Thursday, September 8, 2016
ராமநாதபுரம் ரெயில் நிலையத்தில் புறக்காவல் நிலையம், 24 CCTV கேமராக்கள் பொருத்தப்படுகிறது!!
ராமநாதபுரம் ரெயில் நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பு
வசதிக்காக புதிய புறக்காவல் நிலையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, 24 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கு தகுதியான இடம் தேர்வு
செய்யப்பட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி
படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து ரெயில் நிலையங்களின் பாதுகாப்பிற்கு அதிக
முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. கோர்ட்டு உத்தரவின்படி பல்வேறு பாதுகாப்பு
அம்சங்கள் ரெயில் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு பயணிகள் மற்றும் ரெயில்வே
உடைமைகளுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதேபோல மாவட்ட தலைநகரான ராமநாதபுரம் ரெயில் நிலையத்தில்
ரெயில்வே பாதுகாப்பு வசதிகள் இல்லாத காரணத்தினால் கடந்த ஆண்டு 4 நகை பறிப்பு வழக்குகளும், இந்த ஆண்டு இது வரை 3 நகை பறிப்பு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு அம்சத்தில்
பலவீனமாக உள்ள ராமநாதபுரம் ரெயில் நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும்
என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வந்தது.
இந்தநிலையில் ராமநாதபுரம் ரெயில் நிலையத்தின்
முக்கியத்துவம் கருதியும்,
பயணிகளின் பாதுகாப்பு கருதியும் இங்கு புறக்காவல் நிலையம்
அமைக்க ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளித்தது. இதற்காக கூடல்நகர் பகுதியில்
அமைந்துள்ள புறக்காவல் நிலையம் மூடப்பட்டு, அங்கு பணியாற்றிய
ரெயில்வே பாதுகாப்பு படையினர் ராமநாதபுரம் புறக்காவல் நிலையத்திற்கு
மாற்றப்பட்டுள்ளனர்.
இதன்படி ராமநாதபுரம் ரெயில் நிலையத்தில் கடந்த 1–ந்தேதி முதல் தற்காலிக கட்டிடத்தில் புறக்காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது.
பரமக்குடியில் இருந்து உச்சிப்புளி வரையிலான பகுதிகள் இந்த புறக்காவல் நிலையத்தின்
கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன. இதற்காக சப்–இன்ஸ்பெக்டர் சப்தார் இப்ராகிம் தலைமையில் 4 தலைமை காவலர்கள்,
5 காவலர்கள் என மொத்தம் 10 பேர் இந்த
புறக்காவல் நிலையத்தில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரெயில்நிலைய உடைமைகள் பாதுகாப்பு மற்றும் பயணிகள்
பாதுகாப்பு,
தினசரி சோதனை, இரவு நேர ரோந்து உள்ளிட்ட
அனைத்து பாதுகாப்பு பணிகளையும் இந்த ரெயில்வே பாதுகாப்பு படையினர் மேற்கொண்டு
வருகின்றனர்.
இதுதவிர, ராமநாதபுரம் ரெயில்
நிலையத்தில் கண்காணிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ளும் வகையில் 24 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு
கேமராக்கள் அனைத்தும் புறக்காவல் நிலையத்தில் கட்டுப்பாட்டு அறை அமைத்து 24 மணி நேரமும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செய்தி: தினதந்தி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment