Wednesday, November 11, 2015
பயணிகளின் வசதிக்காக சென்னை– ராமேசுவரம் ரெயில்களின் வழித்தடத்தை மாற்ற வேண்டும் - அன்வர்ராஜா எம்.பி!!
ராமநாதபுரம் மாவட்ட பயணிகளின் வசதிக்காக சென்னை– ராமேசுவரம்
ரெயில்களின் வழித்தடத்தை மாற்ற வேண்டும் என்று அன்வர்ராஜா எம்.பி. வலியுறுத்தி
உள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட மக்களின் ரெயில் தேவைகள் குறித்து
பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக ராமநாதபுரத்தில் அன்வர்ராஜா எம்.பி. நிருபர்களிடம்
கூறியதாவது:–
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடத்திற்கு நாட்டின்
பல்வேறு பகுதிகளில் இருந்தும் பயணிகள் வந்து செல்ல வசதியாக தங்கச்சிமடம் பகுதியில்
ரெயில் நிலையம் அமைக்க வேண்டும். தற்போது நேர மாறுபாடு காரணமாக 2 சென்னை ரெயில்களிலும் மக்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
இதனை போக்கும் வகையில் சென்னை–ராமேசுவரம்
ரெயில்களின் வழித்தடத்தை மாற்றவேண்டும்.சென்னையில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் சேது எக்ஸ்பிரஸ் ரெயிலை அரியலூர், விருத்தாச்சலம் வழியாக இயக்குவதற்கு பதிலாக மயிலாடுதுறை, தஞ்சாவூர் வழியாக இயக்க வேண்டும். இதனால் காலை 5 மணிக்கு ராமநாதபுரம் வந்தடையும். இதேபோல சென்னையில் இருந்து இரவு 9.40
மணிக்கு புறப்படும் ரெயிலை மயிலாடுதுறை, தஞ்சாவூர் வழியாக இயக்குவதற்கு பதிலாக விருத்தாச்சலம், அரியலூர் வழியாக இயக்கினால் காலை 8 மணிக்கு
முன்னதாக ராமநாதபுரம் வந்துவிடும். சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து
அதிகஅளவில் ரெயில் வந்து செல்வதால் ராமேசுவரத்தில் இருந்து தாம்பரத்திற்கு பகல்
நேர எக்ஸ்பிரஸ் ரெயில் விட வேண்டும்.
ராமேசுவரத்தில் இருந்து மங்களூருக்கு மதுரை, பொள்ளாச்சி,
பாலக்காடு வழியாக பகல்நேர எக்ஸ்பிரஸ் ரெயில் விட வேண்டும்.
சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலை ராமேசுவரம் வரை நீட்டிக்க வேண்டும். ஓகா எக்ஸ்பிரஸ்
ரெயிலை வாரம் 3 முறை இயக்க வேண்டும். மானாமதுரையில்
இருந்து புறப்படும் மன்னார்குடி ரெயிலை இணைக்கும் வகையில் ராமேசுவரத்தில் இருந்து
காலை 11.50 மணிக்கு புறப்படும் மதுரை பயணிகள் ரெயிலின்
நேரத்தினை காலை 11.15 மணியாக மாற்ற வேண்டும்.
மண்டபம் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தனியார் முகவர்
மூலம் டிக்கெட் வழங்கும் முன்பதிவு வசதி ஏற்படுத்தவேண்டும். உச்சிப்புளி ரெயில்
நிலையத்தில் சென்னை ரெயில்கள் நின்று செல்ல முதல்கட்டமாக தனியார் டிக்கெட் முகவர்
மூலம் அனைத்து டிக்கெட்டுகளும் வழங்கும் வசதி ஏற்படுத்தி அதன் மூலம் கிடைக்கும்
வருவாயை கணக்கிட்டு விரைவில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க
வேண்டும். மதுரையில் காத்திருக்கும் வெளிமாநில ரெயில்களை ராமேசுவரம் வரை நீட்டிக்க
வேண்டும்.
குறிப்பாக மண்டபம் ரெயில் நிலையத்தில் முன்பதிவு வசதி, உச்சிப்புளியில்
எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு தனியார் முகவர் முன்பதிவு வசதி, சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வழித்தட மாற்றம், தங்கச்சிமடத்தில் ரெயில் நிலையம், தாம்பரத்தில்
இருந்து பகல்நேர எக்ஸ்பிரஸ் ரெயில், சிலம்பு எக்ஸ்பிரஸ்
ரெயில்களை ராமேசுவரம் வரை நீட்டித்தல் போன்ற கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக
இருப்பதால் உடனடியாக நிறைவேற்றுவதாக அதிகாரிகள் உறுதியளித்து உள்ளனர். ராமநாதபுரம்
மாவட்ட மக்களின் தேவைக்கான இதுபோன்ற திட்டங்களை ரெயில்வே அமைச்சகத்திடம் தொடர்ந்து
வலியுறுத்தி நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment