிலையில் பொதுப்பணித்துறை சார்பில் ஆர்.காவனூர் கிராமத்தில் காரேந்தல் கண்மாய்க்கு செல்லும் நீர்வரத்து கால்வாயை சீர்செய்யும் பணிகளையும் அரசடிவண்டல் கிராமத்தில் வைகை ஆற்றுப்படுகை மற்றும் இடது பிரதான கால்வாயில் இருந்து பிரிந்து செல்லும் மேல நாட்டார் கால்வாய் தூர்வாரும் பணிகளையும் மாவட்ட கலெக்டர் நடராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் நாகரத்தினம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வெள்ளைச்சாமி ஆகியோர் உடனிருந்தனர்.


செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

Sunday, October 30, 2016

இனிதே நடைபெற்று வரும் தேவரின் 54வது குருபூஜையும், 109வது ஜெயந்தி விழாவும்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் 54வது குருபூஜையும், 109வது ஜெயந்தி விழாவும் நடைபெற்று வருகிறது.

வெள்ளிக் கிழமை தொடங்கிய மூன்று நாள் விழாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஆளும் கட்சி முதல் அனைத்துக் கட்சித் தலைவர்களும் முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்த வரும் இந்த நாட்களில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



முதல் நாளான வெள்ளிக்கிழமை ஆன்மிக விழா நடைபெற்றது. அதில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் முளைப்பாரி, பால்குடம் எடுத்து வந்து தேவர் நினைவாலயத்தில் உள்ள தேவரின் சிலைக்கு அபிஷேகம் செய்தனர். சனிக்கிழமை காலை லட்சார்ச்சனை பூஜை நடைபெற்றது.

இன்று குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் எந்தவித அசம்பாவிதமும் நடக்காத வண்ணம் அந்தப் பகுதி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும, முதன் முறையாக அதிநவீன ஆளில்லாத விமானத்தை தமிழக காவல்துறை ஈடுபடுத்தியுள்ளது.

மேலும், கீழச்செவல்பட்டி, காரைக்குடி உட்பட 4 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களுடன் சோதனை சாவடிகள் அமைத்து, வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

Saturday, October 29, 2016

காஷ்மோரா - தமிழ் திரை விமர்சனம்!!

No comments :
பேய், பில்லிசூனியம் போன்றவற்றை நம்புகிறவர்களை ஏமாற்றிப் பிழைக் கிறார் காஷ்மோரா (கார்த்தி). அவரது ஏமாற்று வேலைகளுக்குக் குடும் பமும் கைகொடுக்கிறது. 

காவல்துறை ஆணையர் முதல், அரசியல் பெரும்புள்ளி வரை காஷ்மோராவை நம்பும் நேரத்தில், அவரும் அவரது குடும்பமும் ஏழு நூற்றாண்டுகள் பழமையான ஒரு பேயிடம் சிக்கிக்கொள்கிறார்கள். அந்தப் பேய் யார்? அதன் நோக்கம் என்ன? அதனிடமிருந்து அவர்களால் தப்பிக்க முடிந்ததா என்பதுதான் காஷ்மோரா.

நிகழ்காலம், கடந்த காலம் இரண்டையும் இணைத்துக் குழப்பம் இல்லாத திரைக் கதையை எழுதியிருக்கிறார் இயக்குநர் கோகுல். முதல் பாதித் திரைக்கதையில் கூறியது கூறல் தேவைக்கு அதிகமாகவே இருக்கிறது. கார்த்தி ஒரு ஏமாற்றுக்காரர் என்பது இரண்டாவது காட்சியிலேயே தெரிந்துவிடுகிறது. அதன் பிறகும் கார்த்தி யின் மோசடி ஜாலங்களை விரிவுபடுத்திக் கொண்டே போவது தேவையற்றது.


இருப்பினும் அரசியல்வாதி தனக் கோடி (சரத் லோகிதாஸ்வா), அவர் கண்மூடித் தனமாக நம்பும் சீனியர் போலிச் சாமியார் திருக்கோடி (மதுசூதனன்), அவரது கைத்தடிகள் ஆகியோர் காஷ்மோரா ஆடும் ஆட்டத்தில் கடப்பாரையை விழுங்கிவிட்டு சுக்குக் கஷாயம் குடித் ததுபோல் அல்லாடும் காட்சிகள் சிரிப்புக்கு உத்தரவாதம்.

நகைச்சுவையைக் கதையோட்டத்தில் இயல்பாகக் கையாண்டிருக்கிறார் இயக்குநர். காட்சிகள், கதாபாத்திரங்களை வடி வமைத்த விதமும் பாராட்டத்தக்கவை. நயன்தாராவின் பாத்திரமும் 700 ஆண்டு களுக்கு முந்தைய காட்சிகளும் பேய் வீட் டில் மாட்டிக்கொண்டு கார்த்தி குடும்பம் படும் அவஸ்தையும் நன்றாக உள்ளன.

பேய் வீட்டுக்குள் கார்த்தி மாட்டிக்கொள்ளும் காட்சியில் காட்சியமைப்பும் கார்த்தி யின் நடிப்பும் அருமை. அதே வீட்டில் ஏற்கனெவே மாட்டிக்கொண்டிருந்த முரு கானந்தமும் நடிப்பில் அசத்தியிருக்கிறார்.

ஆவி, பேய் ஓட்டுவதாகச் சொல்லும் ஆசாமிகள் அதை எப்படி வணிகமாக மாற்றியிருக்கிறார்கள் என்பதை முதல் பாதியில் தோலுரித்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர். ஆனால் இரண்டாம் பாதி முழுக்க முழுக்கப் பேய்களின் ஆதிக்கமாக இருக்கிறது. பேய்கள் இருப்பது நிஜம் என்று (மூட நம்பிக்கையை) வலியுறுத்தி னால், பேய் ஓட்டும் (மோசடி) ஆசாமி களும் இருக்கத்தானே செய்வார்கள்?

போர்க்களக் காட்சிகளில் காட்சி யமைப்பு கவரும் அளவுக்குச் சண்டை அமைக்கப்பட்ட விதம் கவரவில்லை. தளபதி கார்த்தி போடும் சண்டைகள் மாயா ஜாலம்போல உள்ளன. நயன்தாராவின் நடனக் காட்சி சிறப்பாக உள்ளது.

கார்த்திக்கு இரண்டு வேடங்கள். மூன்று பரிமாணங்கள். கிரந்த தேசத்தின் தளபதி ராஜ்நாயக், அவனது ஆவி, பேயோட்டி காஷ்மோரா ஆகிய மூன்று தோற்றங்களும் நன்றாகவே பொருந்தி யிருக்கின்றன. மொட்டைத் தலையில் வல்லூறு உருவத்தைப் பச்சை குத்திக் கொண்டு வரும் தோற்றத்திலேயே அசத்து கிறார். கருந்தாடியை கர்வமாகத் தடவிக் கொண்டு, வீரத்தையும் பெண்ணாசையை யும் வெளிப்படுத்தும் நடிப்பில் ஈர்க்கிறார். காஷ்மோரா பாத்திரத்தில் வழக்கமான கலகலகார்த்தியாகக் கவர்கிறார்.

நயன்தாராவுக்குத் தரப்பட்டிருக்கும் இடம் குறைவு. ஆனால் அவர் வரும் எல்லாக் காட்சிகளும் கம்பீரம் கலந்த வசீகரம். நெடுநாட்களுக்குப் பிறகு விவேக் காமெடியில் முத்திரை பதிக்கிறார்.

ஆங்கோர்வாட் கோவிலும், கிரந்த தேச அரண்மனை செட்டும், ரத்னமாலாவின் அந்தப்புர அரண்மனை செட்டும், கிராஃபிக் ஸில் உருவாக்கப்பட்டுள்ள செட்களும் காட்சிகளின் பிரம்மாண்டத்துக்கு உதவி யிருக்கின்றன. பல காட்சிகளில் சிறப்பாக இருக்கும் கிராஃபிக்ஸ் காட்சிகள், பேய் மரம் நடந்துவருவது போன்ற சில இடங்களில் பலவீனமாக இருக்கிறது.

கடந்த காலக் கதாபாத்திரங்கள் மீது நம்பகத் தன்மையை உருவாக்குவதில் கலை இயக்கம் (ராஜீவன்), ஆடைகள் வடிவமைப்பு (நிஹார் தவான், அனுவர்த் தன், பெருமாள் செல்வம்) ஆகியவற்றுக்கு எந்த அளவு பங்கிருக்கிறதோ, அதே அளவுக்கு வசனங்களுக்கும் (கோகுல், ஜான் மகேந்திரன், ஆர்.முருகேசன்) பங்கிருக்கிறது. ராஜ் நாயக் இருக்கும் இடத்தில் வாளையும் வார்த்தைகளையும் பார்த்து வீச வேண்டும்”, ‘பிணமேடையின் மீது மணமேடை அமைத்த மயக்கத்தில் இருந்தவனே..போன்ற வசனங்கள் காட்சிக்கு வலிமை சேர்த்து மனதில் தங்கிவிடுகின்றன.

ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் உள்ளரங் கக் காட்சிகளை எடுத்துக்காட்டிய விதத்தில், ஒளியமைப்பு, கேமரா நகர்வுகள் ஆகியவற்றில் பிரம்மாண்டத்தை நிலைநிறுத்தியிருக்கிறார். சந்தோஷ் நாராயணின் பின்னணி இசை படத்தோடு ஒன்றவைக்கிறது. கல்பனா ரவீந்தரின் குரலில் ஒலிக்கும் ஓயா ஓயாபாடல் ரத்னமாலா கதாபாத்திரத்தின் வலியையும் சதியையும் நமக்குக் கடத்திவிடுகிறது. போர்க்களப் பாடல் கம்பீரமாக ஒலிக்கிறது.

முன்பாதியின் வேகத்துக்கு முழுசாக ஈடுகொடுக்க முடியவில்லை என்றாலும்... நகைச்சுவை, பிரம்மாண்டம், முன்னணி நட்சத்திரங்கள் ஆகிய அம்சங்களோடு, கொஞ்சம் சமூக அக்கறையும் கலந்து தருவதில் சொல்லத்தக்க அளவு வெற்றி பெற்றிருக்கிறது காஷ்மோரா படக் குழு.


-ஹிந்து விமர்சனம்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

அரசு மருத்துவமனைகளில் பணி நேரத்தில் இல்லாத மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - கலெக்டர்!!

No comments :
ராமநாதபுரத்தில் அரசு மருத்துவமனைகளில் பணி நேரத்தில் இல்லாத மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன் வெள்ளிக்கிழமை எச்சரித்துள்ளார்.

ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்த்தப்படும் வகையில், நவீன வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் அரசு மருத்துவர்கள் பலரும் பணி நேரத்தின்போது, பணியில் இல்லாமல் இருப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு ஏராளமான புகார்கள் அனுப்பப்பட்டுள்ளன. அதன்பேரில், ஆட்சியர் எஸ். நடராஜன் வெள்ளிக்கிழமை திடீரென அங்கு சென்று ஆய்வு செய்தார்.

அதன்பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சில மருத்துவர்கள் மட்டும் உரிய தகவலின்றி பணியில் இல்லாமலும்பணி நேரத்தில் பணியாற்றாமலும் இருந்து வருவதாகப் புகார்கள் வந்துள்ளன. இதனால்திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வின்போதுமருத்துவர்களின் வருகைப் பதிவுக்கான பயோ-மெட்ரிக் கருவி பழுதாகி இருந்ததும் தெரியவந்தது. உடனடியாகஅதை பழுதுநீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து பயோ-மெட்ரிக் வருகைப் பதிவை கண்காணிக்கவும்மருத்துவத் துறை இணை இயக்குநருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.   ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தின் முக்கிய இடங்களில்  ரகசிய கேமராக்கள் பொருத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.



அரசு சாராத 5 கண் மருத்துவமனைகள் மூலம் கண் சிகிச்சை முகாம்கள் நடத்தப்பட்டன. கடந்த 2015 ஜனவரி முதல் ஜூன் வரை 526 பேருக்கு கண் அறுவைச் சிகிச்சை செய்து கண்ணொளி பெற்றுள்ளனர்.

185 பேருக்கு அரசு மானியத் தொகையாக தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.1.85 லட்சத்துக்கான காசோலைகளும் வழங்கப்பட்டதாகவும், ஆட்சியர் தெரிவித்தார்.   இந்த ஆய்வின்போது, மருத்துவத் துறை இணை இயக்குநர் டாக்டர் சகாயஸ்டீபன்ராஜ், சுகாதாரப் பணிகள் துறையின் துணை இயக்குநர் டாக்டர் மீனாட்சி, அரசு தலைமை மருத்துவமனைக் கண்காணிப்பாளர் (பொறுப்பு) சாதிக்அலி ஆகியோரும் உடனிருந்தனர்.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

Thursday, October 27, 2016

10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுக்கான வினா-விடை புத்தகங்கள் விற்பனை!!

No comments :
ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுக்கான வினா-விடை புத்தகங்கள் செவ்வாய்க்கிழமை முதல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இது குறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க. ஜெயக்கண்ணு கூறியது:

பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வினா-விடை புத்தகம், ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளியில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பத்தாம் வகுப்புக்கான கணிதப் பாட வினாக்கள் அடங்கிய ஸ்கோர் புத்தகம், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களுக்கான தீர்வுப் புத்தகம் ஆகியன விற்பனை செய்யப்படுகின்றன.



அதேபோல், 12 ஆம் வகுப்புக்கான கணிதப் பாட வினா-விடைகள் அடங்கிய கம் புத்தகம் மற்றும் அனைத்துப் பாடங்களுக்கான வினா-விடை புத்தகங்களும் விற்பனை செய்யப்படுகின்றன.


அரசுப் பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற விரும்பும் மாணவர்களுக்கு இப்புத்தகங்கள் மிகவும் உதவியாக இருக்கும் வகையில், கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையில் அரசு பொதுத் தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்கள் மற்றும் அவற்றுக்கான விடைகள் புத்தகமாகத் தொகுக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதை, மாணவ, மாணவியர் வாங்கிப் பயனடையுமாறு, முதன்மைக் கல்வி அலுவலர் கேட்டுக் கொண்டுள்ளார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமேசுவரம் - சென்னை பகல் நேர விரைவு ரயில் இயக்க முயற்சி - எம்.பி!!

1 comment :
ராமேசுவரத்திலிருந்து சென்னைக்கு பகல் நேர விரைவு ரயில் இயக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக, ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் அ. அன்வர்ராஜா தெரிவித்தார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடையே புதன்கிழமை மேலும்  தெரிவித்ததாவது: 


ராமேசுவரத்திலிருந்து சென்னை செல்லும் சேது விரைவு ரயில், சென்னைக்கு காலை 7 மணிக்கு சென்று சேரும் வகையில் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ரயில் அதிவிரைவு ரயிலாகவும்  மாற்றப்பட்டுள்ளது. இந்த ரயில், ராமேசுவரத்திலிருந்து இரவு 8.15 மணிக்கும், சென்னையிலிருந்து மாலை 5.45 மணிக்கும் புறப்படுகிறது.

ராமேசுவரம்-மதுரை-ராமேசுவரம் இடையே செல்லும் அனைத்து பயணிகள் ரயில்களிலும் 12 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.   ராமநாதபுரம் மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான ராமேசுவரம்-சென்னை-ராமேசுவரம் பகல் நேர விரைவு ரயில் இயக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையிலிருந்து இரவு 9.40-க்கு புறப்படும் சென்னை-ராமேசுவரம் விரைவு ரயில், இரவு 7,15 மணிக்கு புறப்படும் வகையில் பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் நேரம் மாற்றியமைக்கப்படுகிறது. இந்த ரயில் ராமேசுவரத்துக்கு காலை 7.30 மணிக்கு வந்து சேரும்.

ராமேசுவரம்-பாலக்காடு-ராமேசுவரம் பயணிகள் ரயில் மற்றும் ராமேசுவரத்திலிருந்து கோயம்புத்தூர் செல்லும் இரவு நேர பயணிகள் ரயிலும் விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தை பிரசவித்த பெண் உயிரிழந்தார்!!

No comments :
ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் புதன்கிழமை பெண் குழந்தை பிரசவித்த பெண் உயிரிழந்தார்.

மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததாலேயே உயிரிழந்ததாக கணவர் புகார் தெரிவித்துள்ளார்.   

ராமநாதபுரம் அருகே தெனனவனூர் பகுதி டி.கண்ணபுரம் கிராமத்தைச் சேர்ந்த வாசுதேவன் மனைவி அனிதா (29). இவர் பிரசவத்துக்காக கடந்த 20 ஆம் தேதி ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மறுநாள் 21 ஆம் தேதி, இவருக்கு அறுவைச் சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது.  அதையடுத்து, கடந்த 25 ஆம் தேதி இரவு அனிதாவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அப்போது, மருத்துவமனையில் மருத்துவர்கள் யாரும் இல்லாததால், அனிதா உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக வாசுதேவன் கூறியதாவது: 

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அனிதாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், பலமுறை மருத்துவரை அழைத்தபோதும் யாரும் பணியில் இல்லை. தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கவும் மறுத்துவிட்டனர்.    இதன் காரணமாக, என் மனைவி உயிரிழந்துவிட்டார். சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளேன். கோட்டாட்சியர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

இது குறித்து, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜனிடம் கேட்டபோது அவர் கூறுகையில், அரசு மருத்துவமனையில் பெண் உயிரிழந்திருப்பது தொடர்பாக விசாரணைக் குழு அமைக்கப்படும். விசாரணையில் சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

Wednesday, October 26, 2016

தேவர் ஜயந்தி விழாவை முன்னிட்டு வாகனங்களுக்கான வழித்தடங்கள் அறிவிப்பு!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அக். 30ஆம் தேதி நடைபெறவுள்ள தேவர் ஜயந்தி விழாவுக்கு வெளிமாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்களுக்கான வழித்தடங்களை மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 

திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் சிவகங்கை, மானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன் வந்து, அதே வழியில் திரும்பிச் செல்ல வேண்டும்.  சென்னை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் திருச்சி, மதுரைமானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன் வந்து, அதே வழியாக திரும்பிச் செல்ல வேண்டும்.
 


கோவை, திருப்பூர், நீலகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் திண்டுக்கல், மதுரை, மானாமதுரை வழியாக பசும்பொன் வந்து, அதே வழியாக திரும்பிச் செல்ல வேண்டும்.  மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் மானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன் வந்து, செல்ல வேண்டும்.  தூத்துக்குடி, திருநெல்வேலி,கன்னியாகுமரி மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் அருப்புக்கோட்டை, எம்.ரெட்டியபட்டி, மண்டபசாலை, க.விலக்கு, கண்ணார்பட்டி, கமுதி வழியாக பசும்பொன் வந்து, அதே வழியாக திரும்பிச் செல்ல வேண்டும். அல்லது தூத்துக்குடி, சூரங்குடி,சாயல்குடி, கோவிலாங்குளம், கமுதி வழியாக பசும்பொன் வந்து அதே வழியாகவும் திரும்பிச் செல்லலாம்.

விருதுநகர் மாவட்டத்திலிருந்து வரும் வாகனங்கள் அருப்புக்கோட்டை,எம்.ரெட்டியபட்டி,க.விலக்கு, கண்ணார்பட்டி, கமுதி வழியாக பசும்பொன் வந்து அதே வழியாகவே திரும்பச் செல்ல வேண்டும்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அதிகாரிகள் பொறுப்பேற்றுக்கொண்டனர்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டதாக ஆட்சியர் எஸ்.நடராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

ஊரக உள்ளாட்சி மற்றும் நகர்ப்பகுதி உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் அக். 24ஆம் தேதியுடன் முடிவடைந்ததால் உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அலுவலர்களை நியமித்து அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்கள் செவ்வாய்க்கிழமை காலை பொறுப்பேற்றுக் கொண்டனர்.

மாவட்ட ஊராட்சியின் தனி அலுவலராக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் எஸ்.எஸ்.தனபதி பொறுப்பேற்றுக் கொண்டார். ஊராட்சி ஒன்றியங்களை பொறுத்த மட்டில் ராமநாதபுரம், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, போகலூர், நயினார்கோயில் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களின் தனி அலுவலராக உதவி இயக்குநராக(ஊராட்சிகள்) பணிபுரிந்து வரும் ஆ.செல்லத்துரையும், மண்டபம்,திருப்புல்லாணி,பரமக்குடி, கமுதி, கடலாடி மற்றும் முதுகுளத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களின் தனி அலுவலராக உதவி இயக்குநராக (தணிக்கை) பணிபுரிந்து வரும் அ.பொ.பரமசிவமும் பொறுப்பேற்றுக் கொண்டனர். கிராம ஊராட்சிகளின் தனி அலுவலராக அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களின் வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சிகள்) பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இதே போன்று பேரூராட்சி நிர்வாகத்தை பொறுத்தமட்டில் கமுதி பேரூராட்சியின் தனி அலுவலராக சிவகங்கை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் பி.பாலமுருகனும்

சாயல்குடி,அபிராமம்,மண்டபம்,ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை,தொண்டி ஆகிய பேரூராட்சிகளின் தனி அலுவலராக கமுதி பேரூராட்சியின் செயல் அலுவலரான ச.குமரேசனும் பொறுப்பேற்றுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளிலும் அந்தந்த நகராட்சிகளின் ஆணையாளர்கள் அதன் தனி அலுவலர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.நியமனம் செய்யப்பட்டுள்ள தனி அலுவலர்கள் அனைவரும் அவர்களது பதவிக்கான பணிகளை செய்து வருவதுடன் தனி அலுவலருக்கான பணிகளையும் கூடுதலாக பார்த்து வர வேண்டும் எனவும் அரசின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)