(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, September 7, 2015

ராமநாதபுர மாவட்ட மீனவ பெண்மணி லெட்சுமி சர்வதேச விருதுக்கு தேர்வு ! அக் 8ம்தேதி கலிபோர்னியாவில் விருது வழங்கப்படுகிறது!!

No comments :


ராமேசுவரம் அருகே சின்னப் பாலம் மீனவப் பெண் லெட்சுமி அமெரிக்க விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் கடல்சார் ஆய்வு மையம் (சீகாலஜி) செயல்படுகிறது. இது உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள தீவுகளில் வசிக்கும் அரிய வகை தாவர இனங்கள், கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பதற்காக இ யங்கி வருகிறது. மேலும் இந்த மையம் ஆண்டுதோறும் கடல் வாழ் உயரினங்களை பாதுகாப்பவர்களுக்கு விருது, பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கிறது.


இந் நிலையில் கடந்த ஆண்டுக்கான விருதுக்காக ராமேசுவரம் அருகே உள்ள சின்ன ப்பாலத்தைச் சேர்ந்த மீனவப் பெண் லெட்சுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து சீகாலஜி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

லெட்சுமி தனது குழந்தை பருவத்தில் இருந்தே மன்னார் வளைகுடா தீவுப் பகுதிகளில் கடற்பாசிகளை சேகரிப்பதையே தொழிலாகக் கொண்டுள்ளார். மேலும் அவரது சமூகத்தைச் சேர்ந்த பல பெண்களுக்கு பாசி சேகரிப்பதே வாழ்வாதாரமாக உள்ளது. ஆனால், அரசு அதிகாரிகள் பாசி சேகரிக்க தடை விதித்தும், பாசி சேகரிக்கும் பெண் களுக்கு அபராதம் விதித்தும், மீனவப் பெண்களின் படகுகளை கைப்பற்றியும் அவர்களது வாழ் வாதாரத்தை சுரண்டி வந்தனர்.

இது குறித்து மாவட்ட நிர்வாகம், அரசு அதிகாரிகள், கடல்சார் விஞ்ஞானிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி பாரம்பரிய முறையில் பாசி சேகரிப்பதால் கடலில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதில்லை என்பதை லெட்சுமி எடுத்துரைத்தார்.

மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 25 மீனவ கிராமங்களில் 2000-க்கும் மேற் பட்ட பாசி சேகரிக்கும் மீனவப் பெண்களை ஒருங்கிணைத்து கூட்டமைப்பு ஏற்படுத்தி அவர்களுக்கு பயோ மெட்ரிக் கார்டுகள் வழங்கி வாழ்வாதாரத்தை தொடர வைத்துள்ளார். இதற்காக லெட்சுமிக்கு கடல்சார் சுற்றுச்சூழல் விருது வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து லெட்சுமி கூறியதாவது:

சின்னப்பாலம் பகுதி மீனவப் பெண்கள் மரிக்கொழுந்து பாசி களை எடுப்பதற்கு, வனத் துறையினர் தடை விதித்ததோடு மட்டுமின்றி அபராதமும் விதிப்பார்கள். சில நேரங்களில் தகாத வார்த்தைகளில் திட்டுவார்கள். ஒருமுறை கடலுக்குள் நாங்கள் பாசி சேகரித்தபோது கரையில் வைத்திருந்த ஆடைகளை வனத் துறையினர் எடுத்துச் சென்றனர். சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்தோம். இப்போது எங்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது கிடைத்துள்ளது. இந்த விருது அக்டோபர் 10-ம் தேதி வழங்கப்பட உள்ளது என்றார்.

செய்தி: தி ஹிந்து



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment