(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, July 2, 2015

பனையடியேந்தல் கிராமத்தில் உப்பு நீரை நன்நீராக மாற்றும் R.O. பிளாண்ட். திரு.ஜவாஹிருல்லாஹ் MLA திறந்து வைத்தார்!!

No comments :
ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் பனையடியேந்தல் கிராமத்தில் உப்பு நீரை நன்நீராக மாற்றும் R.O. பிளாண்ட் ரூ.9.50 லட்சம் செலவில் திறந்து வைக்கப்பட்டது ! !

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்புல்லாணி ஒன்றியம், பனையடியேந்தல் ஊராட்சி, பனையடியேந்தல் கிராமத்தில் 2014 - 2015 ம் ஆண்டுக்கான சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூபாய்.9.50 (ஒன்பது லட்சத்து ஐம்பது ஆயிரம்) செலவில்உப்புநீரை நன்னீராக்கும் R.O பிளாண்ட் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புதிதாக அமைக்கப்பட்டு அதை ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள்கட்சியின் சட்டமன்றக்குழு தலைவருமான பேராசிரியர்.முனைவர்.M.H.ஜவாஹிருல்லா MLA அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.


ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றியம், பனையடியேந்தல் பகுதியில் வாழும் மக்கள் குடிநீருக்காக படாதபாடுபட்டு வந்தனர். எத்தனை அடி தோண்டினாலும் உப்பு தண்ணீர் தான்.

கடல் நீர் அளவுக்கு குறையாத உப்பு. எனவே நிலத்தடி நீர் ஆதாரம் கை கொடுக்கவில்லை. குடிநீருக்காக கடந்தகால அரசு கொண்டு வந்த சிறப்பு திட்டமான காவிரி கூட்டுக் குடிநீர் திட்டமும் பயனில்லை. காரணம் இந்த கிராமத்திற்கு காவிரி தண்ணீர் இணைப்பு இல்லை.

அருகில் சுமார் இரண்டு கி.மீ.தூரத்தில் இதம்பாடல் பகுதியில் காவிரி தண்ணீர் கிடைக்கிறது. அங்கிருந்து குழாய் இணைப்பு மூலம் இங்கு கொண்டு வர ஊராட்சி ஒன்றிய எல்லை பிரச்சினை. அதற்கு காரணம் இதம்பாடல் கடலாடி ஒன்றியம், பனையடியேந்தல் திருப்புல்லாணி ஒன்றியம்.



எனவே காவிரி தண்ணீரும் எட்டாக்கனியாகி விட்டது. எனவே இதுதான் நமது நிலை என கருதி குடம் ஒன்றுக்கு ஐந்து முதல் பத்து ரூபாய் வரை பணம் செலவழித்து குடிநீர் வாங்கி அருந்தும் அவலம் இக்கிராம மக்களிடையே இருந்தது.
இருந்தும் தங்கள் ஊருக்கு நல்ல தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதில் ஊராட்சி நிர்வாகம் உறுதியாக இருந்தது. எனவே தங்கள் கோரிக்கைக்காக ஏறி இறங்காத அலுவலகம் இல்லை. பார்க்காத மக்கள் பிரதிநிதி இல்லை. இப்படியான சூழலில் தான்
ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரான பேராசிரியர் அவர்களை ஊராட்சி மன்ற தலைவர் திரு.ஏ.வெள்ளி, துணை தலைவர் திரு.ஸ்டீபன் ராஜ் ஆகியோர் நேரில் சந்தித்து இது குறித்து கோரிக்கை வைத்தனர்.

இக்கோரிக்கை குறித்து பேராசிரியர் அவர்கள் நேரில் ஆய்வு செய்ய சென்ற போது முழு கிராமமும் திரண்டு நின்று பேராசிரியர் அவர்களை வரவேற்று தங்கள் கோரிக்கை குறித்து எடுத்து கூறினர்.

இம்மக்களின் நிலை அறிந்து உப்பு நீரை நன்நீராக மாற்றும் R.O. பிளாண்ட் அமைக்கும் திட்டம் மூலம் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்திட உடனடியாக தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.9.50 லட்சம் ஒதுக்கீடு செய்து திட்டம் செயல்பட உத்திரவிட்டார்கள்.
ஒரு லிட்டர் நீரில் 6000 TDS அளவு உப்பு தன்மை வாய்ந்த நீரை ஒரு லிட்டர் நீரில் 200 TDS உப்பு தன்மையாக குறைத்து சுவையான குடிநீராக - நன்நீராக மாற்றும் சக்தி கொண்ட, ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நவீன தொழில் நுட்பம் வாய்ந்த கருவி மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பாட்டில் ஒன்று 22 ரூபாய்க்கு வாங்கி குடிக்கும் தனியார் நிறுவன குடிநீருக்கு சமமான சுவை கொண்ட தண்ணீரை இன்று அந்த மக்கள் இலவசமாக பெற்றுள்ளனர்.
உப்பு நீரை - கடல் நீரை நன்நீராக மாற்றும் அரசு திட்டங்களில் எந்த வகையான கருவிகள் அமைக்கப்பட்டிருக்குமோ அப்படியான திறன் வாய்ந்த கருவிகள் இங்கு பொருத்தப்பட்டுள்ளன.

இந்த குடிநீர் நிலையம் திறப்பு நிகழ்வு பனையடியேந்தல் கிராமத்தில் நடைபெற்றது. தங்களது விவசாயம் மற்றும் கூலி வேலைகளுக்கு மத்தியிலும் கிராம மக்கள் பெருமளவில் கூடி நின்று திறப்பு நிகழ்விற்கு சென்றிருந்தவர்களை வரவேற்றனர்.
குடிநீர் கோரிக்கைக்காக காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் உட்பட போராட்டங்கள் நடத்துவதை தான் பார்த்துள்ளோம். ஆனால் ஒரு திறப்பு விழா நிகழ்ச்சியில் காலி குடங்களுடன் பொதுமக்கள் திரண்டிருந்ததை பார்த்த போது ஆச்சர்யமாக இருந்தது. பேராசிரியர் அவர்களால் துவக்கி வைக்கப் போகும் குடிநீர் குழாயில் இருந்து தண்ணீர் பிடிக்கத்தான் அந்த மக்கள் பெருமளவில் காலி குடங்களுடன் கூடியிருந்தனர்.

இந்த நிகழ்வின்போது தமுமுக மாவட்ட செயலாளர் சகோ.சாதிக் பாட்சா, மனிதநேய மக்கள்கட்சியின் மாவட்ட செயலாளர் சகோ.B.அன்வர் அலி, மாவட்ட துணை செயலாளர்கள் சகோ.சுல்தான், சகோ.ரைஸ் இபுராகிம்,மற்றும் சகோ.பாக்கர் அலி, சகோ.பிஸ்மில்லா நஸ்ருதீன்,ஆற்றாங்கரை அஃப்பான், மற்றும் ஒன்றிய, கிளை நிர்வாகிகள் அரசு அலுவலர்கள், கிராம பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

செய்தி: இராமநாதபுர MLA அலுவலகம்

No comments :

Post a Comment