(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, October 3, 2015

ராமநாதபுரம் கதர் விற்பனை நிலையத்தில் சிறப்பு தள்ளுபடி விற்பனை!!

No comments :
ராமநாதபுரம் கதர் விற்பனை நிலையத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி தீபாவளி கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட கலெக்டர் நந்தகுமார் தொடங்கி வைத்தார்.

ராமநாதபுரம் கதர் விற்பனை நிலையத்தில் காந்திஜெயந்தியையொட்டி தீபாவளி கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் மாவட்ட கலெக்டர் கலந்து கொண்டு காந்தியடிகளின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி தீபாவளி கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்தார். 

அப்போது அவர் பேசியதாவது:– 

தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம், கிராமப்புற கைவினைஞர்களை கொண்டு நூற்பு மற்றும் நெசவு தொழிலை முழுநேரம் மற்றும் பகுதி நேர வேலை வாய்ப்பு வழங்கி செயல்பட்டு வருகிறது. பொருளாதாரத்தில் நலிவடைந்த, வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை, எளிய மக்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்து, அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு அண்ணா, பெரியார், காமராஜர் மற்றும் காந்தியடிகள் உள்ளிட்ட தலைவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டும் மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டும் மத்திய மற்றும் மாநில அரசுகள் கதர் ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கிட அனுமதி அளித்துள்ளது.

மேலும் அரசுப்பணியாளர்களும், தனியார் நிறுவன ஊழியர்களும் கதர் ரகங்கள் கடன் முறையில் வாங்கி பயன்பெறும் வகையில் அரசால் சலுகையும் வழங்கப்பட்டுள்ளது. மதுரை கதர் கிராமத் தொழில்கள் உதவி இயக்குனர் அலுவலக கட்டுப்பாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 கதர் விற்பனை நிலையங்கள், 1 கிராமிய நூற்பு நிலையம், 1 கதர் உப கிளை ஆகியவற்றில் கதர் விற்பனை, கதர் நூல் உற்பத்தி, கதர் துணி உற்பத்தி நடைபெற்று வருகிறது.


தள்ளுபடி சலுகை
இந்த அலுவலக கட்டுப்பாட்டில் செயல்படும் கதர் அங்காடிகளுக்கு 2014–ம் ஆண்டு தீபாவளி சிறப்பு விற்பனைக்காக ரூ.25 லட்சம் குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டு ரூ.14 லட்சத்து 74 ஆயிரம் மதிப்பில் கதர் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 2015–ம்ஆண்டிற்கு ரூ.25 லட்சம் குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அரசு வழங்கியுள்ள தள்ளுபடி சலுகைகளை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி கதர், பட்டு, பாலிஸ்டர், உல்லன் ரகங்கள் மற்றும் ரெடிமேட் சட்டைகள், மெத்தைகள், தலையணைகள் போன்றவற்றை வாங்கி பயன்பெறலாம்.


இவ்வாறு அவர் பேசினார். விழாவில் உதவி போலீஸ் சூப்பிரண்டு சர்வேஸ்ராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில்குமார், பனைவெல்லம் கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குனர் முத்துக்குமார், மதுரை கதர் கிராமத்தொழில்கள் கண்காணிப்பாளர் சீனிவாசன், ராமநாதபுரம் கதர் கிராமத் தொழில் மேலாளர்கள் ராமரத்தினம், சரவணபாண்டியன், கதிஜாபீவி மற்றும் தியாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment