(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, December 10, 2015

வெள்ளத்தில் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு இலவசமாக நகல்கள் வழங்க சிறப்பு முகாம்!!

No comments :
அண்மையில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு இலவசமாக நகல்கள் வழங்க அரசு சார்பில் வரும் 14ம் தேதி முதல் 2 வாரங்களுக்கு சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

பள்ளிக்கல்வி இயக்குனர் ச. கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

சமீபத்தில் பெய்த கன மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் அதிக பாதிப்புக்குள்ளான மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் மீட்பு, நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்தும் முதலமைச்சர் ஜெயலலிதா வெள்ளத்தின் காரணமாக பொதுமக்கள் தங்களது கல்விச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் இழந்துள்ளனர் என தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதை தொடர்ந்து மேற்சொன்ன ஆவணங்களை இழந்துள்ள மாணவர்களுக்கு அவற்றின் நகல்களை உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.


முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர் உள்ளிட்ட வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் வெள்ளத்தின் காரணமாக கல்விச் சான்றிதழ்களை இழந்துள்ள பொதுமக்களுக்கு விண்ணப்பத்தின் பேரில் அவற்றின் நகல்களை அவர்களுக்கு உடனடியாக வழங்குவதற்கு வருகின்ற 14-ந்தேதி முதல் 2 வாரங்களுக்கு அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் சிறப்பு முகாம் நடத்திடவும், உரிய வழிமுறைகளை பின்பற்றி ஒரு வாரத்திற்குள்ளாக கல்வி சான்றிதழ்களின் நகல்களை உரியவர்களுக்கு கட்டணமின்றி வழங்கிடவும் அரசு ஆணையிட்டுள்ளது. 8, 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் உட்பட அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் நடத்தப்பட்டுவரும் அனைத்துத் தேர்வுகளின் சார்பாக வழங்கப்பட்டு, வெள்ள பாதிப்பின் காரணமாக இழக்கப்பட்டுள்ள மதிப்பெண்/ பட்டயச் சான்றிதழ்களுக்கு தனித்தனியாக பொதுமக்களிடமிருந்து கட்டணம் ஏதுமின்றி இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பெற்று, அரசுத் தேர்வுகள் இயக்ககத்திற்கு அனுப்ப உரிய நடவடிக்கை மேற்கொள்ள, சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ள தலைமை ஆசிரியர்களுக்கு சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுரை வழங்க வேண்டும்.

சிறப்பு முகாம் அமைக்கப்பட உள்ள பள்ளிகளில் இப்பணிக்காக தனி அலுவலர்கள் நியமனம் செய்திட வேண்டும். ஒவ்வொரு நாளும் பெறப்படும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தேர்வு வாரியாக தொகுத்து, பட்டியலிட்டு, பெறப்பட்ட விண்ணப்பங்களை உரிய மாவட்டக் கல்வி அலுவலர்களது மேலொப்பத்துடன் சென்னை-6, அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் நேரில் ஒப்படைக்க வேண்டும். அரசுத் தேர்வுகள் இயக்ககத்தை சார்ந்த அலுவலர்கள் விண்ணப்பங்களை ஆய்வு செய்து, மறுபிரதி சான்றிதழ்களை உரிய முகாம்களில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூலமாக குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வழங்குவர்.


10-ஆம் வகுப்பிற்கு கீழ் உள்ள வகுப்புகளுக்கு மாற்று சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களுக்கு பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று அதனை பள்ளிகளில் உள்ள ஆவணங்களுடன் சரிபார்த்து எவ்வித கட்டணமுமின்றி வழங்க அந்ததந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment