(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, September 22, 2015

தொலைதூர கல்வியில் வழங்கப்படும் அனைத்து பட்டங்களும் அரசு வேலைவாய்ப்பு மற்றும் உயர்படிப்புகளுக்கு செல்லத்தக்கவை என மத்திய அரசு அறிவிப்பு!!

No comments :
திறந்தவெளி மற்றும் தொலைதூர கல்வியில் வழங்கப்படும் அனைத்து பட்டம் பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகள் அரசு வேலைவாய்ப்பு மற்றும் உயர்படிப்புகளுக்கு செல்லத்தக்கவை என மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் பல்கலைக்கழக மானிய குழுவான யு.ஜி.சி அனுமதியுடன் அண்ணாமலை பல்கலைக்கழகம் உட்பட சில பல்கலைகளில் 1979 முதல் திறந்த நிலை மற்றும் தொலைதுார கல்வியில் பட்டம் மற்றும் பட்டயப் படிப்புகள் நடத்தப்படுகின்றன. துவக்கத்தில் இந்த முறையில் படித்து பட்டம் பெற்றவர்களுக்கு அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு தரப்பட்டதோடு உயர்கல்வி கற்கவும் அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் திறந்தநிலை பல்கலையால் வழங்கப்பட்ட பிளஸ் 2 படிக்காமல் நேரடி பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டது.

பின் பிளஸ் 2 முடித்து திறந்தநிலை படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு மட்டும் அனுமதி தரப்பட்டது. இதனால் பிளஸ் 2 படிக்காமல் நேரடி இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர்கள் அரசு வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்விக்கு செல்ல முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.



இந்நிலையில் மத்திய அரசு இரு தினங்களுக்கு முன் புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் திறந்த நிலை பல்கலையின் பட்டப்படிப்புகள் டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள் அரசின் வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்விக்கு செல்லத்தக்கவை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.இந்த அறிவிப்பால் திறந்தநிலை படிப் பில் பட்டம் பெற்ற லட்சக்கணக்கானோர் அரசு வேலைவாய்ப்பு பெறும் வகையில் புதிய நம்பிக்கை பெற்றுள்ளனர்.

கடந்த 1956ம் ஆண்டு யு.ஜி.சி சட்டப்பிரிவு - 3 இன் படி நடத்தப்படும் நிகர்நிலை பல்கலை மத்திய மாநில அரசின் சட்டப்படி துவங்கப்பட்ட பல்கலைகளில் யு.ஜி.சி அனுமதி பெற்று வழங்கப்பட்ட அனைத்து பட்டங்கள் டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள் அனைத்து வகை அரசு வேலைவாய்ப்புக்கும் தானாகவே செல்லத்தக்கவை.

மத்திய அரசின் உத்தரவுப்படி திறந்த நிலை கல்வியில் பெற்ற பட்டங்கள் வேலைவாய்ப்புக்கு செல்லத்தக்கவை என்றாலும் எப்போது முதல் வழங்கப்பட்ட பட்டங்கள் என்பது அரசாணையில் தெளிவாக இல்லை. அதனால் பிளஸ் 2 முடிக்காமல் நேரடியாக பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு இந்த அரசாணை பொருந்துமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தி: ஒன் இண்டியா

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment