(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, August 11, 2016

கலெக்டர் நடராஜன் தலைமையில் உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடுகள் ஆலோசனை கூட்டம்!!

No comments :
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடுகள் ஆலோசனை கூட்டம் கலெக்டர் நடராஜன் தலைமையில் நடந்தது.

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் நடராஜன் தலைமையில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான தேர்தல் முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான முதல் கட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் நடராஜன் கூறியதாவது:ராமநாதபுரம் மாவட்டத்தில் 429 ஊராட்சிகள், 11 ஊராட்சி ஒன்றியங்கள், 7 பேரூராட்சிகள், 4 நகராட்சிகள் உள்ளன. உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களது பதவிக்காலம் வருகிற அக்டோபர் மாதத்துடன் முடிவடைவதையொட்டி, உள்ளாட்சி அமைப்புகளுக்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்காக உள்ளாட்சி தேர்தல் வருகிற அக்டோபர் மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதனையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் மூலம் வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவிற்காக நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 67 இடங்களில் 216 வாக்குச்சாவடி மையங்களும், பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 42 இடங்களில் 110 வாக்குச்சாவடி மையங்களும், ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 951 இடங்களில் 1,778 வாக்குச்சாவடி மையங்கள் என மொத்தம் 1,060 இடங்களில் 2,104 வாக்குச்சாவடி மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

தேர்வு செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் காவல்துறை அலுவலர்கள் மற்றும் ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து ஆய்வு செய்து பதற்றமான வாக்குச்சாவடி மையங்களை கண்டறிவதோடு, அந்தவாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இதுதவிர தேர்தல் பணிகளில் ஈடுபடுத்துவதற்கு தேர்தல் அலுவலர்களை நியமிப்பதற்காக துறை வாரியாக அலுவலர்கள் பட்டியலை சமர்ப்பிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அலி அக்பர், பரமக்குடி சப்கலெக்டர் சமீரன், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ராம்பிரதீபன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் காமாட்சி கணேசன், செல்லத்துரை, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கணபதி, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் பாலமுருகன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சேக்முகமது உள்பட தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், காவல்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment