(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, March 5, 2016

வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கும் வகையில் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு!!

No comments :
சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கும் வகையில் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகளுக்கு கலெக்டர் நடராஜன் அறிவுரை வழங்கினார்.

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அதிகஅளவில் வாக்காளர்களை வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் அலி அக்பர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலெக்டர் நடராஜன் பேசியதாவது:–

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்டத்தில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், இறந்தவர் பெயர் மற்றும் இரட்டை பதிவுகளை நீக்கம் செய்தல் தொடர்பாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. மேலும் அதிகஅளவில் வாக்காளர்களை வாக்களிக்க ஊக்குவித்து வாக்குப்பதிவு சதவீதத்தை உயர்த்த வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.


தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலமாக பொதுமக்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மற்றும் மகளிர் திட்ட அலுவலர் ஆகியோர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் அதிகஅளவில் கூடும் இடங்களான பஸ் நிலையம், ரெயில் நிலையம், வணிகப் பகுதிகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் வாக்காளர் விழிப்புணர்வு குறித்த விளம்பர பலகைகளை அமைக்க நகராட்சி ஆணையாளர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலங்கள், மனித சங்கிலிகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகளை நடத்த வேண்டும். பொதுமக்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை அதிகஅளவில் வழங்க வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் பொதுமக்களிடையே வாக்களிப்பதன்அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுவதோடு வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்கும். எனவே பொதுமக்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் காமாட்சி கணேசன், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ராம் பிரதீபன், மகளிர் திட்ட அலுவலர் ஜெயராமன், மாவட்ட சமூக நல அலுவலர் குணசேகரி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் கிருஷ்ணவேணி, மற்றும் தாசில்தார்கள், நகராட்சி ஆணையாளர்கள் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


செய்தி; தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment