(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, November 28, 2015

உப்பு கருவாடு - தமிழ் திரை விமர்சனம்!!

No comments :
நடிகர்கள்: கருணாகரன், நந்திதா, எம்எஸ் பாஸ்கர், ரஷிதா, மயில்சாமி, சதீஷ், சாம்ஸ்
ஒளிப்பதிவு: மகேஷ் முத்துசாமி
இசை: ஸ்டீவ் வாட்ஸ்
வசனம்: பொன் பார்த்திபன்
தயாரிப்பு: ராம்ஜி நரசிம்மன்

இயக்கம்: ராதாமோகன்

ஒரு சுமாரான முதல் படம் எடுத்த இயக்குநர்... அவரது அடுத்த படம் பாதியில் நின்று போகிறது. சினிமாவைத் தவிர எதுவும் தெரியாத அந்த இளைஞர் தன்னை நம்பி நிற்கும் நான்கு பேருடன் சேர்ந்து வாய்ப்புக்கு அலைகிறார். அப்போது கடல்புரத்தில் உள்ள ஒரு பெரிய மனிதர் அவர்களை வைத்து படம் தயாரிக்க முன்வருகிறார், ஒரு நிபந்தனையுடன். அதாவது ஹீரோயின் அவர் மகளாக இருக்க வேண்டும்! வேறு வழியில்லை. ஒப்புக் கொள்கிறார்கள். நடிப்பு என்றால் வீசை என்ன விலை என்று கேட்கும் அந்தப் பெண்ணை எப்படியோ கஷ்டப்பட்டு தேற்றுகிறார்கள். சரியாக ஷூட்டிங் ஆரம்பிக்கும் நாளன்று ஹீரோவும் ஹீரோயினும் காணாமல் போக... மொத்த யூனிட்டையும் அடி வெளுத்துவிடுகிறார் பெரிய மனிதர். இயக்குநரையும் அவருடன் உள்ளவர்களையும் சிறைப்படுத்திவிடுகிறார்.

ஹீரோவும் ஹீரோயினும் ஓடிப்போய்விட்டார்களா என்றால், ம்ஹூம்... அங்குதான் தேவயானி - ராஜகுமாரன் லவ் ஸ்டோரி ரேஞ்சுக்கு ஒரு ட்விஸ்டு வைத்திருக்கிறார் ராதா மோகன். ஹீரோயின் எங்கே போனார்... இயக்குநர் படம் எடுத்தாரா? என்பதெல்லாம் கலகலப்பான இரண்டாம் பாகம்! படம் ஆரம்பிக்கும்போது, என்னடா இது, இன்னுமொரு சினிமாவுக்குள் சினிமா கதையா? என்ற கேள்வி எழுந்தாலும், பொன் பார்த்திபனின் வசனங்கள் அந்த கேள்வியை சிறடிக்கின்றன. நொடிக்கொரு அதிர்வேட்டாக வெடிக்கின்றன வசனங்கள். சினிமாக்காரர்களுக்கு நன்கு புரியும் இந்த வசனங்கள், வெகு ஜனங்களிடம் எந்த அளவு போய்ச் சேரும் என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும். கருணாகரனுக்கு மிகப் பெரிய வாய்ப்பு. பெரிதாக அவர் உணர்ச்சிகளைக் கொட்டி நடிக்கவில்லை என்றாலும், மாரிமுத்துவிடம் ஆவேசமும் தன்னிரக்கமும் கலந்து கட்டி பேசும் நான் ஸ்டாப்பாக வசனங்கள்... அபாரம். "சமூகத்தை அவமானப்படுத்துவதாகக் கொந்தளிக்கிறீங்களே..." என்று ஆரம்பித்து எந்தெந்த அநியாயங்களையெல்லாம் கைகட்டி வாய் மூடி வேடிக்கைப் பார்க்கிறது இந்த சமூகம் எனப் பட்டியலிடும் அந்தக் காட்சி சாட்டையடி!

"
சண்முகத்தை அவமானப்படுத்திட்டீங்கன்னு சொல்றாங்களே... யாருங்க அந்த சண்முகம்?" என்று அப்பாவியாக சவுட் செந்தில் கேட்குமிடத்தில் வெடிச் சிரிப்பு. அந்த மலையாளப் பாடகரும் டவுட் செந்திலும் கட்டி உருளாத குறை. ஆனால் அதற்கும் மேலான எஃபெக்ட் பாடகரிடம் மாட்டிக் கொண்டு செந்தில் முழிக்கும் காட்சிகள்! படம் தயாரிக்கிறேன் என்று முன்வரும் சில 'அய்யாக்கள்' கவிதை எழுதுவதாக, பாடல் இயற்றுவதாகச் சொல்லிக்கொண்டு கொடுக்கும் இம்சைகளை இதைவிட நக்கலாக யாரும் சொல்லிவிட முடியாது. 

நந்திதாவின் லூஸ்தனமான நடிப்பு ஓகேதான். ஆனால் அவர் சிரித்தால்தான் பக்கென்று ஆகிவிடுகிறது. மயில்சாமியை இந்தப் படத்தில்தான் முழுமையாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். 'கேஸ் போனாலும் நல்ல சகுனம்தான்யா' என்று அவர் நியாயப்படுத்தும் காட்சி இன்னொரு அதிர்வெடி! மேஜர் சுந்தரராஜன் குரலில் திண்டுகல் சரவணன் மிமிக்ரி செய்யும்போது சிரித்து சிரித்து கண்ணில் தண்ணி வந்துவிட்டது போங்க. எதற்கெடுத்தாலும் மூதுரை அல்லது திருக்குறல் சொல்லும் சாம்ஸ், பழசான அவரை மாடர்னாக்கும் நாராயணன், சரவணன் மீனாட்சி ரஷிகா, வில்லன் ரேஞ்சுக்கு அறிமுகமாகி நல்லவராக மாறிவிடும் மாரிமுத்து என அத்தனை கேரக்டர்களையுமே வெகு சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர் ராதா மோகன். குமரவேலிடம் ராதா மோகனால் மட்டும்தான் இப்படியெல்லாம் நடிக்க வைக்க முடியும் போலிருக்கிறது. இரண்டே நிமிடங்களில் தன் காதல் ப்ளாஷ்பேக்கைச் சொல்லி கலங்கடிக்கிறார்.

எந்த வசனம் இந்த தலைமுறைக்குப் பிடிக்காது, மொக்கை என்று இயக்குநர் ஒதுக்கினாரோ, அந்த வசனத்தை நிஜத்தில் பயன்படுத்தி வாழ்க்கையை ஜெயிக்கும் அந்தப் பாத்திரம், சினிமாவை எவராலும் கணித்து எடுக்க முடியாது என்பதற்கு ஒரு சோறு பதம்! ராதா மோகனின் விறுவிறு திரைக்கதை, பொன் பார்த்திபன் வசனங்கள், மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு, ஜெய்யின் ஷார்ப் கட்... உப்புக் கருவாட்டை சுவையாக்கிய சமாச்சாரங்கள் இவைதான். இசை பெரிதாகக் கை கொடுக்கவில்லை. ஏன், அதை கவனிக்கக் கூடத் தோன்றவில்லை, அடுத்தடுத்து சரவெடியாய் வந்து கொண்டே இருக்கும் துணுக்குகளால். க்ளைமேக்ஸை முடித்தவிதம், ஏற்கெனவே தொன்னூறுகளில் பார்த்த சில படங்களை நினைவூட்டினாலும், இந்தப் படத்துக்கு அதுதான் பொருத்தம். லேசா உப்புக் கரிச்சாலும், டேஸ்ட் நல்லாருக்கு!

விமர்சனம்: ஒண் இண்டியா

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment