(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, July 1, 2015

இன்று நேற்று நாளை - தமிழ் திரை விமர்சனம்!!

No comments :
கால இயந்திரம் வழியாக ஒரு பெண், தான் பிறந்த அந்த நாளுக்குப் போகிறாள். பிரசவ வேதனையால் துடித்துக்கொண்டிருக்கும் தன் தாயை மருத்துவமனையில் சேர்த்து, அங்கு பிறக்கும் தன்னையே செவிலியரிடம் இருந்து வாங்கி உச்சிமுகர்கிறாள். இன்று நேற்று நாளைபடத்தில் இப்படியொரு காட்சி.

இந்த வியப்பை படம் முழுவதும் தருகிறார் அறிமுக இயக்குநர் ரவிகுமார். கால இயந்திரத்தின் வழியே கடந்த காலத்திலும் எதிர்காலத் திலும் பயணம் என்னும் சிக்கலான களத்தில் சரளமாக விளையாடுகிறார்.
யாரிடமும் வேலை பார்க்காமல் சொந்தத் தொழில் செய்து முன்னுக்கு வர நினைப்பவர் விஷ்ணு விஷால். அதற்காகப் புதிய புதிய திட்டங்களுடன் கடனுக்காக வங்கிகளின் படியேறி பல்புவாங்கிக்கொண்டிருப்பவர். அவரது நண்பர் கருணா, ராசியில்லாத ஜோசியர்.

விஷ்ணுவின் பணக்காரக் காதலி மியா ஜார்ஜ். ‘‘அப்பாவிடம் காதலைச் சொல்லவேண்டும் என்றால், முதலில் ஒரு வேலையைப் பார்’’ என விஷ்ணு விடம் சொல்கிறார் மியா. அவரோ, சொந்தத் தொழிலில் பிடிவாதமாக இருக்கிறார். பொய் சொல்லி அப்பாவைச் சம்மதிக்க வைக்க மியா முயல்கிறார். மியாவின் தந்தை தொழிலதிபர் ஜெயப்பிரகாஷ் அந்தப் பொய்யை அம்பலப்படுத்தி இருவரையும் தலைகுனிய வைக்கிறார்.


இதற்கிடையில் குழந்தைவேலு என் னும் ரவுடியால் ஜெயப்பிரகாஷ் பெரிய ஆபத்தில் சிக்கிக்கொள்கிறார்.

பார்த்தசாரதி என்னும் கிறுக்குவிஞ்ஞானி பலவிதமான பரிசோதனைகளைச் செய்துகொண்டிருக்கிறார். அவரது புதுமையான தானியங்கி காரும், விஷ்ணு-கருணாவின் காரும் இரவு நேரத்தில் மோதிக்கொள்ள, மூவரும் சாலையில் கிடக்கிறார்கள். அப்போது தான் அந்த இயந்திரம் அவர்கள் கையில் கிடைக்கிறது. அந்த இயந்திரம் பற்றிய தகவல்களை விஞ்ஞானி கண்டுபிடித்துச் சொல்ல, அவரை ஏமாற்றிவிட்டு இயந்திரத்தைக் கைப்பற்றுகிறார்கள் நண்பர்கள். அதை வைத்துக்கொண்டு சம்பாதிக்கும் வழியைக் கண்டு பிடிக்கிறார்கள்.

கால இயந்திரம் மூலம் இறந்த காலத் துக்குப் போகும்போது அங்கு எதையும் தொந்தரவு செய்யக் கூடாது. அப்படிச் செய்தால் அது நிகழ்காலத்திலும் பாதிப்பை விளைவிக்கும். உதாரண மாக இறந்த காலத்துக்குச் சென்று ஒருவரைக் கொன்றுவிட்டால் அவர் நிகழ்காலத்திலும் இல்லாமல் போய் விடுவார்.
கால இயந்திரம் மூலம் கடந்தகால விஷயங்களைத் தெரிந்துகொண்டு பணம் சம்பாதிக்கும் விஷ்ணுவும் கருணாவும் தங்களை அறியாமல் செய்யும் ஒரு காரியத்தால் கடந்தகால நிகழ்வில் அபஸ்வரம் தட்டிவிடுகிறது. அதன் விளைவாக அவர்களது நிகழ்காலம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. மீண்டும் கடந்த காலத்துக்குச் சென்று அதைச் சரிசெய்ய முனையும்போது மேலும் மேலும் சிக்கல்கள், இயந்திரத் தில் கோளாறு என்று வசமாக மாட்டிக் கொள்கிறார்கள். இப்படி நிகழ்காலத் திலும் கடந்த காலத்திலும் மாறிமாறிப் பயணிக்கும் கதை சுவாரஸ்யமான அனுபவத்தைத் தருகிறது.

கால இயந்திரப் பயணம் என்பது சிக்கலான கருத்து. அதை குழப்பமின்றி ரசிகர்களுக்குப் புரியும்படி திரையில் சொன்னதற்காக ரவிகுமாரைப் பாராட்ட வேண்டும். காலப் பயணத் தின் விளைவுகளை சுவாரஸ்யமும் விறுவிறுப்பும் கலந்து கொடுத்ததற்காக வும் பாராட்டலாம். ஒருவர் கடந்த காலத்துக்குச் சென்று தன்னையே பார்ப்பதைத் திரையில் பார்க்கும்போது ரசிகர்கள் கொள்ளும் ஆவலும் வியப்பும் திரைக்கதையின் வெற்றி. கடந்தகால நிகழ்வுகளைக் குழப்பிவிட்ட பிறகு அதைச் சரிசெய்வதற்காக நண்பர்கள் படும் பாடு விறுவிறுப்பாகப் படமாக்கப்பட்டுள்ளது. முதல் பாதி கலகலப்பு என்றால் அடுத்த பாதியில் காலப் பயணத்தின் குழப்பங்களால் ஏற்படும் விறுவிறுப்பு.


விஷ்ணு யதார்த்தமாக நடிக்கிறார். கருணா உதிர்க்கும் வசனங்களில் திரை யரங்கில் சிரிப்பலை எழுகிறது. காமெடி யன் என்பதைத் தாண்டி நடிப்பதற்குக் கிடைத்த வாய்ப்பை அவர் நன்றாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். மியா ஜார்ஜுக்குத் தமிழில் இது 2-வது படம். ஆனால் இந்தப் படமே அவருக்கு நல்ல அறிமுகமாக இருக்கும். வெகுளிப் பெண்ணாக, அழகான காதலியாக வந்து ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்கிறார். ரவுடியாக வரும் சாய் ரவி, பார்த்த சாரதியாக வரும் டி.எம்.கார்த்திக்கின் நடிப்பு கச்சிதம்.

கால இயந்திர வடிவமைப்பு நன்றாக இருக்கிறது. ஃபேன்டசி படம் என்றாலும் கிராபிக்ஸ் காட்சிகளை அதிகம் காட்டி மிரட்டவில்லை. ஒளிப்பதிவாளர் ஏ.வசந் தின் கேமரா உறுத்தலே இல்லாமல் கதையுடன் பயணிக்கிறது. காலப் பயணங்களுக்கு வித்தியாசமான வண் ணம் தந்து வேறுபடுத்திக் காட்டுகிறார். ஹிப்ஹாப் தமிழாவின் பின்னணி இசை நன்று.

இரண்டாவது பாதியில் பல காட்சி களுக்கு லாஜிக் இல்லை. கால இயந் திரத்தை மையமிட்ட காமெடி காட்சிகள் ஒரு கட்டத்தில் அலுப்பு ஏற்படுத்துகின் றன. ஒருவர் தன் பெண்ணுடைய காதலனை ஏற்காமல் போனாலும் இருவரையும் சேர்த்துப் பொது இடத்தில் வைத்து அவமானப்படுத்துவாரா?

சுறுசுறுப்பாக நகரும் திரைக்கதை இதுபோன்ற குறைகளை மறக்கடித்து நல்ல பொழுதுபோக்குப் படம் பார்த்த திருப்தியை அளிக்கிறது.


விமர்சனம்: தி ஹிந்து

No comments :

Post a Comment