முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, August 9, 2015

கீழக்கரையில் நாளை (ஆக - 10) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை!!

No comments :
கீழக்கரையில் நாளை (ஆக - 10) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை!!



கீழக்கரை துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, கீழக்கரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள அலவாய்கரைவாடி, மாயாகுளம், முஹம்மது சதக் கல்லூரிகள், ஏர்வாடி, உத்திரகோசமங்கை, தேரிருவேலி, பாலையரேந்தல் மற்றும் மோர்குளம் ஆகிய கிராமங்களில் மின்விநியோகம் இருக்காது என, மின்வாரிய உதவிச் செயற்பொறியாளர் கங்காதரன் தெரிவித்துள்ளார்.

செய்தி: தினமணி

நாட்டிலேயே தூய்மையான நகரங்கள் பட்டியலில் 2-ம் இடத்தை பிடித்தது திருச்சிராப்பள்ளி!!

No comments :
நாட்டிலேயே தூய்மையான நகரங்கள் பட்டியலில் மைசூர் முதலிடத்தையும் திருச்சி 2-ம் இடத்தையும் பிடித்துள்ளன. தலைநகரங்களில் பெங்களூருதான் மிகவும் தூய்மையான நகரம் என்று தெரியவந்துள்ளது.

நாட்டில் 31 மாநிலங்களை சேர்ந்த 476 நகரங்களில் (ஒரு லட்சத் துக்கும் மேல் மக்கள்தொகை உள்ள நகரங்கள்) திடக்கழிவு மேலாண்மை எப்படி செயல் படுத்தப்படுகிறது, திறந்தவெளி கழிப்பிடம் எந்தளவுக்கு உள்ளது, கழிவுநீர் அகற்றும் முறை, கழிவுநீர் மறுசுழற்சி முறை, குடிநீரின் தரம், ஏரி, குளங்களில் உள்ள நீரின் தரம், தண்ணீரால் பரவும் நோய்களால் இறந்தோர் எண்ணிக்கை போன்ற பல முக்கிய விஷயங்கள் குறித்த புள்ளிவிவரம் ஒவ்வொரு நகரிலும் சேகரிக்கப்பட்டது.


இந்த 476 நகரங்களில் கர்நாடகத்தை சேர்ந்த மைசூர் முதலிடத்திலும், தமிழகத்தின் திருச்சி 2-வது இடத்திலும் உள்ள தாக மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. திறந்தவெளி கழிப்பிடங்கள் மைசூரில் மிகமிக குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. அங்கு கழிவறை வசதி சிறப்பாக உள்ளது.

தூய்மையான மாநில தலை நகரங்கள் என்று பார்த்தால் கர்நாடக தலைநகர் பெங்களூரு தான் சிறப்பான இடத்தில் உள்ளது. தவிர கர்நாடகத்தின் 3 நகரங்களும் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளன.

தூய்மையான 100 நகரங்கள் பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்துள்ள நகரங்கள்:

மைசூர் (கர்நாடகா),
திருச்சி (தமிழ்நாடு),
நவி மும்பை (மகாராஷ்டிரா),
கொச்சி (கேரளா),
ஹாசன் மண்டியா,
பெங்களூரு (கர்நாடகா), தி
ருவனந்தபுரம் (கேரளா),
அலிசாகர் (மே.வங்கம்),
காங்டாக் (சிக்கிம்),
தமோ (மத்தியப் பிரதேசம்).



சண்டி வீரன் - தமிழ் திரை விமர்சனம்!!

No comments :
நடிகர்கள்: அதர்வா, ஆனந்தி, லால், போஸ் வெங்கட்
ஒளிப்பதிவு: பிஜி முத்தையா
இசை: அருணகிரி, சபேஷ் - முரளி
தயாரிப்பு: பாலா
இயக்கம் : சற்குணம்

தண்ணீர் பிரச்சினை என்று வந்தாலே பக்கத்து மாநிலங்கள் மட்டுமல்ல, பக்கத்து பக்கத்து கிராமங்கள் கூட பகை நிலங்களாக மாறி வெட்டிக் கொள்வதை விறுவிறுப்பான கதையாக சொல்லும் படம் சண்டி வீரன்.

காவிரி பாயும் டெல்டா மாவட்டமான தஞ்சையின் மன்னார்குடிக்குப் பக்கத்தில் உள்ள நெடுங்காடு மற்றும் வயல்பாடி கிராமங்களுக்கிடையே தண்ணீர்ப் பிரச்சினை. நெடுங்காட்டில் நல்ல தண்ணீர் குளமிருக்கிறது. உப்புத் தண்ணீர் குடித்து குடித்து பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு செத்து விழும் வயல்பாடி மக்களுக்கு, அந்தக் குளத்திலிருந்து ஒரு சொட்டு நீர் தர மறுக்கிறார்கள் நெடுங்காடு மக்கள். குறிப்பாக பஞ்சாயத்து தலைவர் ரவிச்சந்திரனும் கவுன்சிலர் லாலும்.



இந்தப் பிரச்சினைக்காக இரு கிராமத்தினருக்குமிடையே நடந்த சண்டையில் நெடுங்காட்டைச் சேர்ந்த கொல்லப்படுகிறார் போஸ் வெங்கட். அவரது மகன் அதர்வா சிங்கப்பூருக்குப் போய், விசா முடிந்தும் தங்கியிருந்த குற்றத்துக்காக தண்டனை பெற்று ஊர் திரும்புகிறார். வயல்பாடி மக்களின் கஷ்டம் அறிந்து அவர்களுக்கு உதவ முயல்கிறார். இதனிடையே லாலின் மகள் ஆனந்திக்கும் அதர்வாவுக்கும் காதல் ஏற்பட, இதைத் தெரிந்து அதர்வாவை எச்சரிக்கிறார் லால். கேட்க மறுக்கும் அதர்வாவை போட்டுத் தள்ள ஏற்பாடு செய்கிறார்.

இந்த நேரத்தில்தான், நெடுங்காடு கிராம தலைவர் ரவிச்சந்திரன் ஒரு விபத்தில் சிக்குகிறார். இதற்கு காரணம் வயல்பாடியைச் சேர்ந்தவர்தான் என்று கூறி, அந்த ஊரையே பழிவாங்க நெடுங்காடு மக்களை ஆயுதங்களுடன் திரட்டுகிறார் லால். அந்தக் கலவரத்தில் அதர்வாவையும் போட்டுத் தள்ள திட்டமிடுகிறார். இதைத் தெரிந்து கொண்ட அதர்வா, அந்த பெரும் கலவரத்தைத் தடுக்க முயற்சிக்கிறார். அதில் எப்படி வெற்றி காண்கிறார்? ஆனந்தியைக் கைப்பிடித்தாரா? வயல்பாடி மக்களுக்கு நல்ல தண்ணீர் கிடைத்ததா? என்பது மீதிக் கதை.

இரண்டு மணி நேரத்துக்குள் முடிகிற மாதிரி பரபரவென ஒரு திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் சற்குணம். முதல் பாதியில் கலகலப்பும், இரண்டாம் பாதியில் விறுவிறுப்புமாகப் போகிறது கதை. ஆனால் களவாணி மாதிரியோ, வாகை சூடவோ போலோ இல்லாமல் பார்த்துக் கொள்வதில் கவனமாக இருந்திருக்கிறார்.

நெலாவுல தண்ணி இருக்கான்னு ராக்கெட்டு அனுப்புறோம் பூமியில குடிநீர விலைபோட்டு விக்கிறோம்


என்ற வரிகள் ஒவ்வொருவரையும் வெட்கித் தலைகுனிய வைக்கின்றன. ஆனால் சில காட்சிகளை இன்னும் உணர்வுப்பூர்வமாக, அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம்.


ஏற்கெனவே பகை கொண்ட இரண்டு ஊர் பற்றிக் கொண்டு எரியப் போகும் தகவலைச் சொன்னால் போலீஸார் இப்படியா நடந்து கொள்வார்கள். இது சினிமாத்தனமாக உள்ளது. ஆனால் இன்றைய கிராமங்கள், அதன் மனிதர்கள், பிரச்சினைகளைப் பதிவு செய்த விதத்துக்காக சண்டி வீரனைப் பார்க்கலாம்!

விமர்சனம்: ஒன் இண்டியா