முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, July 21, 2015

திருப்புல்லாணியில் இறால் பண்ணைகளை அப்புறப்படுத்த வலியுறுத்தி சாலை மறியல், பலர் கைது!!

No comments :
திருப்புல்லாணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள இறால் பண்ணைகளால் நிலத்தடி நீர் மாசுபட்டு குடிநீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு வருவதை கண்டித்தும், இறால் பண்ணைகளை உடனடியாக அப்புறப்படுத்த வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் திருப்புல்லாணியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. 

போராட்டத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தொகுதி செயலாளர் பத்மநாதன் தலைமை தாங்கினார். திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் முகம்மது அலி, இளைஞர் அணி தொகுதி இணை செயலாளர் கணேசமூர்த்தி, தொகுதி பொருளாளர் வெண்குளம் ராஜு, மகளிர்அணி இலக்கியா, மண்டபம் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் வெள்ளைச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது சாலை மறியல் செய்த 58 பேரை திருப்புல்லாணி போலீசார் கைது செய்தனர். 

செய்தி: தினத்தந்தி

ராஜிநாமாவா? நானா?, கீழக்கரை நகர்மன்றத் தலைவர் மீது திமுக உறுப்பினர் ஆட்சியரிடம் புகார்!!

No comments :
போலியான ராஜிநாமா கடிதத்தை தயாரித்து தன்னை பதவியிலிருந்து நீக்கி விட்டதாக கீழக்கரை நகர்மன்றத் தலைவர் மீது திமுக உறுப்பினர் ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகார் செய்துள்ளார்.

கீழக்கரை நகராட்சியில் 20ஆவது வார்டு நகர்மன்ற திமுக உறுப்பினராக இருந்து வருபவர் ஹமீது சுல்தான் மகன் ஏ.ஹெச்.ஹாஜா நஜ்முதீன் (44). இவர் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் க.நந்தகுமாரை சந்தித்து கொடுத்துள்ள புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது:

கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தில் நடந்து வரும் முறைகேடுகளை மன்றக் கூட்டத்தில் தொடர்ந்து தெரிவித்து வந்தேன். எனவே ஜூலை 2 ஆம் தேதி நகர்மன்ற சாதாரணக் கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு திரும்பிய பிறகு நகர்மன்றத் தலைவர் ராவியத்துல் காதரியா நான் ராஜிநாமா செய்தது போன்று ஒரு போலியான கடிதத்தை தயாரித்து எனக்கு ஜூலை 7 ஆம் தேதி பதிவுத் தபாலில் அனுப்பியுள்ளார். நான் எதிர்க்கட்சியை சேர்ந்தவன் என்பதால் என்னை பழிவாங்கும் நோக்கத்துடன் போலியான கடிதம் தயாரித்து உறுப்பினர் பதவியிலிருந்து என்னை நீக்கியுள்ளனர். எனவே பதவி நீக்கம் செய்த தலைவர் மீது நடவடிக்கை எடுப்பதுடன் உறுப்பினர் பதவியை மீட்டுத் தருமாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.


 இது குறித்து நகர்மன்றத் தலைவர் ராவியத்துல் காதரியா கூறியதாவது: மன்றக் கூட்டம் நடந்து கொண்டிருந்த போது அவரே கைப்பட எழுதிய ராஜிநாமா கடிதத்தை கூட்டத்தில் தூக்கி எறிந்த புகைப்படம், கூட்டத்தில் செல்போனில் பேசியது தொடர்பான ஆதாரங்கள், மறுநாள் நாளிதழ்களுக்கு ராஜிநாமா செய்து விட்டதாக பேட்டியளித்தது தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் உள்ளன. அவரே சொந்த காரணங்களுக்காக ராஜிநாமா செய்வதாக எழுதிக் கொடுத்துள்ளார். தகுந்த பரிசீலனைக்குப் பிறகே பதவி நீக்கம் செய்தோம். உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தது தவறு என திமுக மேலிடம் அறிவுறுத்திய பிறகு இப்போது ராஜிநாமா செய்யவில்லை என்று பொய்யான புகாரை கூறி வருகிறார் என்றார்.

செய்தி: தினசரிகள்