முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, November 1, 2015

மழை, வெள்ளத்தில் சிக்கி உயிரிழப்போரின் குடும்பங்களுக்குத் தரப்படும் நிவாரண உதவித் தொகையை ரூ. 4 லட்சமாக உயர்வு!!

No comments :
தமிழகத்தில் மழை, வெள்ளத்தில் சிக்கி உயிரிழப்போரின் குடும்பங்களுக்குத் தரப்படும் நிவாரண உதவித் தொகையை ரூ. 4 லட்சமாக உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வடகிழக்கு பருவ மழை தற்பொழுது தமிழகம் எங்கும் பரவலாக தொடர்ந்து பெய்து வருகிறது. தமிழ்நாடு அரசு வருவாய்த்துறையின் சார்பில் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து, வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் இன்று காலை வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலக வளாகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

நிகழ்ச்சியில் முதன்மைச் செயலர்- வருவாய் நிர்வாக ஆணையர் அதுல்யமிஸ்ரா, பேரிடர் மேலாண்மை இணை ஆணையர் லில்லி, சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி, சென்னை மாநகராட்சியின் தலைமைப் பொறியாளர் பாபு இராஜேந்திரன் பேரிடர் மேலாண்மை இணை இயக்குநர் கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


இம்மையத்தில் மாவட்டங்களிலிருந்து நாள் தோறும் பெறப்படும் மழையின் அளவு, கனமழையை எதிர்கொள்ள மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறிப்பாக, தென் மாவட்டங்களில் பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள சேதங்கள், பாதிக்கப்பட்டுள்ள குடிசைகள், வீடுகள், மனிதமற்றும் கால்நடை உயிரிழப்புகளின் விவரங்கள் குறித்து, அமைச்சர் விரிவான ஆய்வினை மேற் கொண்டார்.

முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பெயரில் தொடர் மழை பெய்து வரும் பகுதிகளில், அமைச்சர் பெருமக்களும் அலுவலர்களும் விரைந்து சென்று போர்க்கால அடிப்படையில், மேற்கொள்ளப்படும் நிவாரணப் பணிகளை பார்வையிட்டு வருவதோடு மட்டுமின்றி, பாதிக்கப்பட்டோருக்கான உரிய நிவாரண உதவிகளையும் விரைந்து வழங்கி வருகிறார்.

குறிப்பாக, முதல்வர் ஜெயலலிதா, பேரிடர்களின் போது உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிவாரண உதவித் தொகையினை 2.50 லட்சம் ரூபாயிலிருந்து 4 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

கால்நடைகள் இழப்பிற்கு வழங்கப்படும் உதவித் தொகையினை 20,000 ரூபாயிலிருந்து 30,000 ரூபாயாக உயர்த்தியும், ஆடுகள் இழப்பிற்கு வழங்கப்படும் உதவித் தொகையானது 2,000 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாக உயர்த்தியும், பகுதியாக சேதமடையும் குடிசைகளுக்கு உதவித் தொகையானது 2,500 ரூபாயிலிருந்து 4,100 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கிடவும், முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்கு 5,000 ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டு உள்ளார்.


அதனடிப்படையில் இந்த நிவாரண உதவிகள் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக உடனடியாக வழங்கப்பட்டு வருகிறது இயற்கை பேரிடர்கள் நிகழும் காலங்களில் மக்களை நாடிச் சென்று உதவிக்கரம் நீட்டுவதோடு, நிருவாகத்தின் முதுகெலும்பாக தொடர்ந்து விளங்கிடும் துறையே வருவாய்த் துறை என்று முதல்வர் ஜெயலலிதா வருவாய்த் துறையின் செயல்பாடுகள் குறித்து மிகவும் பெருமையாக குறிப்பிட்டு உள்ளார். அதனை வருவாத்துறை அலுவலகர்கள் அனைவரும் நினைவில் கொண்டு, உரியஉடனடி நிவாரண நடவடிக்கைகளை பிறதுறைகளுடன் இணைந்து, காலதாமதமின்றி வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி: ஒண் இண்டியா

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரத்தில் ரூ.6 கோடி மதிப்பில் சர்வதேச தரத்தில் ஹாக்கி விளையாட்டு மைதானம்!!

No comments :
ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகப் பகுதியில் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கம் அருகில் சர்வதேச தரத்திலான ஹாக்கி விளையாட்டு மைதானம் ரூ.6 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த மைதானத்தை தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர்.எஸ்.சுந்தரராஜ், ஆட்சியர் க.நந்தகுமார் ஆகியோர் சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.

ஆய்வின் போது, முதுகுளத்தூர் நிலவள வங்கியின் தலைவர் ஆர்.தர்மர், ராமநாதபுரம் மாவட்ட ஹாக்கி விளையாட்டு சங்கத்தின் தலைவர் டாக்டர்.டி.அரவிந்தராஜ், செயலாளர் அ.செல்லத்துரை அப்துல்லா, துணைத் தலைவர்  மனோகரன், இணைச்செயலாளர் கிழவன்சேதுபதி, பட்டினம் காத்தான் ஊராட்சி மன்றத் தலைவர் எம்.சித்ராமருது, உடற்கல்வி ஆய்வாளர் பிரசாத், உடற்கல்வி இயக்குநர் சதீஷ்குமார், மாவட்ட வன அலுவலர் தீபக்.எஸ்.பில்கி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் பழனி உட்பட பலரும் உடனிருந்தனர்.


பின்னர் மைதானத்தில் நடந்த ஒத்திகைப்போட்டியை துவக்கி வைத்து அமைச்சர் எஸ்.சுந்தரராஜ் கூறியது:
இம்மைதானம் சீனாவில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட செயற்கைப்புல்லால் நீல நிறத்திலும், இந்தப்புல்லை ஒட்டுவதற்கான பற்பசை சுவிட்சர்லாந்தில் இருந்தும் இறக்குமதி செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப்புல் மைதானத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் இயந்திரம் இத்தாலியில் இருந்து கொண்டு வரப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது. பல்வேறு நன்கொடையாளர்கள் மூலம் நிதி பெறப்பட்டு நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ரூ.6 கோடி மதிப்பில் மைதானம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.


அமைச்சர் மேலும் கூறுகையில், தமிழகத்திலேயே செயற்கைப்புல் விளையாட்டு மைதானங்கள் சென்னை,திருச்சி,திருநெல்வேலி,மதுரை ஆகிய இடங்களில் இருந்தாலும், நீலநிறப் புல் மைதானம் முதல் முதலாக ராமநாதபுரத்தில் தான் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 

வெளிநாட்டிலிருந்தும் வீரர்கள் வந்து விளையாடும் வகையில் இந்த மைதானம் சர்வதேச தரத்தினால் ஆனது என்பதற்கான சான்றை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நிறுவனம் வழங்கும். அந்த நிறுவனம் இந்த மைதானத்தை பார்வையிட்டு உள்ளது. அவர்களிடமிருந்து தரச்சான்றிதழ் பெற்றவுடன் இந்த மாத இறுதிக்குள் திறப்பு விழா நடத்திட முடிவு செய்துள்ளோம். விரைவில் சர்வதேச விளையாட்டு வீரர்கள் வந்து பார்வையிட்டு போட்டிகளில் பங்கேற்கும் வகையில் கண்காட்சிப் போட்டி நடத்தப்படும் என்றார்

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமேசுவரம் கடலில் வெளிநாட்டு வீரர்கள் சாகச நீர் விளையாட்டு நிகழ்ச்சி!!

No comments :
ராமேசுவரம் கடலில் வெளிநாட்டு வீரர்கள் சாகச நீர் விளையாட்டு
ராமேசுவரம் கடலில் சனிக்கிழமை நடைபெற்ற நீர் விளையாட்டு போட்டிகளில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த 100-கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டனர்.

தமிழக கடலோரப்பகுதியில் வசித்து வரும் மீனவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ராமேசுவரம் சங்குமால் கடல்பகுதியில் விளையாட்டுதுறை சார்பில் இப்போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.


இதன் தொடக்க விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் தலைமை வகித்தார். தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் எஸ். சுந்தரராஜ் முன்னிலை வகித்து விளையாட்டு போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார். 

தொடர்ந்து அங்கு நடைபெற்ற கயாக் படகு போட்டி, விண்ட்சர்பிங் போட்டி,பீச்பால் ஆகிய விளையாட்டு போட்டிகளில் பிரான்ஸ், இலங்கை, அமெரிக்கா, பிரேசில் ஆகிய வெளிநாடுகளைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வீரர்கள் என 100க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

விளையாட்டுப்போட்டி துவக்க நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட வனஉயிரினகாப்பாளர் தீபக்பெல்கி, ராமேசுவரம் நகராட்சி ஆணையர் ஜெயராமராஜா, சுற்றுலாத்துறை அலுவலர் பாலசுப்பிரமணியன், ராமேசுவரம் நகர்மன்றத் தலைவர் அர்சுனன், முன்னாள் உறுப்பினர் பி.ஜி.சேகர், அதிமுக மாவட்ட செயலர் தர்மர், ராமேசுவரம் நகரச் செயலாளர் பெருமாள், அம்மா பேரவை நகரச் செயலாளர் கஜேந்திரன், ராமேசுவரம் வீட்டுவசதிவாரியத் தலைவர் கே.கே.அர்சுனன், மற்றும் மீனவர்களும்,ஏராளமான பெதுமக்களும் கலந்துகொண்டனர்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)