Tuesday, July 7, 2015
இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஏழை மாணவர்களை சேர்க்க மறுக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை?!!
இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஏழை மாணவர்களை
சேர்க்க மறுக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கண்காணிப்புக் குழுவை
தமிழக அரசு ஒரு வாரத்துக்குள் உருவாக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
மாற்றத்துக்கான இந்தியா' என்ற அமைப்பின் இயக்குநர்
பாடம் நாராயணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகள் மாணவர்
சேர்க்கையின் போது,
மொத்த இடங்களில் 25 சதவீத இடங்களை ஏழை
மற்றும் சமுதாயத்தின் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு வழங்க
வேண்டும். தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் 25 சதவீத இடங்களை ஏழை
மாணவர்களை கொண்டு நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று
கூறியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு கடந்த ஜூன் 2-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக பள்ளிக்கல்வித்துறை இணை செயலாளர் பி.அழகேசன் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத மாணவர்கள் சேர்க்கை மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக கூறியிருந்தார். இதையடுத்து நீதிபதிகள், தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களை சேர்ப்பதற்கு எத்தனை இடங்கள் உள்ளது என்ற விவரங்களை 3 நாட்களுக்குள் பள்ளிக்கல்வித்துறை தன் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மேலும் அந்த உத்தரவில், இந்த மாணவர்கள் சேர்க்கை
விவகாரத்தில் மாவட்ட கல்வி அதிகாரிகள் தீவிரமாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஒருவேளை,
இந்த 25 சதவீத இடஒதுக்கீட்டு இடங்கள்
தனியார் பள்ளிகளில் நிரப்பப்படவில்லை என்றால், இலவச கட்டாயக் கல்வி
உரிமை சட்டத்தின்படி,
அந்த இடங்களை நவம்பர் மாதம் வரை காலியாக வைத்திருக்க
வேண்டும்'
என்று கூறியிருந்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்
கிஷன் கவுல்,
நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும்
விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக பள்ளிக்கல்வித்துறை
இணை செயலாளர் அழகேசன் மீண்டும் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில்
கூறியிருப்பதாவது:- 25
சதவீத இடங்களை ஏழை மற்றும் சமுதாயத்தில் பின்தங்கிய
மாணவர்களை கொண்டு நிரப்பாத தனியார் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்
அனுப்பப்பட்டுள்ளது. அந்த பள்ளிகள் பதிலளித்த பின்னர், சட்டப்படியான தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனவே, இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத ஒதுக்கீட்டு இடங்களை ஏழை மாணவர்களை கொண்டு நிரப்ப அனைத்து வகையான நடவடிக்கைகளையும்
அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்
கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் அனைத்தும்
எங்களுக்கு முழு திருப்தியை அளிக்கிறது. இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்
கீழ் 25 சதவீத ஏழை மாணவர்களை சேர்க்காத பள்ளிகள், அந்த மாணவர்களை சேர்க்க
மறுக்கும் பள்ளிகள்,
அந்த மாணவர்களை சேர்க்க பணம் கேட்கும் பள்ளிகள் குறித்து
அரசு அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும். எனவே, இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விதமாக தமிழக அரசு, ஒரு கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும். இந்த குழுவை பற்றியும், இந்த குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் குறித்த விவரங்களையும் பள்ளிக்கல்வித்துறை
இணையதளத்தில் விளம்பரப்படுத்த வேண்டும். இதன்மூலம் பள்ளியில் இடம் கிடைக்காமல்
பாதிக்கப்பட்டவர்கள்,
அதுகுறித்து புகார் செய்து நிவாரணம் பெற அந்த குழுவை அணுக
முன்வருவார்கள். எனவே இந்த கண்காணிப்புக் குழுவை இன்றில் இருந்து ஒரு
வாரத்துக்குள் தமிழக அரசு உருவாக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தங்கள்
தீர்ப்பில் கூறியுள்ளனர்.
செய்தி: ஒன் இண்டியா
No comments :
Post a Comment