(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, July 20, 2015

கோவில் வாசலில் வெண்கல சாமிசிலை, மர்ம நபர்களால் கடத்தப்பட்டதா என்று போலீசார் விசாரணை!!

No comments :
பரமக்குடியில் கோவில் வாசலில் வெண்கல சாமிசிலை கிடந்தது. இந்த சிலை மர்ம நபர்களால் கடத்தப்பட்டதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

வெண்கல சிலை:

பரமக்குடி ஐந்துமுனை பகுதியில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அதிகாலையில் பூஜை செய்வதற்காக அர்ச்சகர் கோவிலை திறக்க சென்றுள்ளார். அப்போது கோவில் வாசலில் சாக்கு மூடை ஒன்று கட்டிய நிலையில் கிடந்தது. அவர் அதனை அவிழ்த்து பார்த்தபோது அதில் பழமைவாய்ந்த வெண்கல நடராஜர் சாமி சிலை ஒன்றும், பீடம், மணி ஆகியவையும் இருந்தன. 

இதுகுறித்து அர்ச்சகர் கோவில் நிர்வாகி பாஸ்கரனுக்கு தகவல் தெரிவித்தார். உடனே அங்கு வந்த பாஸ்கரன் இதுபற்றி போலீசாருக்கும், வருவாய்த்துறையினருக்கும் தகவல் கொடுத்தார். அதன் பேரில் தாசில்தார் காளிமுத்தன், நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைச்சாமி ஆகியோர் அங்கு விரைந்து சென்று சிலையை பார்வையிட்டனர். 


விசாரணை:

அப்போது சுமார் 1 அடி உயரமும், 3 கிலோ எடையும் கொண்ட அந்த சிலை பழமைவாய்ந்த வெண்கல சிலை என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த சிலையை கைப்பற்றிய அதிகாரிகள் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இந்த சிலையை மர்ம நபர்கள் யாரும் கடத்தி வந்தார்களா? எதற்காக முருகன் கோவில் முன்பாக போட்டுச்சென்றுள்ளனர் என்பது குறித்து பரமக்குடி நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுகுறித்து தொல்லியல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

செய்தி: தினத்தந்தி

No comments :

Post a Comment