Monday, August 24, 2015
பார்த்திபனூர் பஸ் ஸ்டாண்டில் இடிந்து விழும் நிலையில் கடைகள், செப்பனிட கோரிக்கை!!
பார்த்திபனூர் பஸ் ஸ்டாண்டில் மராமத்து
பணிகள் மேற்கொள்ளாததால் ஊராட்சிக்கு
சொந்தமான கடைகள் இடிந்து விழுகின்றன. பரமக்குடி அருகே பார்த்திபனூர் பஸ் ஸ்டாண்டு
பகுதியில் ஊராட்சிக்கு சொந்தமான 6 கடைகள் உள்ளன. இக்கடைகள்
கடந்த 12 வருடங்களுக்கு
முன்பு கட்டப்பட்டது. ஆரம்ப காலத்தில் முறையாக பராமரிக்கப்பட்ட இந்த கடைகள்
வெளிநபர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் வாடகைப்பணம் ஊராட்சி
நிதியில் சேர்க்கப்பட்டது. நாளடைவில் கட்டிடங்களில் மராமத்து பணிகள் மேற்கொள்ளாத
காரணத்தில் சுவர்கள் விரிசல் ஏற்பட்டன.
எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் தற்போது கடைகள் அனைத்தும் உள்ளது. இதனால் சிலர் கடையை காலி செய்து விட்டனர். ஒரு சிலர் பழைய பேப்பர், கரி மூடைகள் அடுக்கி வைக்கும் குடோனாக மாற்றியுள்ளனர். உரிய பராமரிப்பு இல்லாததால் பல லட்சங்கள் செலவில் கட்டப்பட்ட கடைகள் அனைத்தும் தற்போது பயனின்றி உள்ளது. ஊராட்சி நிர்வாகத்தினர் கடைகளை மராமத்து பணிகள் மேற்கொண்டால் வருவாய் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதுகுறித்து கடை வியாபாரிகள் கூறுகையில், “கடைகள் இடிந்து விழுவதால் யாரும் நிரந்தரமாக கடைகளில் தங்க முடியவில்லை. கடை நிலைமையை பார்த்து பொதுமக்களும் கடைக்கு வர தயக்கம் காட்டுகின்றனர். பல வருடங்களாக கடைகளில் மராமத்து பணிகள் மேற்கொள்ளாததால் கடையின் உள்ளே அனைத்து பகுதியும் சேதமாகி உள்ளது. மாற்று ஏற்பாடுகள் செய்தால்தான் கடைகளில் தங்கி வியாபாரம் செய்ய முடியும்” என்று கூறினர்.
செய்தி: தினகரன்
கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்ட 4 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது!!
கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்ட 4 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது
செய்யப்பட்டனர்.
கீழக்கரையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி
உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, இங்கு கள்ளநோட்டுகளை மாற்ற முயன்ற, பாம்பனை சேர்ந்த ராபர்ட் (32),
யாசர் அராபத் (32), ராமேஸ்வரத்தை சேர்ந்த முனீஸ் என்ற முருகேசன் (39), வத்தலக்குண்டு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த சிவா (30) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து
ரூ.52 ஆயிரம் மதிப்புள்ள
கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இவர்கள் 4 பேரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடுமாறு ராமநாதபுரம் எஸ்பி மயில்வாகனன், கலெக்டருக்கு பரிந்துரைத்தார். கலெக்டர் நந்தகுமார், கள்ளநோட்டை புழக்கத்தில் விட்ட 4 பேரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து கீழக்கரை போலீசார் ராமநாதபுரம்
மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த 4 பேரையும் கைது செய்து, மதுரை மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர்.
ராமநாதபுரத்தில் நாளை ஆக-25ம் தேது மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்!!
ராமநாதபுரத்தில் நாளை ஆக-25ம் தேது மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்!!
ராமநாதபுரம் மின்பகிர்மான கோட்ட
அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆக. 25ஆம் தேதி காலை 11 மணியளவில் நடைபெற இருப்பதாகவும்,
ராமநாதபுரம் கோட்ட அலுவலகத்திற்கு உள்பட்ட மின்
நுகர்வோர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறுமாறும் மின்வாரிய
செயற்பொறியாளர் எம்.ஜோசப் செல்வராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில்
தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் பயன்பெற வேண்டுகிறோம்.