(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, October 17, 2015

அமெரிக்காவில் விருது பெற்று பாம்பன் திரும்பிய மீனவப் பெண் திருமதி. லட்சுமியை பொதுமக்கள் வரவேற்றனர்!!

No comments :
கடல் வளங்களை பாதுகாத்தலுக்காக அமெரிக்காவில் விருது பெற்று பாம்பன் திரும்பிய மீனவப் பெண்ணை பொதுமக்கள் வரவேற்றனர்.


ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் சின்னப் பாலம் பகுதியில் வசித்து வருபவர் மீனவப் பெண் லட்சுமி. இவர் மன்னார் வளைகுடா பாசி சேகரிப்பு பெண்கள் கூட்டமைப்பில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை ஒரு குழுவாக வைத்து அதன் பொறுப்பாளராக உள்ளார். 

இவர்பாம்பன் முதல் மண்டபம் வரை தீவு அருகே உள்ள கடல் பகுதியில் பாசி சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். பாசி சேகரிப்பில் மீனவப் பெண்களை ஒரு கட்டுப்பாடுடனும்பாசிகள் முழுமையாக அழியாமல் இருப்பதற்காக குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே பாசி சேகரிப்பில் ஈடுபடுத்தி வந்தார். இந்தநிலையில் கடல் வளங்களை பாதுகாத்தலுக்கான விருதுக்கு அமெரிக்காவில் உள்ள சீக்காலஜி என்ற தொண்டு நிறுவனத்திடம் பாம்பன் லட்சுமி பெயரை பேடு தொண்டு நிறுவனமும்மீன் பிடி தொழிலாளர் யூனியன் கூட்டமைப்பும் பரிந்துரை செய்தன. அதன்பேரில் கடல்வளங்களை பாதுகாத்தலுக்கான விருது மற்றும் 10 ஆயிரம் அமெரிக்க டாலரை (இந்திய மதிப்பு ரூ.6 ½ லட்சம் ) மீனவப் பெண் லெட்சுமிக்கு அமெரிக்காவில் சீக்காலஜி தொண்டு நிறுவனம் வழங்கியது. 




இந்த விருதை அமெரிக்கா சென்று பெற்ற அவர், பாம்பன் திரும்பினார். அவரை மேளதாளம் முழங்க பாம்பன் சின்னப்பாலம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், பேடு தொண்டு நிறுவன நிர்வாகிகள், மீன் பிடிதொழிலாளர் யூனியன் கூட்டமைப்பு நிர்வாகிகள், ஊராட்சி மன்றத் தலைவர் பேட்ரிக், பள்ளி மாணவ-மாணவிகள், ஜமாத் நிர்வாகிகள் வரவேற்று ஊர்வலமாக அழைத்துச்சென்றனர். 

இதுகுறித்து லட்சுமி கூறியதாவது:- 

கடல் வளங்களை பாது காத்தலுக்கான விருதுக்கு எனது பெயரை பரிந்துரை செய்து விருது பெற பரிந்துரை செய்த மன்னார் வளைகுடா பாசிசேகரிப்பு மீனவப் பெண்கள் கூட்டமைப்பிற்கும், தொண்டு நிறுவனம் மற்றும் மீன் பிடி தொழிலாளர் யூனியனுக்கும், விருதை வழங்கி கவுரவித்த அமெரிக்காவில் உள்ள சீக்காலஜி தொண்டு நிறுவனத்திற்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அமெரிக்காசென்று இந்த விருது வாங்கி வந்தது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. விருதுடன் கிடைத்த பரிசுத் தொகையை பாம்பன் சின்னப்பாலத்தில் உள்ள அரசு பள்ளியின் கட்டமைப்பிற்கும், சின்னப்பாலம் கிராமத்தின் அடிப்படை கட்டமைப்பிற்கும் பயன்படுத்துவேன். 
செய்தி; தினத்தந்தி


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment