(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, March 20, 2016

புகழ் - தமிழ் திரை விமர்சனம்!!

No comments :
நடிப்பு: ஜெய், சுரபி, மாரிமுத்து, கருணாஸ், பாலாஜி
ஒளிப்பதிவு: வேல்ராஜ்
இசை: விவேக் சிவா
தயாரிப்பு: வருண் மணியன், சுசாந்த் பிரசாத், கோவிந்தராஜ்
இயக்கம்: மணிமாறன்

நில அபகரிப்பு அரசியல் ரவுடித்தனத்தை மையமாக வைத்து வந்திருக்கும் இன்னுமொரு படம் புகழ். வாலாஜா நகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு மைதானத்தை ஆட்டயப் போடப் பார்க்கிறது கல்வி அமைச்சர் மற்றும் அவரது அடியாட்கள் கும்பல். அதை எதிர்த்துப் போராடும் ஜெய் மற்றும் நண்பர்கள் எப்படி அந்த மைதானத்தை மீட்டெடுக்கிறார்கள் என்பதுதான் படம். புகழ் என்பது ஹீரோவின் பெயர். அவ்வளவுதான்.

வழக்கமாக மதுரை, மாட்டுத் தாவணி, தேனி, திருநெல்வேலி என்றே பார்த்துப் பழகிய கண்களுக்கு, வேலூர், திருத்தணி, வாலாஜா, சித்தூர் என வடமாவட்டப் பின்னணியில் படம் பார்ப்பது சற்றே மாறுதலாகத்தான் இருந்தது. கதை நிகழுமிடம், பின்னணி, கேரக்டர்கள் எல்லாம் ஓகேதான் என்றாலும் திரைக்கதை அரதப் பழசு. ஹீரோ அடுத்து இதைத்தான் செய்யப் போகிறார், வில்லன் அதற்கு பதில் இப்படித்தான் பழிவாங்கப் போகிறார் என எல்லாமே யூகித்துவிட முடிகிறது.



நாயகி அறிமுகமாகும்போதே இவர்களுக்குள் எந்த கட்டத்தில் காதல் வரும் என்பதைக் கூட சுலபமாகச் சொல்கிறது பக்கத்து இருக்கை. ஆறுதலான விஷயம்... நட்புத் துரோகம் இல்லாதது. புகழாக ஜெய். இதற்கு மேல் அவரிடம் பெஸ்ட் நடிப்பை எதிர்ப்பார்க்க முடியாது.

குரலில் பழைய அளவுக்கு பிசிறடிக்காதது ஒரு ப்ளஸ். ஆக்ஷன் காட்சிகளில் நன்றாகத்தான் நடித்திருக்கிறார். ஆனாலும் இந்த அளவு ஓவர் ஹீரோயிஸம் வேண்டாமே ஜெய்! சுரபி சில காட்சிகளில் குத்துவிளக்காக ஜொலிக்கிறார். சில காட்சிகளில் இயல்பாகவும் நடித்திருக்கிறார். ஒரு மழை இரவில் இருவரும் டீ குடித்தபடியே ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளும் காட்சியில் அழகான காதல் எட்டிப் பார்க்கிறது. மாரிமுத்து கலக்கியிருக்கிறார். அப்படியே அச்சு அசலாக ஒரு நகராட்சி சேர்மனைப் பார்க்க முடிந்தது அவரது நடிப்பில். மோட்டார் சைக்கிள் கேட்கும் மகனுக்கு அவர் தரும் பதில் பக்கா எதார்த்தம். கருணாஸ் நிறைவான நடிப்பு.


அடங்கி அடங்கிப் போகும் அவர் கடைசியில் வெடித்து எங்க வெட்றா பாக்கலாம்... என சீறும் காட்சி அருமை. பாலாஜியும் அவரது நண்பர்களும் கலகலப்பு பஞ்சத்தைப் போக்க உதவியிருக்கிறார்கள். வேல்ராஜின் ஒளிப்பதிவு வெகு இயல்பு. ஆனால் அந்த அளவுக்கு சொல்லும்படி இல்லை விவேக் சிவாவின் இசை. புத்திசாலித்தனமான திரைக்கதை மட்டும் அமைந்திருந்தால் புகழ், பெயருக்கேற்ப புகழ் சேர்த்திருக்கும்.

விமர்சனம்: ஒண் இண்டியா

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment