(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, March 17, 2016

50 ஆண்டுகளுக்குப்பின் லெட்சிமிபுரம் ஊருணி நிறைந்து காட்சி!!

No comments :
18 அடி ஆழத்திற்கு தூர்வாரப்பட்டுள்ள லெட்சுமிபுரம் ஊருணிக்கு பெரிய கண்மாயில் இருந்து கொண்டுவரப்பட்ட தண்ணீரால் ஊருணி நிறைந்து காட்சி அளிக்கிறது.

நீர் மேலாண்மை

மன்னர்கள் ஆண்ட காலத்தில் ராமநாதபுரம் நீர்மேலாண்மையில் சிறந்து விளங்கியது. அந்த அளவிற்கு ராமநாதபுரத்தில் நீர்நிலைகள் அனைத்தும் சங்கிலி கோர்வைபோல இணைக்கப்பட்டு ஒன்றில் தண்ணீர் நிரம்பியதும் மற்றொன்றுக்கு தானாக சென்றடையும் வகையில் வரத்துக்கால்களால் இணைக்கப்பட்டு அனைத்து நீர்நிலைகளும் கோடை காலத்திலும் நிரம்பி காட்சிஅளித்தன. 

நாளடைவில் இந்த நீர்நிலைகள் அனைத்தும் பராமரிக்கப்படாததாலும்போதிய மழை இல்லாமல் வறண்டு போனதாலும்ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியதாலும் பெரும்பாலான நீர்நிலைகள் யாவும் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. அதில் குறிப்பிடக்கூடிய முக்கிய நீர்நிலையாக திகழ்ந்தது ராமநாதபுரம் லெட்சுமிபுரம் ஊருணி. சுமார் 19 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்பட்ட இந்த ஊருணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை குடிநீர் ஊருணியாக மட்டுமே பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வந்தது. இதன்பின்னர் போதிய மழைஇல்லாததால் இந்த ஊருணி சுகாதாரக்கேடு நிறைந்த பகுதியாக மாறி தூர்வாரப்படாமல் தரையோடு தரையாக மாறிக்கொண்டே சென்றது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நீர்நிலைகளை மேம்படுத்தும் சிறப்பு திட்டம் நிறைவேற்றப்பட்டது. 

இந்த திட்டத்தின்கீழ் மேற்கண்ட லெட்சுமிபுரம் ஊருணியை தன்னார்வலர்கள் மூலம் மணல் அள்ளிக்கொள்ள அனுமதி வழங்கி அரசு நிதி செலவில்லாமல் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 19-ந் தேதி முதல் தனியார் அமைப்புகள் மூலம் லெட்சுமிபுரம் ஊருணியில் மணல் அள்ள அனுமதி வழங்கப்பட்டு இரவு பகலாக மணல் அள்ளப்பட்டது.


. 

வேலி

தொடர்ந்து 2 மாதங்களுக்கு மேலாக மணல் அள்ளிய பின்னர் சுமார் 18 அடி ஆழ ஊருணியாக மாறியது. இதன்பின்னர் மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளை ஏற்று ராமநாதபுரம் செய்யது அம்மாள் அறக்கட்டளையின் சார்பில் இந்த ஊருணியை தத்தெடுத்து ஊருணி ஆழத்திற்கு ஏற்ப கரைகள் பலப்படுத்தப்பட்டு சுற்றிலும் முள்வேலி அமைக்கப்பட்டுஉள்ளது. மேலும், ஊருணியை சுற்றிலும் தடுப்பு வேலியை தாண்டி உள்ளே யாரும் சென்றுவிடாதபடி தென்கரை மற்றும் வடகரை பகுதிகளில் கதவு அமைத்து பூட்டு போடப்பட்டு பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டுஉள்ளது. 

மகிழ்ச்சி

இதுதவிர, ராமநாதபுரம் பெரிய கண்மாயில் இருந்து மன்னர் காலத்தில் லெட்சுமிபுரம் ஊருணிக்கு தண்ணீர் வந்த வரத்துக்கால்வாய்களை கண்டறிந்து பெரியகண்மாய் 3-ம் மடை பகுதியில் இருந்து வரத்துக்கால்களை சுமார் 2 அடி ஆழத்திற்கு ஆழப்படுத்தி சீராக்கி ஊருணி வரை கொண்டுவரப்பட்டது. இதன்மூலம் பெரிய கண்மாயில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு தற்போது ஊருணியில் சுமார் 18 அடி ஆழத்திற்கு தண்ணீர் தேங்கி கடல்போல் காட்சியளிக்கிறது. இன்னும் 3 ஆண்டுகளுக்கு இந்த ஊருணி தண்ணீர் வற்றாமல் இருக்கும் அளவிற்கு தேங்கி நிற்பது காண்பவர் மனதை மயக்கும் வகையில் உள்ளது. ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்குமுன் இதுபோன்று ஊருணியில் தண்ணீர் தேங்கியிருந்ததுபோல தற்போது தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுஉள்ளது. 

இதன்மூலம் ஊருணியை சுற்றி உள்ள பகுதிகளில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நிலத்தடி நீர் ஆதாரம் பெருகுவதோடு, தண்ணீரின் உவர்ப்பு தன்மை மாறி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கையால் வரும் காலங்களிலும் பெரியகண்மாயில் இருந்து நேரடியாக லெட்சுமிபுரம் ஊருணிக்கு தண்ணீர் திறந்து விட்டு நீர் ஆதாரத்தை தொடர்ந்து மேம்படுத்தும் வழிவகை ஏற்பட்டுஉள்ளது. மேலும், ஊருணியின் கரைகளை சுற்றிலும் வனத்துறையின் சார்பில் மரக்கன்றுகள் 3 அடுக்குமுறையில் நடப்பட்டு செய்யது அம்மாள் அறக்கட்டளை பசுமைப்படை அமைப்பின் சார்பில் தண்ணீர் ஊற்றி பராமரிக்கப்பட்டு வருகிறது. சத்தமில்லாமல் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நீர்மேலாண்மை திட்டத்தினால் பராமரிக்கப்படாமல் இருந்து வந்த லெட்சுமிபுரம் ஊருணி தற்போது நீர்நிறைந்து கடல்போல் காணப்படுவது அந்த வழியாக சென்றுவருவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment