(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, August 29, 2016

ரேஷன்பொருட்கள் வாங்குவதற்கு ஜனவரி மாதம் முதல் ஸ்மார்ட் கார்டு!!

No comments :


தமிழக அரசின் முதன்மை செயலாளரும், குடிமைப்பொருள் வழங்கல் ஆணையர் கோபாலகிருஷ்ணன் ராமநாதபுரத்திற்கு வருகைதந்து பல்வேறு ரேஷன்கடைகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். இதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:


தமிழகத்தில் 2 கோடிக்கும் அதிகமான ரேஷன்கார்டுகள் உள்ளன. இவர்களுக்காக மாநிலம் முழுவதும் 35,000 ரேஷன்கடைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. தற்போது ரேஷன்கடையில் அத்தியாவசிய பொருட்கள் வினியோகத்தில் ஒளிவுமறைவற்ற வெளிப்படையான தன்மையை ஏற்படுத்தும் வகையில் அனைத்து செயல்பாடுகளும் கையடக்க கருவி மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுஉள்ளது.

இந்த கருவியில் அத்தியாவசிய பொருட்கள் இருப்பு, சப்ளை விவரங்கள் போன்ற அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்படுவதோடு, நுகர்வோரின் ஆதார் கார்டு அடிப்படையில் விவரங்கள், செல்போன் எண் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் பொருட்கள் வாங்கியதும் சம்பந்தப்பட்ட நுகர்வோரின் செல்போனிற்கு தகவல் சென்றுவிடும். மேலும், அதிகாரிகள் முதல் நுகர்வோர் வரை இணையதளத்தில் சென்று எந்தவொரு கடையின் விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

நுகர்வோருக்கு சிறந்த சேவையளிக்கும் இந்த புதிய முறை இதுவரை 20,000 கடைகளில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு உள்ளன. மீதம் உள்ள கடைகளில் இன்னும் ஒரு மாதத்தில் செயல்படுத்தப்படும். ரேஷன்கடைகளில் உள்ள கையடக்க கருவிகளில் நுகர்வோரின் ஆதார்எண் உள்ளிட்ட விவரங்கள் சேர்க்கும் பணிகள் வருகிற டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஆதார் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கும் பொருட்கள் சப்ளை செய்யப்படும். ஆதார் பெற்றவுடன் கையடக்க கருவில் விவரங்கள் சேர்க்கப்படும்.



தற்போது உள்ள ரேஷன்கார்டுகள் காலவரம்பு வருகிற டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இதன்பின்னர் உள்தாள் இணைப்பதோ, புதிய கார்டு வழங்குவதோ கண்டிப்பாக இருக்காது. ஏனெனில் ஏ.டி.எம். கார்டு போன்ற அளவில் ஸ்மார்ட் கார்டு ஜனவரி மாதம் முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்தமாக இந்த திட்டத்திற்காக சுமார் ரூ.400 கோடி செலவிடப்படுகிறது. இந்த ஸ்மார்ட் கார்டு முறை கொண்டுவந்ததும் நுகர்வோரின் சேவை மிகவும் எளிதாகி விடுவதோடு, போலி கார்டுகள் புழக்கம் உள்ளிட்டவைகள் முழுமையாக தடுக்கப்படும்.

தமிழகத்தில் 4 லட்சத்து 50 ஆயிரம் கார்டுகள் போலியானவையாக கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளன. 11 லட்சம் புதிய கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் மாதம் ஒன்றுக்கு 394 லட்சம் டன் அரிசியும், 36,500 டன் சீனியும், 16,300 டன் கோதுமையும், 13,500 டன் துவரம்பருப்பும், 7,000 டன் உளுந்தும், 25,000 கிலோ லிட்டர் மண்எண்ணெய்யும், ஒரு கோடியே 50 லட்சம் பாக்கெட்டுகள் பாமாயிலும் சப்ளை செய்யப்படுகிறது.

நுகர்வோருக்கு சிறப்பான சேவையை மேம்படுத்தும் வகையில் 13 இடங்களில் மொபைல் ரேஷன்கடை செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு ரேஷன்பொருட்கள் வழங்குவதற்காக மாநில அரசு மட்டும் ஆண்டுக்கு ரூ.1,300 கோடி மானியமாக வழங்குகிறது. இதுதவிர மத்திய அரசும் மானியம் வழங்குகிறது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட கலெக்டர் நடராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் அலிஅக்பர் ஆகியோர் உடன் இருந்தனர்.


செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment