(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, August 21, 2016

மாநில அளவில் மூன்றாவது சிறந்த நகராட்சியாக ராமநாதபுரம்!!

No comments :

தமிழக அளவில் சிறந்த நகராட்சியாக ராமநாதபுரம் 3 ஆவது இடத்துக்கு தேர்வு செய்யப்பட்டு, அதற்கான விருதை தமிழக முதல்வர் ஜெயலலிதா வழங்கி கௌரவித்திருப்பதாக, அதன் நகர்மன்றத் தலைவர் எஸ்.கே.ஜி.எஸ். சந்தானலெட்சுமி  தெரிவித்துள்ளார்.

இது குறித்து, ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை அவர் மேலும் கூறியதாவது: ராமநாதபுரம் நகராட்சியின் உள்கட்டமைப்பு, வரி வசூல், பாதாளச் சாக்கடைத் திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றியது உள்ளிட்ட பல்வேறு சாதனைகளுக்காக, தமிழக முதல்வர் ஜெயலலிதா சுதந்திர தின விழாவில் விருது வழங்கியுள்ளார். இந்த விருதினை, ராமநாதபுரம் நகர் மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

விருது வழங்கி கௌரவித்த முதல்வருக்கும், ஒத்துழைப்பு நல்கியவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


ராமநாதபுரம் நகரில் தெருவிளக்குகளை பணியாள்கள் மூலம் பராமரித்ததில், ஆண்டுக்கு ரூ. 44 லட்சம் வரை செலவானது. இதை, தனியார் வசம் விடப்பட்ட பின்னர் ஆண்டுக்கு ரூ. 22 லட்சமே செலவாகிறது.

ராமநாதபுரம் நகரில் உள்ள ஊரணிகளான கிடாவெட்டி, லெட்சுமிபுரம், சிதம்பரம் பிள்ளை, சோத்தூரணி உள்ளிட்ட பல ஊரணிகள் தூர்வாரப்பட்டதுடன், அப்பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளையும் அகற்றி, கம்பி வேலியும் அமைத்துள்ளோம்.

நகரில் பாதாளச் சாக்கடைத் திட்டம் 9 வார்டுகளில் முழுமையடைந்து, மொத்தமுள்ள 12 ஆயிரம் இணைப்புகளில் 7,300 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

நகராட்சியில் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்கும் வகையிலும், நகராட்சிக்குத் தேவையான நிதியை இட்டுவைப்புகள் மூலம் சேகரித்தும் வருவாயை உயர்த்தியிருக்கிறோம். நகராட்சிக்கு இருந்த வங்கிக் கடன்கள் பலவற்றையும் அடைத்துள்ளோம். பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்காக பெறப்பட்ட ரூ. 34 கோடியில், ரூ12 கோடி மட்டுமே பாக்கி உள்ளது.

நகரில் மீன்மார்க்கெட் ரூ. 1.10 கோடியில் அமைக்க நிதி ஒதுக்குமாறு அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இத்தொகை கிடைத்தவுடன் சந்தைக்கடைப் பகுதியில் புதிதாக மீன்மார்க்கெட் அமைக்கப்படும். ரூ.32 லட்சம் மதிப்பில் ஒரே நேரத்தில் 20 டன் எடையுள்ள குப்பைகளை நசுக்கி அள்ளி எடுத்துச்செல்லும் வகையிலான வாகனமும் கேட்டுள்ளோம்.

தற்போதுள்ள நிலையில், நகராட்சியின் வருமானமும், செலவும் சமமாக இருக்கிறது. நகராட்சியின் சாதனைகள் மேலும் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment