முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, March 1, 2015

கீழக்கரை MMK செர்வீஸ் ஸ்டேசனில் வேலை வாய்ப்பு, ரூ.10,000/- வரை சம்பளம்.

No comments :
கீழக்கரை தெற்குத்தெருவில் செயல்பட்டு வரும் MMK செர்வீஸ் ஸ்டேசனில் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.


கீழக்கரையைச்சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தகுதி வாய்ந்த பணியாளர்களுக்கு ரூ.10,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

Car washing -ல் ஐந்து வருடம் அனுபவமிக்கவர்களுக்கு ரூ.12,000/-வரை சம்பளம் வழங்கப்படும்.

தொடர்புக்கு;
MMK.service station South street Kilakarai-623517 9442111444 தகவல்; திரு.MMK.ஜமால் இப்ராஹீம்

நல்ல ரெஸ்யூம் (Resume) எழுதுவது எப்படி? CV என்றால் என்ன?

No comments :
நல்ல ரெஸ்யூம் (Resume) எழுதுவது நல்ல காதல் கடிதம் எழுதுவதுபோல. கடிதத்தைப் படித்து மட்டுமே யாரும் காதலில் விழுவதில்லை. ஆனால், மோசமாக எழுதப்பட்ட காதல் கடிதம் உறவு முறிவைத்தான் தரும். அதேபோல சரியாக எழுதப்படாத ரெஸ்யூமே நேர்முகத் தேர்வு அழைப்புக்கே முட்டுக்கட்டையாக வாய்ப்புண்டு. நல்ல வேலை என்கிற சிகரத்தை அடைய நீங்கள் எடுத்து வைக்கிற முதல் அடி நல்ல ரெஸ்யூம் எழுதுவது. அதனால் நல்ல ரெஸ்யூம் எழுதுவது எப்படி என்று இந்த வாரம் பார்ப்போம்.

ரெஸ்யூம்க்கும், கரிக்குலம் விட்டே (curriculam vitea) இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என பல பேர் கேட்பதுண்டு. பொதுவாக நம் ஊரில் இரண்டு வார்த்தைகளையும் ஒரே அர்த்தத்தில் பயன்படுத்தினாலும் சில வேறுபாடுகள் இருக்கிறது. வட அமெரிக்கா போன்ற நாடுகளில் கல்வி, ஆராய்ச்சி, பட்ட மேற்படிப்பு போன்றவற்றுக்கு விண்ணப்பிக்க கரிக்குலம் விட்டே பயன்படுத்துவார்கள். அதனால் கரிக்குலம் விட்டே-யில் கல்வித் தகுதி மற்றும் ஆராய்ச்சித் துறையில் பெற்ற அனுபவங்கள், சாதனைகள், சிறப்பு தகுதிகள் போன்றவை குறிப்பிடப்பட்டிருக்கும்.

ஆனால், ரெஸ்யூம்-ன் நோக்கம் வேலைக்கு விண்ணப்பம் செய்வது மட்டுமே. ரெஸ்யூம் பொதுவாக இரண்டு பக்கங்களுக்கு மேல் போகக்கூடாது. கரிக்குலம் விட்டே என்ற லத்தீன் வார்த்தையின் சரியான மொழிபெயர்ப்பு ‘என் வாழ்க்கைப் பாதை’ என்பதே. அதனால் கரிக்குலம் விட்டே விலாவாரியாக மூன்று, நான்கு பக்கங்கள் வரை போகலாம்.

தற்போது நீங்கள் வேலைக்கு விண்ணப்பிக்காவிட்டால்கூட ரெஸ்யூம் தயார் செய்து வைத்திருப்பது நல்லது. ரெஸ்யூம் எழுதுவதில் முதல் கட்டம் உங்களைப் பற்றிய தகவல்களை ஒரே இடத்தில் சேகரித்து வைப்பது. நீங்கள் பங்கேற்ற போட்டிகளில் பெற்ற பரிசுகள், சான்றிதழ்கள், கலந்து கொண்ட பயிற்சி வகுப்புகள், ஈடுபாடுள்ள சமூகச் சேவை போன்ற மற்ற காரியங்கள் போன்ற தகவல்களை தலைப்புவாரியாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள். சிறிய சாதனையாக இருந்தால்கூட அதற்கான சான்றிதழ் இருந்தால் அவற்றையும் குறித்துக் கொள்ளுங்கள்.

கரிக்குலம் விட்டே, ரெஸ்யூம் இரண்டுக்கும் நிலையான அமைப்பு என்று எதுவுமில்லை. வேலைக்கு விண்ணப்பிக்கும் தருணத்தில் எதிர்பார்க்கப்படும் தகுதி, திறன்களுக்கு ஏற்றபடி இந்த லிஸ்டில் இருந்து எடுத்து தேவையானவற்றைச் சேர்த்து ரெஸ்யூம் தயாரிக்க வேண்டும். பொதுவாக நேர்முகத் தேர்வுக்கு அழைப்பதற்கு முன், உங்கள் ரெஸ்யூமை படிக்க ஒரு நிமிடத்திற்குக் குறைந்த நேரமே செலவிடுவார்கள். அதனால் வேலைக்குத் தேவையான மிக முக்கிய தகவல்களை முதல் பக்கத்தில் தருவது அவசியம். ரெஸ்யூமின் நோக்கம் விண்ணப்பிக்கும் வேலைக்கு நீங்கள் முழு தகுதியானவர் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுவதே.  எனவே சமயோசிதத்துடன் ரெஸ்யூம் எழுதுவது அவசியம்.

ரெஸ்யூமின் தலைப்பில் உங்கள் பெயர் மற்றும் அதற்கு கீழே உங்கள் சரியான முகவரி, கைபேசி எண், இ-மெயில் முகவரி போன்ற தகவல்களை தர வேண்டும். அதன் கீழே உங்களை பற்றியும் தொழில் தொடர்பான உங்கள் குறிக்கோள்கள் பற்றியும் இரண்டு, மூன்று வரிகளில் எழுதலாம். உங்களைப் பற்றி எழுதும்போது உங்கள் சிறப்பு திறன்கள், பெற்ற விருதுகள், பரிசுகள் பற்றி குறிப்பிடலாம். வேலை முன்அனுபவம் இல்லாத பட்சத்தில் உங்கள் கல்வித் தகுதிகளை முதலில் தரலாம். இதில் சமீபத்திய தகுதியை முதலில் தர வேண்டும். பட்டத்தின் தலைப்பு, கல்லூரி, பல்கலைக்கழகத்தின் பெயர், படித்த வருடம், மதிப்பெண் சதவிகிதம் போன்றவற்றைக் குறிப்பிட வேண்டும். கல்லூரியில் நீங்கள் முதல் மதிப்பெண்ணோ, ரேங்க்கோ பெற்றிருந்தால் அதை அடிக்கோடிட்டு காட்டலாம்.

வேலை முன்அனுபவம் இருக்கும் பட்சத்தில் அதை கல்வித் தகுதிக்கு முன் தரலாம். வேலை முன் அனுபவத்தை இரண்டு விதமாக பட்டியலிடலாம்:

1. கால அடிப்படை (chronoligical  order): வெவ்வேறு காலகட்டத்தில் நீங்கள் பணிபுரிந்த நிறுவனம் மற்றும் பதவி, மேலும் அங்கு நீங்கள் ஆற்றிய முக்கிய கடமைகள்.
2. திறன்கள் அடிப்படை (functional  order): வேலைத் திறன்கள் சார்ந்து நீங்கள் வெவ்வேறு நிறுவனங்களில் பெற்ற அனுபவங்கள். ஒரே நேரத்தில் பல பகுதிநேர வேலைகள் செய்திருந்தால் அதை குறிப்பிடுவது நல்லது.
வேலை முன்அனுபவம், கல்வித் தகுதிக்குப் பிறகு நீங்கள் விண்ணப்பிக்கும் வேலை தொடர்பான உங்கள் தனித்திறன்கள், பெற்ற அனுபவங்களை குறிப்பிடலாம். வேலை தொடர்பான அனுபவங்கள் என்பது நீங்கள் சென்ற பயிற்சி வகுப்புகள், கல்லூரி மற்றும் சம்மர் புராஜெக்ட்கள், உங்கள் துறை சார்ந்த குழுக்களில் உங்கள் பங்கேற்பு போன்றவற்றைக் குறிக்கும்.
இவற்றைத் தகுந்த தலைப்பிட்டு பட்டியலிட வேண்டும். இவற்றைச் சுருக்கமான வாக்கியங்களாகவோ, புல்லட் புள்ளிகளாகவோ தரலாம். நற்சான்று தரும் நபர்களின் (References) தகவல்களை கேட்கப்பட்டிருந்தால் மட்டுமே தர வேண்டும்.


பகிர்வு: திரு அஜீஸ் அஹமது, துபை


2015 பட்ஜெட் துளிகள்

No comments :

பென்ஷன் திட்டத்தால் கூடுதல் வரிச்சலுகை

தேசிய பென்ஷன் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள கூடுதல் சலுகையால் வருமான வரியில் வரிச்சலுகை கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு பட்ஜெட்டில் அதிகரிக்கப்படாதது மாத சம்பளக்காரர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனினும், புதிய பென்ஷன் திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டில் ரூ.50,000 வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், வருமான வரி சட்டம் 80 சி மற்றும் 80சிசிடி பிரிவுகளின் கீழ் ஏற்கனவே ரூ.1.5 லட்சம் வரை சலுகை பெற முடிந்தது. இப்போது இது ரூ.2 லட்சமாக அதிகரிக்கும் என்று எர்னஸ்ட் & யங் தணிக்கை நிறுவனத்தின் முதன்மை வரி அதிகாரி மயூர் ஷா தெரிவித்துள்ளார்.
இது தவிர, மாத சம்பளம் வாங்குவோருக்கு போக்குவரத்து படி விலக்கு தொகை ரூ.800-ல் இருந்து ரூ.1,600 ஆகவும் மருத்துவ காப்பீடுக்கான பிரீமியம் தொகை வரம்பு 15,000-ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்துக்கு சிறப்பு நிதியுதவி: பிஹாருக்கும் உதவி

மேற்கு வங்க மாநிலத்துக்கு சிறப்பு நிதியுதவி அளிக்கப்படும் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.
பட்ஜெட் உரையில் ஜேட்லி கூறுகையில், ‘‘பிஹார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு சிறப்பு நிதியுதவி அளிக்கப்படும். ஆந்திராவுக்கு அளிக்கப்பட்டதைப் போல இந்த மாநிலங்களுக்கும் சிறப்பு நிதியுதவி அளிக்கப்படும்’’ என்றார். இந்த மாநிலங்களுக்கு எவ்வளவு நிதியுதவி அளிக்கப்படும் என்பது குறித்து மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் என்று தெரிகிறது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மாநில அரசு ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் கடனில் சிக்கியிருப்பதாகவும் கடனை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகிறார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச திட்டமிட்டிருப்பதாகவும் மம்தா பானர்ஜி கடந்த புதன்கிழமை கூறியிருந்தார்.
இதேபோல, பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரும் தங்கள் மாநிலத்துக்கு மத்திய அரசிடம் சிறப்பு நிதியுதவி அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆதார் திட்டத்துக்கு ரூ.2,000 கோடி

ஆதார் அட்டை திட்டத்துக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. காஸ் மானியம் உட்பட பல்வேறு திட்டங்களுக்கும் சலுகைகள் பெறவும் ஆதார் அட்டை தேவையாக உள்ளது. ஆதார் அட்டை வழங்கும் திட்டத்துக்கு 2015-16ம் நிதியாண்டில் ரூ.2,039.64 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டுள்ளது.
ஏற்கனவே, இத்திட்டத்துக்கு 1,617.73 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது. ஆனால், பட்ஜெட்டில் கூடுதலாக 23.63 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

விண்வெளி துறைக்கு ரூ. 6,000 கோடி ஒதுக்கீடு

விண்வெளி ஆராய்ச்சித் துறைக்கு பட்ஜெட்டில் ரூ. 6 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது மத்திய அரசு.
இதில் ஏவுவாகன தொழில்நுட்ப திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இதற்காக ரூ.2,148 கோடியும் ஏவுதல் சார்ந்த திட்டங்கள் மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்புக்கு ரூ. 651 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜிசாட், இன்சாட் செயற்கைக்கோள் உள்ளிட்ட இன்சாட் திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ. 1,281 கோடி ஒதுக்கியுள்ளது.
செயற்கைக்கோள் ஏவுவதற்காக ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தாவன் விண்வெளி ஆய்வு மையத்தில் அமையும் 3-வது ஏவு தளத்துக்கு அரசு ரூ.385 கோடி ஒதுக்கியுள்ளது.
நிலவை ஆராய்வதற்கான சந்திரயாண் திட்டம் உள்ளிட்ட எதிர்கால திட்டங்களுக்காக ரூ. 40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பகுதிகளில் திரைப்படத் தயாரிப்பு மையம்

வடகிழக்குப் பகுதிகளில் திரைப்படத் தயாரிப்பு மையம் ஒன்றை மத்திய அரசு உருவாக்க உள்ளதாக, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனது உரையில் கூறும்போது, "வடகிழக்குப் பகுதியில் திரைப்படத் தயாரிப்பு மையம் ஒன்று ஏற்படுத்தப்படும். இந்தப் பகுதியின் வளர்ச்சிக்கு மத்திய அரசு சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறது" என்றார்.

தொழில்நுட்ப தொழில்முனைவோருக்கு ரூ.1,000 கோடி நிதியம்

தொழில்நுட்பத்தில் புதிய தொழில் தொடங்கும் தொழில் முனைவோருக்கு பட்ஜெட்டில் ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கினார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி.
ஐடி மற்றும் ஐடிஇஎஸ் துறை ஆண்டுக்கு 11,900 கோடி டாலர் அளவுக்கு வருமானம் ஈட்டுகிறது. இந்த துறையில் நேரடியாக 40 லட்சம் பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
இப்போது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, புதிய ஐடியாக் களை கொண்டு பல தொழில் முனைவோர்கள் உருவாகி வருகிறார்கள். அவர்கள் இந்த யோசனைகளை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்வதற்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது என்றார்.
நமது இளைஞர்களை சரியான வழியில் பயன்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும். இதற்கு, தொழில் புரிவதற்கான சூழல், நிதி திரட்டும் வசதி உள்ளிட்டவை பிரச்சினைகளாக இருக்கின்றன. இவற்றை சரி செய்யும் போது லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றார். இதற்காக 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நேற்று முன் தினம் வெளியான பொருளாதார ஆய்வறிக்கையில் அதிக தொழில் தொடங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தில் இருக்கிறது என்று குறிப்பிட்டது. சுமார் 3100 நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.
மத்திய புள்ளியியல் மையத் தின் தகவல் படி இந்திய ஜிடிபியில் கணிப்பொறி சேவை பிரிவு மட்டும் 3.3 சதவீத பங்கு வகிக்கிறது. இந்த துறை 2013-14ம் ஆண்டில் 14.4 சதவீதம் வளர்ச்சி அடைந்தது.

ஏர் இந்தியாவுக்கு ரூ.2,500 கோடி

நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பொதுத்துறை நிறுவ னமான ஏர் இந்தியாவுக்கு ரூ. 2,500 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
மத்திய அரசின் கூடுதல் முதலீடாக இந்தத் தொகை இருக்கும். இது 2015-16-ம் நிதி ஆண்டில் ஒதுக்கப்படும். கடந்த நிதி ஆண்டில் ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு ரூ. 6,500 கோடி ஒதுக்கியது. இந்நிறுவனத்துக்கு மொத்தம் ரூ. 40 ஆயிரம் கோடி கடன் உள்ளது.
2012-ம் ஆண்டில் ஏர் இந்தியா நிறுவனத்தை சீரமைக்க ரூ. 30 ஆயிரம் கோடி ஒதுக்குவதென முடிவு செய்யப்பட்டு அது 9 ஆண்டுகளில் வழங்க முடிவு செய்யப்பட்டது.
ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட ரூ. 30 ஆயிரம் கோடி கூடுதல் முதலீடு தவிர இதுவரையில் முற்றிலும் மாற்ற இயலாத கடன் பத்திரங்கள் வாயிலாக ரூ.7,400 கோடியை ஏர் இந்தியா திரட்டியுள்ளது.

செல்வ வரி ரத்து: ரூ.1 கோடிக்கு மேல் சம்பாதித்தால் 2 சதவீதம் கூடுதல் வரி

செல்வ வரி ரத்து செய்யப்படும் என்றும் ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் சம்பாதிப்ப வர்களுக்கு 2 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டுள்ளது.
பட்ஜெட் உரையில் நிதிய மைச்சர் அருண் ஜேட்லி கூறிய தாவது: செல்வ வரி ரத்து செய்யப்படும். அதற்கு பதிலாக, ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்களுக்கு 2 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும். செல்வ வரி ரத்து செய்யப்படுவதால் அரசுக்கு ரூ.1,000 கோடி இழப்பு ஏற்படும். ஆனால், ஒரு கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு விதிக்கப்படும் கூடுதல் வரியால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.9,000 கோடி வருவாய் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிறுவனங்களுக்கான வரி அடுத்த நான்கு ஆண்டுகளில் 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைக்கப்படும்.
இவ்வாறு அருண் ஜேட்லி கூறினார்.
2013ம் ஆண்டில் அப்போது நிதியமைச்சராக இருந்த சிதம்பரம், ஆண்டுக்கு ஒரு கோடிக்கு மேல் வருமானவர் உள்ளவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார். அப்போது, 42,800 பேர் இந்த பட்டியலில் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நிறுவன வரி 25 சதவீதமாக குறைக்கப்படும்

தற்போது 30 சதவீதமாக இருக்கும் பெரு நிறுவனங்கள் (கார்ப்பரேட்) மீதான வரி வரும் நான்கு ஆண்டுகளில் படிப்படியாக குறைக்கப்பட்டு 25 சதவீதமாக்கப்படும் என்றும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் பல துறைகளில் தொழில் தொடங்க ஊக்குவிப்பாக இந்த நடவடிக்கை இருக்கும். இந்த நடவடிக்கை காரணமாக அதிக முதலீடுகள் வரும் அதை தொடர்ந்து வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவை உயரும் என்றும் அவர் தெரிவித்தார். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது அதிகமாக கார்ப்பரேட் வரி இருந்தாலும் கூட,கூடுதல் சலுகைகளால் பெரிய வருமானம் கிடைக்கவில்லை என்றார். அதனால் கார்ப்பரேட் வரியைக் குறைக்கும் அதே சமயத்தில் படிப்படியாக இதர சலுகைகளும் குறைக்கப்படும் என்றார். அனைத்து வித கூடுதல் வரிகளையும் சேர்த்து இந்தியாவின் கார்ப்பரேட் வரி 33.99 சதவீதமாக இருக்கிறது.

இறக்குமதி செல்போன் டேப்லட் விலை உயரும்

மொபைல் போன், டேப்லட் கம்ப்யூட்டர் ஆகியவற்றின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இந்நிறுவனங்களுக்கு வரிப் பயன்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. மொபைல் ஹேண்ட்செட்களுக்கான உற்பத்தி வரி தற்போது, சென்வாட் கிரெடிட் உடன் 6 சதவீதமாக உள்ளது. இது தற்போது சென்வாட் கிரெடிட் இல்லாமல் 1 சதவீதம் அல்லது சென்வாட் கிரெடிட் உடன் 12.5 சதவீதம் என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இதுபோல் டேப்லட் கம்யூட்டர்களுக்கான உற்பத்தி வரி சென்வாட் கிரெடிட் இல்லாமல் 2 சதவீதம், சென்வாட் அல்லது கிரெடிட் உடன் 12.5 சதவீதம் என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. உற்பத்தியாளர்கள் அல்லது கடைசி பொருளை தயாரிப்பவர்கள் இந்த சென்வாட் கிரெடிட்டை பெற்றுக்கொள்ளலாம்.
இதன் மூலம் இறக்குமதி செய்பவர்களை விட உள்ளூர் உற்பத்தியாளர்கள் பலன் அடைவார்கள் என்று தொழில் துறையினர் தெரிவிக்கின்றனர். மேலும் டேப்லட் கம்ப்யூட்டர்களுக்கான உதிரிபாகங்களுக்கு, அடிப்படை சுங்க வரியில் இருந்து விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

சீனா, பாக். எல்லையில் சாலை அமைக்க ரூ.620 கோடி

சீனா, பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் சாலை அமைக்கவும் கட்டமைப்பை மேம்படுத்தவும் பட்ஜெட்டில் ரூ.620 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலம் லடாக்கில் இருந்து அருணாசலபிரதேசம் வரை 4,056 கி.மீ. நீளமுள்ள இந்தோ -சீனா எல்லைப் பகுதியை கவனத்தில் கொண்டு அங்கு சாலைப் பணிகளுக்கு பட்ஜெட்டில் ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல, ஜம்மு காஷ்மீரில் இருந்து குஜராத் வரை 3,323 கி.மீ. நீளமுள்ள பாகிஸ்தான் எல்லையிலும் சாலைப் பணிகளுக்காக ரூ.320 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, 699 கி.மீ. நீளமுள்ள இந்தோ - பூடான் எல்லைப் பகுதியில் சாலைகள் அமைக்க ரூ.50 கோடியும், 1,643 கி.மீ. நீளமுள்ள இந்தோ-மியான்மர் எல்லைப் பகுதியில் சாலைப் பணிகளுக்கு ரூ.20 கோடியும் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.