முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, November 28, 2015

உப்பு கருவாடு - தமிழ் திரை விமர்சனம்!!

No comments :
நடிகர்கள்: கருணாகரன், நந்திதா, எம்எஸ் பாஸ்கர், ரஷிதா, மயில்சாமி, சதீஷ், சாம்ஸ்
ஒளிப்பதிவு: மகேஷ் முத்துசாமி
இசை: ஸ்டீவ் வாட்ஸ்
வசனம்: பொன் பார்த்திபன்
தயாரிப்பு: ராம்ஜி நரசிம்மன்

இயக்கம்: ராதாமோகன்

ஒரு சுமாரான முதல் படம் எடுத்த இயக்குநர்... அவரது அடுத்த படம் பாதியில் நின்று போகிறது. சினிமாவைத் தவிர எதுவும் தெரியாத அந்த இளைஞர் தன்னை நம்பி நிற்கும் நான்கு பேருடன் சேர்ந்து வாய்ப்புக்கு அலைகிறார். அப்போது கடல்புரத்தில் உள்ள ஒரு பெரிய மனிதர் அவர்களை வைத்து படம் தயாரிக்க முன்வருகிறார், ஒரு நிபந்தனையுடன். அதாவது ஹீரோயின் அவர் மகளாக இருக்க வேண்டும்! வேறு வழியில்லை. ஒப்புக் கொள்கிறார்கள். நடிப்பு என்றால் வீசை என்ன விலை என்று கேட்கும் அந்தப் பெண்ணை எப்படியோ கஷ்டப்பட்டு தேற்றுகிறார்கள். சரியாக ஷூட்டிங் ஆரம்பிக்கும் நாளன்று ஹீரோவும் ஹீரோயினும் காணாமல் போக... மொத்த யூனிட்டையும் அடி வெளுத்துவிடுகிறார் பெரிய மனிதர். இயக்குநரையும் அவருடன் உள்ளவர்களையும் சிறைப்படுத்திவிடுகிறார்.

ஹீரோவும் ஹீரோயினும் ஓடிப்போய்விட்டார்களா என்றால், ம்ஹூம்... அங்குதான் தேவயானி - ராஜகுமாரன் லவ் ஸ்டோரி ரேஞ்சுக்கு ஒரு ட்விஸ்டு வைத்திருக்கிறார் ராதா மோகன். ஹீரோயின் எங்கே போனார்... இயக்குநர் படம் எடுத்தாரா? என்பதெல்லாம் கலகலப்பான இரண்டாம் பாகம்! படம் ஆரம்பிக்கும்போது, என்னடா இது, இன்னுமொரு சினிமாவுக்குள் சினிமா கதையா? என்ற கேள்வி எழுந்தாலும், பொன் பார்த்திபனின் வசனங்கள் அந்த கேள்வியை சிறடிக்கின்றன. நொடிக்கொரு அதிர்வேட்டாக வெடிக்கின்றன வசனங்கள். சினிமாக்காரர்களுக்கு நன்கு புரியும் இந்த வசனங்கள், வெகு ஜனங்களிடம் எந்த அளவு போய்ச் சேரும் என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும். கருணாகரனுக்கு மிகப் பெரிய வாய்ப்பு. பெரிதாக அவர் உணர்ச்சிகளைக் கொட்டி நடிக்கவில்லை என்றாலும், மாரிமுத்துவிடம் ஆவேசமும் தன்னிரக்கமும் கலந்து கட்டி பேசும் நான் ஸ்டாப்பாக வசனங்கள்... அபாரம். "சமூகத்தை அவமானப்படுத்துவதாகக் கொந்தளிக்கிறீங்களே..." என்று ஆரம்பித்து எந்தெந்த அநியாயங்களையெல்லாம் கைகட்டி வாய் மூடி வேடிக்கைப் பார்க்கிறது இந்த சமூகம் எனப் பட்டியலிடும் அந்தக் காட்சி சாட்டையடி!

"
சண்முகத்தை அவமானப்படுத்திட்டீங்கன்னு சொல்றாங்களே... யாருங்க அந்த சண்முகம்?" என்று அப்பாவியாக சவுட் செந்தில் கேட்குமிடத்தில் வெடிச் சிரிப்பு. அந்த மலையாளப் பாடகரும் டவுட் செந்திலும் கட்டி உருளாத குறை. ஆனால் அதற்கும் மேலான எஃபெக்ட் பாடகரிடம் மாட்டிக் கொண்டு செந்தில் முழிக்கும் காட்சிகள்! படம் தயாரிக்கிறேன் என்று முன்வரும் சில 'அய்யாக்கள்' கவிதை எழுதுவதாக, பாடல் இயற்றுவதாகச் சொல்லிக்கொண்டு கொடுக்கும் இம்சைகளை இதைவிட நக்கலாக யாரும் சொல்லிவிட முடியாது. 

நந்திதாவின் லூஸ்தனமான நடிப்பு ஓகேதான். ஆனால் அவர் சிரித்தால்தான் பக்கென்று ஆகிவிடுகிறது. மயில்சாமியை இந்தப் படத்தில்தான் முழுமையாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். 'கேஸ் போனாலும் நல்ல சகுனம்தான்யா' என்று அவர் நியாயப்படுத்தும் காட்சி இன்னொரு அதிர்வெடி! மேஜர் சுந்தரராஜன் குரலில் திண்டுகல் சரவணன் மிமிக்ரி செய்யும்போது சிரித்து சிரித்து கண்ணில் தண்ணி வந்துவிட்டது போங்க. எதற்கெடுத்தாலும் மூதுரை அல்லது திருக்குறல் சொல்லும் சாம்ஸ், பழசான அவரை மாடர்னாக்கும் நாராயணன், சரவணன் மீனாட்சி ரஷிகா, வில்லன் ரேஞ்சுக்கு அறிமுகமாகி நல்லவராக மாறிவிடும் மாரிமுத்து என அத்தனை கேரக்டர்களையுமே வெகு சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர் ராதா மோகன். குமரவேலிடம் ராதா மோகனால் மட்டும்தான் இப்படியெல்லாம் நடிக்க வைக்க முடியும் போலிருக்கிறது. இரண்டே நிமிடங்களில் தன் காதல் ப்ளாஷ்பேக்கைச் சொல்லி கலங்கடிக்கிறார்.

எந்த வசனம் இந்த தலைமுறைக்குப் பிடிக்காது, மொக்கை என்று இயக்குநர் ஒதுக்கினாரோ, அந்த வசனத்தை நிஜத்தில் பயன்படுத்தி வாழ்க்கையை ஜெயிக்கும் அந்தப் பாத்திரம், சினிமாவை எவராலும் கணித்து எடுக்க முடியாது என்பதற்கு ஒரு சோறு பதம்! ராதா மோகனின் விறுவிறு திரைக்கதை, பொன் பார்த்திபன் வசனங்கள், மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு, ஜெய்யின் ஷார்ப் கட்... உப்புக் கருவாட்டை சுவையாக்கிய சமாச்சாரங்கள் இவைதான். இசை பெரிதாகக் கை கொடுக்கவில்லை. ஏன், அதை கவனிக்கக் கூடத் தோன்றவில்லை, அடுத்தடுத்து சரவெடியாய் வந்து கொண்டே இருக்கும் துணுக்குகளால். க்ளைமேக்ஸை முடித்தவிதம், ஏற்கெனவே தொன்னூறுகளில் பார்த்த சில படங்களை நினைவூட்டினாலும், இந்தப் படத்துக்கு அதுதான் பொருத்தம். லேசா உப்புக் கரிச்சாலும், டேஸ்ட் நல்லாருக்கு!

விமர்சனம்: ஒண் இண்டியா

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

பாஜக நிர்வாகி கொலை வழக்கு, 9 பேரை கைது செய்து, மேலும் ஒருவரை தேடுகிறது காவல் துறை!!

No comments :
பரமக்குடி அருகே நடந்த பாஜக நிர்வாகி கொலையில் மேலும் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கடந்த 23ம் தேதி இரவு பாஜக நிர்வாகி ரமேஷ்(29) வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பரமக்குடியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கால்நடை மருத்துவர் பாலகிருஷ்ணனை முதலில் கைது செய்தனர். 

தொடர்ந்து அவரது கார் டிரைவர் தேவராஜ், இவரது தந்தை வேலுச்சாமி, சுரேஷ், மகேந்திரன், ஆர்.எஸ்.மங்கலத்தை சேர்ந்த தவமணி ஆகியோரை நேற்றுமுன்தினம் கைது செய்தனர்.

தலைமறைவாக இருந்த பொன்னையாபுரம் முனியாண்டி மகன் கருணாகரனை(21) பரமக்குடி போலீசார் நேற்று கைது செய்தனர்.   மற்றொருவரான அழகர் மகன் திருமுருகன்(21) நேற்று ராமநாதபுரம் ஜேஎம். 2: நடுவர் மன்றத்தில் சரணடைந்தார். அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்கின்றனர். பாலா என்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.


செய்தி: தினகரன்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுர இளைஞர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது!!

No comments :
ராமநாதபுரம் நகரைச் சேர்ந்த அசரப்அலி என்ற இளைஞர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவராக இருந்ததால், அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ராமநாதபுரம் நகர் சின்னக்கடைத் தெருவில் வசித்து வரும் சித்திக் மகன் அசரப்அலி(22). இவர் கடந்த 16.10.2015 ஆம் தேதி டாக்டர்.பாரூக் என்பவரை கத்தியால் குத்த முயன்று அவரது வீட்டில் இருந்த பொருள்களையும் திருட முயன்றார். வீட்டுக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டதால் தப்பித்துக்கொண்ட டாக்டர்.பாரூக் கொடுத்த புகாரின் பேரில் ராமநாதபுரம் பஜார் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அசரப்அலியை கைது செய்தனர்.


இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாலும், ஏற்கெனவே குற்ற வழக்கு ஒன்றில் ராமநாதபுரம் சிறையில் இருந்த போது தப்பிச்சென்று மீண்டும் பிடிபட்டதாலும் இவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யலாம் என ராமநாதபுரம் எஸ்.பி. என்.மணிவண்ணன் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

இந்த உத்தரவினைத் தொடர்ந்து காவல்துறையினர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அசரப்அலியிடம் அதற்கான உத்தரவை வழங்கியுள்ளனர்.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

கீழக்கரை பேருந்து நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க கோரிக்கை!!

No comments :
கீழக்கரை பேருந்து நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கீழக்கரையில் 17 ஆண்டுகளுக்கு முன் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. இந்த பகுதியைச் சுற்றிலும் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. 

இப்பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளதால் அங்கு வருபவர்கள் இப்பகுதியில் நின்று பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். இதனால் மாலை நேரங்களில் இந்த பகுதியில் பெண்கள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர்.

எனவே இப்பகுதியின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் பேருந்து நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


செய்தி: திரு. தாஹிர், கீழக்கரை

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)