முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, May 31, 2016

வேலையில்லா இளைஞர்கள் சுயதொழில் துவங்க விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் நடராஜன்!!

No comments :
படித்த வேலையில்லா இளைஞர்கள் சுயதொழில் துவங்க விண்ணப்பிக்கலாம், என கலெக்டர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது:

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்கவும், அதன் மூலம் பலருக்கு வேலை வழங்கவும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது.
இதில் உற்பத்தி தொடர்பான தொழில் துவங்க அதிகபட்சம் ரூ.5 லட்சம்,
சேவை தொடர்பான தொழில் துவங்க ரூ.3 லட்சம்,
வியாபாரம் துவங்க ரூ.1 லட்சம் வங்கி கடன் வழங்கப்படுகிறது.


இத்திட்டத்தில் பயன்பெற குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும்,18 வயது நிறைவடைந்தவராகவும் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 35 வயதாகும். சிறப்பு பிரிவினரான தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்., பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் 45 வயதுவரை விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இத்திட்டத்தில் கடன் பெற ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில் மையத்தில் இலவசமாக வழங்கப்படும், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய இணைப்புகளுடன் இரண்டு நகல்களை மாவட்ட தொழில் மையத்தில் ஒப்படைக்க வேண்டும். தகுதி அடிப்படையில் வங்கி கடன் பெற பரிந்துரை செய்யப்படும்.

திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் மானியமாக வழங்கப்படும். கடன் அனுமதி பெற்றவுடன் ஒருவாரம் கட்டாயம் மேலாண்மை பயிற்சியளிக்கப்படும். பயிற்சிக்கு பின் திட்ட முதலீட்டில் 10 சதவீத தொகையினை தனது பங்கு மூலதனமாக வங்கியில் செலுத்த வேண்டும்.


மீதம் உள்ள 90 சதவீத தொகை கடனுதவியாக பெறலாம். சிறப்பு பிரிவினர் 5 சதவீத தொகை முதலீடு செய்ய வேண்டும். தொழில் ஆர்வமுள்ள இளைஞர்கள் உரிய சான்றுகளுடன் மாவட்ட தொழில் மையத்தை அணுகி விண்ணப்பிக்கலாம்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமேஸ்வரம் - மதுரை ரயிலில் கூடுதல் பெட்டிகள்!!

No comments :
ராமேசுவரத்திலிருந்து மதுரை செல்லும் பயணிகள் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டிருப்பதாக ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் அ.அன்வர்ராஜா தெரிவித்துள்ளார்.

திங்கள்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ராமேசுவரம்- மதுரை பயணிகள் ரயிலில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. பயணிகளும், குழந்தைகளும், பெண்களும், முதியவர்களும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே இந்த ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் செந்தில்குமார், மதுரை சந்திப்பு ரயில் நிலைய மேலாளர் பிரகாசம் ஆகியோரிடம் கேட்டுக்கொண்டேன்.



எனது கோரிக்கையினை ஏற்று ராமேசுவரத்திலிருந்து காலை 5.30க்கு மதுரைக்கு புறப்படும்பயணிகள் ரயிலிலும், மதுரையிலிருந்து மாலை 6.05 மணிக்கு புறப்படும் ராமேசுவரம் பயணிகள் ரயிலிலும் வியாழக்கிழமை முதல் கூடுதலாக ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

  
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

Saturday, May 28, 2016

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்!!

No comments :
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவி தொகை பெற தகுதியுடையவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் நடராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

9ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 10–ம் வகுப்பில் தோல்வியுற்றவருக்கு மாதம் ரூ.100ம், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.150ம், பிளஸ்–2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.200ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.300 வீதம் 3 ஆண்டிற்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்தொகை நேரடியாக மனுதாரர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.




இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்குமேல் காத்திருப்பவராக இருத்தல் வேண்டும். தொடர்ந்து பதிவினை புதுப்பித்து இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50,000 மிகாமல் இருக்க வேண்டும். அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு சென்று பயிலும் மாணவமாணவியருக்கு இந்த உதவித் தொகை வழங்கப்பட மாட்டாது. எனினும், தொலைதூரக்கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவர்கள் உதவித்தொகை பெறலாம்.

ஏற்கனவே உதவித்தொகை பெற்று வருபவர்கள் தொடர்ந்து 3 வருடம் வரை உதவித்தொகை பெற நாளது தேதி வரை வங்கிகளில் குறிப்புகள் இடப்பட்ட வங்கிக்கணக்கு புத்தக நகலுடன் சுயஉறுதி மொழி ஆவணத்தையும் பூர்த்தி செய்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். சுயஉறுதி மொழி ஆவணம் சமர்ப்பிக்காத பயனாளிகளுக்கு உதவித்தொகை நிறுத்தப்படும். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டுகள் நிறைவு பெற்றவர்கள் உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகள் வேறு எந்த ஒரு அலுவலகத்திலும் உதவித்தொகை பெறாதவராக இருக்க வேண்டும்.


எனவே தகுதியுடையவர்கள் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு அனைத்து கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பங்கள் அனைத்து வேலை நாட்களிலும் வருடம் முழுவதும் வழங்கப்படும். மேலும் இந்த உதவித்தொகை பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. உதவித்தொகை பெறுவதால் வேலைவாய்ப்பு பரிந்துரைத்தலுக்கு எவ்வித தடையும் ஏற்படாது. இந்த தகவலை கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.
  

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

Wednesday, May 25, 2016

மருத்துவ படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பம் விநியோகிக்கப்படும், ஜூன் 20ம் தேதி முதல் கலந்தாய்வு!!

No comments :
ருத்துவ படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பம் விநியோகிக்கப்படும் என்றும்முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 20ம் தேதி தொடங்கும் என்று மருத்துவ கல்வி இயக்குநர் விமலா தெரிவித்துள்ளார். 

இந்தாண்டு மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதைத் தொடர்ந்துமத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்துஇந்தாண்டு மட்டும் மாநில கல்வி வாரியத்தின் கீழ் பிளஸ் முடித்த மாணவர்களுக்குமாநில அரசு நடத்தி வரும் மருத்துவ கல்லூரிகள்பல் மருத்துவ கல்லூரிகளில் பொது நுழைவுத்தேர்வு இன்றி மாணவர் சேர்க்கையை நடத்த முடிவு செய்தது. இந்த அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அந்த அவசர சட்டம் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.




இதையடுத்து குடியரசுத் தலைவர் பிரணாப்பை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா சந்தித்து விளக்கம் அளித்தார். இதைத் தொடர்ந்து, அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் ஒப்புதல் வழங்கினார். இதனால், தமிழகத்தில் இந்தாண்டு மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படாமல் மதிப் பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

இந்த நிலையில், மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பம்  நாளை முதல் ஜூன் 6ம் தேதி வரை வழங்கப்படும் என்றும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூன் 7ம் தேதி மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம் என்றும், ஆன்லைனில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் மருத்துவக் கல்வி இயக்குநர் விமலா தெரிவித்தார்.

ஜூன் 17ம் தேதி மருத்துவப் படிப்புக்கான தர வரிசை பட்டியல் வெளியிடப்படும் என்றும், முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 20ம் தேதியும், 2ம் கட்ட கலந்தாய்வு ஜூலை 18ம் தேதியும் தொடங்கும் என்றும் கூறினார்.

மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு அடிப்படையில் நடைபெறும் என்றும், நுழைவுத் தேர்வு தொடர்பாக மாணவர்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் விமலா கேட்டுக் கொண்டார்.

செய்தி: தினசரிகள்



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

Tuesday, May 24, 2016

எதிர்க்கட்சித் தலைவராகிறார் மு.க.ஸ்டாலின்!!

No comments :
ட்டசபை திமுக குழு தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராகிறார் மு.க.ஸ்டாலின்.

சட்டசபை தேர்தலில் திமுக 89 இடங்களில் வென்றுள்ள பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.

சட்டசபையின் முதலாவது கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ளது. இந்த நிலையில் இன்று சென்னையில் திமுக செயற்குழு மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டசபை குழு தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுக சட்டசபை குழுவின் துணைத் தலைவராக துரைமுருகன்; கொறடாவாக சக்கரபாணி; துணை கொறடாவாக கு. பிச்சாண்டி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


திமுக குழுவின் தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் அவரே சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக செயல்படுவார்.


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்!!

No comments :
தேர்தல் நடத்தை விதிகள் முடிந்துவிட்டதால், பொதுமக்கள் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.



தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் மார்ச் 4ம் தேதி முதல் மே 19ம் தேதி வரை அமலில் இருந்தது. இதனால் புதிய குடும்ப அட்டை மனுக்கள், நகல் குடும்ப அட்டை மனுக்கள், அச்சடித்து பெறப்பட்ட புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டைகள், ரேஷன் கார்டில் பெயர் நீக்கல், சேர்த்தல நடைபெறாது என பொதுவிநியோக திட்ட உணவுப்பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் அறிவித்திருந்தார்.  

தற்போது தேர்தல் முடிந்துவிட்டதால் நடத்தை விதிமுறைகள் தளர்த்தப்பட்டு 20ம் தேதி முதல் புதிய குடும்ப அட்டைகள், விண்ணப்பங்கள் மற்றும் பெயர்நீக்கம், பெயர் திருத்தம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் வட்ட வழங்கல் பிரிவில் புதிய ரேஷன் கார்டுகள் பெறுவதற்கும், குடும்ப அட்டை தொடர்பான பணிகளுக்கும் விண்ணப்பங்கள் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி: திரு. தாஹிர், கீழக்கரை

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ஏர்வாடியில் இலவச கழிவறை கட்ட பொதுமக்கள் கோரிக்கை!!

No comments :
ஏர்வாடியில் இலவச கழிவறை கட்ட வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஏர்வாடியில் சுல்தான் செய்யது இபுராகீம் பாதுசா நாயகம் அடக்கஸ்தலம் தர்ஹா உள்ளது. இதனால்இங்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளிலிருந்து யாத்ரீகர்கள் சாதிமதஇன வேறுபாடின்றி வந்து செல்கின்றனர். 



இவர்களுக்கு ஏர்வாடி தர்கா எதிரே இலவச கழிவறை மற்றும் குளியலறை இருந்து வந்தது. தவிர்க்க முடியாத சில காரணங்களைக்கூறி இந்த கழிவறை இடிக்கப்பட்டது. தற்போது ஏர்வாடியில் இலவச கழிவறை மற்றும் குளியலறை இல்லாததால் தர்காவிற்கு வரும் யாத்ரீகர்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர்.

இந்த நிலையைத் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொண்ட லாட்ஜ் உரிமையாளர்கள் அடிப்படை தேவைகளை மட்டும் நிறைவேற்ற கட்டணம் வசூலிக்காமல் தங்குவதற்கான கட்டணமாக  வசூலிக்கின்றனர். வசதியின்மையாலும், கட்டணம் அதிகம் என்பதாலும் பஸ், வேன் ஆகியவற்றில் கூட்டமாக வரும் யாத்ரீகர்கள், சாலையோரங்களிலும் தர்கா அருகிலும் இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர். இதனால் துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

எனவே, கடந்த பல ஆண்டுகளாக  ஏர்வாடி தர்கா எதிரே மக்களுக்கு மிகவும் வசதியாக இருந்த இலவச கழிவறை மற்றும் குளியலறையை மீண்டும் கட்ட வேண்டும் என யாத்ரீகர்கள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 


செய்தி: தினகரன்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

Monday, May 23, 2016

தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆறாவது முறையாக பதவியேற்றார் செல்வி.ஜெயலலிதார், அதிரடி அறிவிப்புகளுடன் பணியை துவங்கினார்!!

No comments :
தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆறாவது முறையாக இன்று (23.5.2016) பதவியேற்றுக்கொண்ட ஜெயலலிதா  சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள தலைமைச்செயலகத்தில் உள்ள முதலமைச்சர் அறைக்கு வருகை தந்து தமது பணியைத் தொடங்கினார்.


முதலமைச்சர் ஜெயலலிதா தனது முதல் பணியாக அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் முக்கியத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து அதற்குரிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.




முதலமைச்சர் ஜெயலலிதா ஆணை பிறப்பித்து முதல் கையொப்பமிட்ட கோப்புகள் பின்வருமாறு...

1)
 வேளாண் பெருமக்களின் நலன் காக்கும் வகையில், கூட்டுறவு வங்கிகளுக்கு சிறு, குறு விவசாயிகள் செலுத்தவேண்டிய பயிர்க்கடன், நடுத்தர காலக்கடன் மற்றும் நீண்ட காலக்கடன் ஆகிய அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்னும் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கூட்டுறவு வங்கிகளிடமிருந்து 31.3.2016 வரை சிறு, குறு விவசாயிகளால் பெறப்பட்ட பயிர்க்கடன், நடுத்தரகாலக் கடன் மற்றும் நீண்டகாலக் கடன் ஆகிய அனைத்தையும் தள்ளுபடி செய்து உத்தரவிடும் கோப்பில் முதலமைச்சர் ஜெயலலிதா கையொப்பமிட்டார். இதன் காரணமாக அரசுக்கு 5780 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.

2)
 மின்சாரம் அனைவருக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்பதால் தற்போதைய கணக்கீட்டு முறைப்படி 100 யூனிட் மின்சாரம் கட்டணம் ஏதுமில்லாமல் வீடுகளுக்கு வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அதற்கான கோப்பில் முதலமைச்சர் கையெழுத்திட்டார். இதன் காரணமாக அரசு ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக 1607 கோடி ரூபாய் மின் வாரியத்திற்கு மானியமாக வழங்கும். இந்தச் சலுகை 23.5.2016 முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

3)
 2011ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின்படி இளநிலைப்பட்டம் அல்லது டிப்ளமோ பட்டயம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித்தொகையாக 50000 ரூபாயும் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கமும் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. படித்த ஏழைப்பெண்களுக்கு திருமண நிதி உதவியாக 25000 ரூபாய் நிதி உதவியுடன் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது.

தற்போதைய தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியின்படி அனைத்து திருமண நிதி உதவி திட்டங்களின் கீழ் வழங்கப்படும் நிதி உதவியுடன் திருமாங்கல்யத்திற்கென வழங்கப்படும் தங்கம் 4 கிராம் என்பதிலிருந்து ஒரு சவரன் அதாவது 8 கிராம் என உயர்த்தி வழங்கும் கோப்பில் முதலமைச்சர் கையொப்பமிட்டார்.

4)
 தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின்படி கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது கட்டணமில்லாமல் வழங்கப்படும் மின்சாரத்தை 200 யூனிட்கள் எனவும் விசைத்தறிக்கு வழங்கப்படும் கட்டணமில்லா மின்சாரத்தை 750 யூனிட்டுகளாக உயர்த்தியும் வழங்கும் கோப்பில் முதலமைச்சர் கையொப்பமிட்டார்.

5)
 மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு என்ற நிலை எய்தப்படும் என்றும், அதனை நிறைவேற்றும் வகையில் முதலில் சில்லறை மதுபானக் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படும் என்றும், கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்றும், பின்னர் சில்லறை மதுபானக் கடைகளுடன் இணைந்த பார்கள் மூடப்படும் என்றும் குடிப்பழக்கத்திற்கு உள்ளாகி உள்ளோரை மீட்பதற்கான மீட்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும் என்றும், இவை அனைத்தும் செயல்படுத்தப்பட்டு படிப்படியாக பூரண மதுவிலக்கு என்னும் இலட்சியம் அடையப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுபானக்கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த பார்கள் இதுவரை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கிவரும் நிலையில் 24.5.2016 முதல் சில்லறை விற்பனை மதுபானக்கடைகள் மற்றும் பார்கள் நண்பகல் 12 மணியிலிருந்து இரவு 10 மணி வரை இயங்கும் என்ற உத்தரவு, மற்றும் 500 டாஸ்மாக் சில்லறை மதுபானக்கடைகள் மூடப்படும் என்ற உத்தரவு, ஆகியவற்றுக்கான கோப்பில் முதலமைச்சர் கையொப்பமிட்டார்.


மக்களுக்கு அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி அதன் மூலம் மக்களுக்கு தாம் நன்றி செலுத்த உள்ளதாக முதலமைச்சர் தெரிவித்ததை உறுதிப்படுத்தும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றவுடன் மேற்காணும் திட்டங்களை செயல்படுத்த ஆணையிட்டு அதற்கான கோப்புகளில் முதலமைச்சர் கையொப்பமிட்டார்.

இந்த தகவல் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நன்றி - விகடன்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

Sunday, May 22, 2016

திமுக கூட்டணிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி - ம.ம.க தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா!!

No comments :

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிகார பலம், பண பலம், ஓரவஞ்சனையுடன் செயல்பட்ட தேர்தல் ஆணையத்தின் துணையுடன் தேர்தலை சந்தித்த அதிமுகவை விட 1.2 சதவீதம் வாக்குகள் மட்டுமே குறைவாகப் பெற்று திமுக கூட்டணி சாதனைப் படைத்துள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி நிலைகூட இல்லாத திமுக இன்று மிகப்பெரும் எண்ணிக்கையில் எதிர்க்கட்சியாக உருவாகி இருக்கின்றது. இந்த நிலையை உருவாக்கிட திமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


சிறப்பான கூட்டணியை அமைத்து அதனை சீரிய முறையில வழிநடத்திய திமுகவின் தலைவர் கலைஞர் அவர்களுக்கும், தனது கடும் உழைப்பால் களத்தை வலுப்படுத்திய திமுக பொருளாளர் சகோதரர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 100 சதவீதம் வாக்கு எண்ணிக்கையை அடைவோம் என்ற நல்ல முழக்கத்துடன் செயல்பட்டாலும் தேர்தலில் வாக்களிப்பதற்கு பணம் கொடுத்து ஜனநாயகப் படுகொலை நடப்பதை தேர்தல் ஆணையத்தால் தடுக்க முடியாதது வேதனைக்குரியது.

நாங்கள் ஆற்றும் பல்வேறு மக்கள் சேவைப் பணிகளில் ஒன்றுதான் அரசியல் பணி. இந்தத் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட்ட நான்கு தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் எமது சேவை தன்னலமின்றி அனைத்து மக்களுக்கும் வீரியத்துடன் அயராது தொடரும். மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட்ட நான்கு தொகுதிகளிலும் எவ்வித ஆசாபாசங்களுக்கும் இடம் கொடுக்காமல் எமது வேட்பாளர்களுக்கு வாக்களித்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆறாவது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்கும் செல்வி ஜெயலலிதாவிற்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகளை குறிப்பாக மதுவிலக்கு தொடர்பான வாக்குறுதியை நிறைவேற்ற அவர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்,
மனிதநேய மக்கள் கட்சி


பகிர்வு: திரு. அஸ்கர் அலி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

தொடரும் வரலாறு - இராமநாதபுரத்தில் வெற்றி பெறும் வேட்பாளரின் கட்சியே தமிழக்த்தில் ஆட்சி அமைக்கும்!!

No comments :
ராமநாதபுரத்தில் போட்டியிடுபவர்களில் எந்தக் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெறுகிறாரோ அதே கட்சி தான் ஆட்சி அமைக்கும் என்ற கடந்தகால வரலாறு மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் என்றாலே தமிழக அரசியல் தலைவர்களுக்கு ராமநாதபுரம் மாவட்டமும், ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியும் பற்றிய நினைவுகளே மேலோங்கி நிற்கும். ஏனெனில், நடந்து முடிந்த எல்லாத் தேர்தல்களிலும் ராமநாதபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற கட்சியே தமிழகத்தில் ஆட்சி அமைத்து வந்துள்ளது. பொதுவாக ராமநாதபுரம் தொகுதி மக்கள் தேர்வு செய்யும் பேரவை உறுப்பினர் எதிர்க்கட்சி வரிசையில் இருந்ததே இல்லை.



ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி (தனி), திருவாடானை, முதுகுளத்தூர் மற்றும் ராமநாதபுரம் என 4 தொகுதிகள் உள்ளன. இதில் கடந்த 1952,1957,1962 ஆகிய பொதுத் தேர்தல்களில் ராமநாதபுரம் மன்னரான ராஜா சண்முக ராஜேசுவர நாகநாத சேதுபதி காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த நேரத்தில் காங்கிரஸ் தான் ஆட்சியைக் கைப்பற்றியது.

1967 இல் தங்கப்பன் திமுக சார்பில் வெற்றி பெற்ற போது திமுக ஆட்சி அமைத்தது. 1971 இல் திமுக வேட்பாளர் எம்.எஸ்.கே. சத்தியேந்திரன் வெற்றி பெற்றார். இதன் பின்பு 1977,1980,1984 ஆகிய தேர்தல்களில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ராமசாமி 3 முறை வெற்றி பெற்றார். இதனையடுத்து திமுக வேட்பாளர் எம்.எஸ்.கே.ராஜேந்திரன் வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் தென்னவனும், 1996 இல் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ரகுமான்கானும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இவர்கள் வெற்றி பெற்ற அனைத்துக் காலங்களிலும் அந்தந்த கட்சியே ஆட்சி அமைத்திருப்பதை காண முடியும். கடந்த 2001 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.பி.யுமான அ.அன்வர்ராஜா வெற்றி பெற்ற போது அதிமுக ஆட்சி அமைத்தது.

திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கே.ஹசன்அலி 2006 ஆம் ஆண்டு வெற்றி பெற்ற போது கருணாநிதி முதல்வராக இருந்தார்.

கடந்த 2011 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியாக சேர்ந்து போட்டியிட்ட மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா வெற்றி பெற்ற போது முதல்வராக ஜெயலலிதாவே ஆட்சி அமைத்தார். இத்தேர்தலில் அதிமுகவின் மருத்துவ அணியின் மாநில துணைச் செயலாளரான டாக்டர்.முரு.மணிகண்டன் 33222 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். இப்போதும் அதிமுகவே ஆட்சி அமைத்து ஜெயலலிதா மீண்டும் முதல்வராகிறார்.

இவ்வாறாக ஒவ்வொரு தேர்தல்களிலும் ராமநாதபுரம் தொகுதி மக்கள் தேர்ந்தெடுக்கும் வேட்பாளரின் கட்சியோ அல்லது கூட்டணி கட்சியினர் சார்ந்திருக்கும் ஆட்சியோ அமைந்துள்ளது என்பது வரலாற்று உண்மைகளாகும்.

எனவே ராமநாதபுரம் தொகுதி மக்களின் தீர்ப்பே தமிழக மக்களின் தீர்ப்பு என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

செய்தி: தினமணி



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

Thursday, May 19, 2016

ராமநாதபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மணிகண்டன் வெற்றி!!

No comments :
ராமநாதபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மணிகண்டன் மமக வேட்பாளர் ஜவாஹிருல்லாவை விட 33,222 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.




வாக்கு விபரம்:
மணிகண்டன் (அதிமுக) 89,365
ஜவாஹிருல்லா (மமக) 56,143
சிங்கை ஜின்னா (தேமுதிக) 16,353
துரைகண்ணன் (பாஜக) 15,029
களஞ்சியம் (நாம் தமிழர்) 4001

வாழ்த்துக்கள் எங்கள் பிரதிநிதியே!!!


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

Wednesday, May 18, 2016

தங்கச்சிமடம் நாட்டுப் படகு மீனவர்கள் 21 பேர் விடுதலை!!

No comments :
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா முயற்சியில் தங்கச்சிமடம் நாட்டுப் படகு மீனவர்கள் 21 பேர் விடுதலை

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா அலுவலகம் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனிலிருந்து கடந்த ஏப்ரல் 26 அன்று கடலுக்குச் சென்ற சேசு இருதயம்பொங்கலாண்டிசேவியர்ஆகிய மூவருக்குச் சொந்தமான நாட்டுப்படகுகளை தலைமன்னார் அருகே கைப்பற்றி அதிலிருந்து 21 தங்கச்சிமடம் மீனவர்களை சிறைப்பிடிக்கப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடந்த மே 11 அன்று தங்கச்சிமடம் மீனவர்கள் 21 பேரின் நீதிமன்றக்காவல் இரண்டாவது முறையாக மே 25 வரையிலும் நீட்டிக்கப்பட்டது. மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என அவர்களது குடும்பத்தினர் எதிர்பார்த்த நிலையில் காவல் நீட்டிக்கப்பட்டதாக தகவல் கிடைத்ததால் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களின் குடும்பத்தினர் திடிர் என கடந்த புதன்கிழமை மதியம் தங்கச்சிமடம் கடற்கரையில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தீக்குளிக்க முயன்ற மகிமை தாஸ் எனும் மீனவரை மற்ற மீனவர்கள் தடுத்து நிறுத்தினர். மேலும் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்தனர்.



இதனை தொடர்ந்து திமுக கூட்டணியின் சார்பில் ராமநாதபுரத்தில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் முனைவர் ஜவாஹிருல்லா போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களைச் சந்தித்து இலங்கைச் சிறையிலுள்ள தங்கச்சிமடம் பகுதி நாட்டுப் படகு மீனவர்கள் 21 பேரை விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்துவேன் என மீனவர்களை சமாதான படுத்தியதுடன், இலங்கையின் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமை தொடர்பு கொண்டு தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தினார்.

முதற்கட்டமாக அமைச்சர் ரவூப் ஹக்கீமின் உத்தரவின் பேரில் முன்னாள் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் முத்தலி பாவா பாரூக் வவுனியா சிறைச்சாலைக்கு நேரில் தங்கச்சிமடம் மீனவர்களுக்குத் தேவையான உடைகள் மற்றும் உணவு சார்ந்த அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. தொடர்ந்து அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பரிந்துரையின் அடிப்படையில் திங்கட்கிழமை 21 தங்கச்சிமடம் மீனவர் 21 பேர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.இன்று மாலை அவர்கள் ஊர் திரும்புவார்கள் என்று தெரிய வருகின்றது.

செய்தி: மனித நேய மக்கள் கட்சி அலுவலகம்

பகிர்வு: திரு. அஸ்கர் அலி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)