Sunday, March 20, 2016
திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் SDPI !!
திமுக- காங்கிரஸ் கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சியும் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை சென்னையில் இன்று சந்தித்து பேசுவார்த்தை நடத்திய பின் மமக தலைரான ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அதிகாரப்பூர்வமாக இதை அறிவித்தார்.
ஜவாஹிருல்லா தலைமையில் செயல்பட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கடந்த 2009-ம் ஆண்டு மனிதநேய மக்கள் கட்சியானது. அப்போது நடந்த லோக்சபா தேர்தலில் மமக தனித்து போட்டியிட்டது.
திமுகவுடன் கூட்டணி
ஆனால் பின்னர் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி, திமுகவின் கனிமொழிக்கு ஆதரவாக வாக்களித்தது. 2014-ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலிலும் திமுக கூட்டணியில் நீடித்தது. அக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டது. இதில் தோல்வியை தழுவியது.
மக்கள் நலக் கூட்டியக்கத்தில்…
தேர்தலுக்கு பிறகு திமுகவுடன் கூட்டணி இல்லை என்று மனித நேய மக்கள் கட்சி அறிவித்தது. அத்துடன் வைகோ, திருமாவளவன், இடதுசாரிகள் உருவாக்கிய மக்கள் நலக்கூட்டு இயக்கத்தில் மமக இணைந்து செயல்பட்டு வந்தது. பின்னர் மக்கள் நலக் கூட்டணியாக அந்த இயக்கம் மாற்றப்பட்டதும் அதில் இருந்து மமக வெளியேறியது.
அதனைத் தொடர்ந்து அதிமுகவுக்கு ஆதரவான நிலையில் மமக இருந்து வந்தது. இதனிடையே ஜவாஹிருல்லாவுக்கும், பொதுச்செயலாளராக இருந்த தமீமுன் அன்சாரிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தமீமுன் அன்சாரி மனிதநேய ஜனநாயகக் கட்சி என்ற தனிக்கட்சியை தொடங்கினார். இந்த கட்சி திமுகவுக்கு ஆதரவு அளிக்கும் எனக் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சி இடம்பெறும் என தகவல்கள் வெளியாகி இருந்தன. கடந்த ஞாயிறன்று அதிமுகவின் கூட்டணிக் கட்சித் தலைவர்களை ஜெயலலிதா சந்தித்து பேசினார். அப்போது ஜவாஹிருல்லாவுக்கும் ஜெயலலிதா அழைப்பு விடுத்திருந்ததாக கூறப்பட்டது. ஆனால் அவர் போயஸ் தோட்டம் செல்லவில்லை.
திமுக-மமக கூட்டணி
இந்நிலையில் புதிய திருப்பமாக திமுக கூட்டணியில் இணைய மனித நேய மக்கள் கட்சி முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து சென்னையில் இன்று திமுக பொருளாளர் முக ஸ்டாலினை அவரது இல்லத்தில் ஜவாஹிருல்லா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இச்சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா, வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து மனித நேய மக்கள் கட்சி போட்டியிடும் என்று அறிவித்தார்.
முஸ்லிம் கட்சிகள்…
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான
கூட்டணிக்கு எஸ்டிபிஐ கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் தெஹலான் பாகவி, திமுகவுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் அவர், தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை பின்னர் தொடங்கும் என தெரிவித்தார்.
திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டணி, மனித நேய மக்கள் கட்சியைத் தொடர்ந்து தற்போது எஸ்டிபிஐ கட்சியும் இணைந்துள்ளது.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment