முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, June 17, 2015

கீழக்கரை மக்கள் சேவை அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கும் விழா!!

No comments :
கீழக்கரையில் மக்கள் சேவை  அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கும் விழா அரூஸியா தைக்கா வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.


விழாவுக்கு அறக்கட்டளை நிறுவனர் உமர் தலைமை வகித்தார். யூசுப் சுலைஹா மருத்துவமனை இயக்குநர் செய்யது அப்துல்காதர், முன்னாள் நகர்மன்ற தலைவர் பசீர்அகமது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர் தலைவர் கமருஸமான், ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஹசன்இபுராகீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


ராமநாதபுரம் மாவட்ட அரசு காஜி ஸலாஹூதீன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக வட்டாட்சியர் செய்யது, கீழக்கரை நகராட்சி ஆணையர் முருகேசன், முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். விழாவில் 300-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கவுன்சிலர் முகைதீன் இபுராகீம், மீனவர் சங்க பிரதிநிதி அக்பர் ஆகியோர் செய்திருந்தனர். தமுமுக நகர செயலர் முஹம்மது சிராஜூதீன் விழாவினை தொகுத்து வழங்கினார். 

செய்தி: திரு. தாஹிர், கீழக்கரை

தனுஷ்கோடியில் 650 கிலோ கஞ்சா, கைப்பற்றியது இந்திய கடலோரக் காவல் படை!!

No comments :
ராமேசுவரம் அருகே தனுஷ்கோடியில்  650 கிலோ கஞ்சாவை இந்திய கடலோரக் காவல் படை செவ்வாய்க்கிழமை கைப்பற்றியது. இதன் மதிப்பு இந்தியச் சந்தையில் ரூ.65 லட்சம் இருக்கக் கூடும் எனத் தெரிகிறது.

இது குறித்து சென்னையிலுள்ள இந்திய கடலோரக் காவல் படை கிழக்கு பிராந்திய அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:  இந்திய கடலோரக் காவல் படை பாக் நீரிணைப்பு பகுதியில் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. செவ்வாய்க்கிழமை ராமேசுவரம் அருகே தனுஷ்கோடியில் நீரிலும், நிலத்திலும் செல்லும் ஹோவர்கிராப்ட் ரோந்து வாகனத்தில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு சந்தேகத்துக்குரிய முறையில் சாக்கு மூட்டைகள் குவித்து வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.


இதனையடுத்து கடலில் குதித்து நீந்திச் சென்று சாக்கு மூட்டைகளை மீட்டு சோதனையிட்டனர். அப்போது சாக்கு மூட்டைக்குள் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. 32 சாக்குப் பைகளில் சுமார் 250-க்கும் மேற்பட்ட கஞ்சா பொட்டலங்கள் வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு பொட்டலத்திலும் தலா இரண்டரை கிலோ எடையுள்ள கஞ்சா இருந்தது. பிடிபட்ட கஞ்சாவின் மொத்த எடை 650 கிலோ என அளவிடப்பட்டது. இதன் இந்திய சந்தை மதிப்பு ரூ. 65 லட்சம் ஆகும்.

 இதனையடுத்து கஞ்சாவைக் கடத்த முயன்றவர்களைப் பிடிக்க அந்தப் பகுதியில் தேடுதல் வேட்டையில் காவல் படையினர் ஈடுபட்டனர். ஆனால், அந்தப் பகுதியைச் சுற்றி சந்தேகத்திற்கிடமான படகுகளோ, ஆட்களோ தென்படவில்லை. இது குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இது குறித்து சுங்கத்துறை, போதைப் பொருள் தடுப்புத் துறை, தமிழ்நாடு காவல் துறை உள்ளிட்டவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாக் நீரிணைப்பு பகுதியில் கடலோரக் காவல் படையினர் சமீபத்தில் கண்டுபிடித்து தடுத்த மிகப் பெரிய கடத்தல் இது என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


செய்தி: தினமணி

குற்றால சீசன் தொடங்கியது!!

No comments :
தென்றல் காற்றும் இதமான சாரலுமாய் குற்றால சீசன் தொடங்கியுள்ளது. அருவிகளில் தண்ணீர் கொட்டுவதால் அங்கு சென்றுள்ள சுற்றுலா பயணிகளும், சிறு கடை வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தென்னகத்தின் ஸ்பா என்று அழைக்கப்படும் பெருமையுடையது குற்றாலம். இங்குள்ள அருவிகளில் விழும் தண்ணீர் மூலிகை குணம் நிறைந்தது.


மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழையானது அங்குள்ள அடர்ந்த வனப்பகுதிகளைக் கடந்து, பல்வேறு வகையான மூலிகைகளின் வழியாக பாய்ந்தோடி வந்து குற்றாலத்தில் அருவியாக கொட்டுகிறது. எனவே இந்த அருவி நீரில் குளிப்பது உடலுக்கு ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது.



தென்மேற்குப் பருவ மழைக் காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் குற்றாலத்தில் இதமான தென்றலும் ரம்மியமாய் பொழியும் சாரல் மழையிலும் நனைந்து கொண்டே கொட்டும் அருவிகளில் நீராடுவது அனைவருக்கும் பிடித்தமான விசயம். இதற்காகவே ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்தில் குவிகின்றனர்.


இங்குள்ள பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம், புலியருவி, தேனருவி, செண்பகாதேவி அருவி என அனைத்து அருவிகளிலும் சீசன் காலங்களில் தண்ணீர் கொட்டும்.


ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென்மேற்குப் பருவக்காற்று வீசத் தொடங்கியதுமே சீசன் ஆரம்பமாகிவிடுகிறது. இந்த ஆண்டு கடந்த 2 வாரகாலமாகவே சீசன் தொடங்காமல் போக்கு காட்டியது. இதனால் சுற்றுலா பயணிகளும், வியாபாரிகளும் ஏமாற்றமடைந்தனர். 17 நாட்களுக்குப் பின்னர் தற்போது முதன் முறையாக சாரல் மழையுடன் சீசன் தொடங்கியுள்ளது.

குற்றாலத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து தென்மேற்குப் பருவக்காற்று வீசுகிறது. நேற்று காலையில் அருவிப் பகுதிகளில் லேசான சாரல் விழுந்தது. பேரருவியில் குளிக்கும் அளவுக்கு தண்ணீர் விழுந்தது. மலைப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்தால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என்று வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.