(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, July 19, 2015

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரம்ஜான் தொழுகைகள்!!

No comments :
ரம்ஜான் பண்டிகையையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.

ரம்ஜான் பண்டிகை:

புனித ரமலான் மாதத்தில் ஒவ்வொரு முஸ்லிமும் 30 நாட்களும் நோன்பு இருந்தனர். இதன் நிறைவாக ரம்ஜான் பண்டிகை நேற்று ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 127 பள்ளிவாசல்களில் சுமார் லட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தி கோலாகலமாக கொண்டாடினர். பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் அதிகாலை எழுந்து புத்தாடை அணிந்து உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். 

சிறப்பு தொழுகை:

விழாவையொட்டி ராமநாதபுரம் ஈத்கா கோரித்தோப்பு மைதானத்தில் அனைத்து ஜமாத் நிர்வாகிகளும், ஆயிரக்கணக்கான முஸ்லிம்களும் சிறப்பு தொழுகை நடத்தினர். ஹாஜியாரப்பா பள்ளி இமாம் அப்துல் அலி ஆலிம் சிறப்பு தொழுகை நடத்தி வைத்தார். 



ராமநாதபுரம் சென்ட்ரல் மஸ்ஜித் பள்ளி இமாம் முகமதுயாசின் குத்பா ஓதினார். இதில் ராமநாதபுரம் பெரிய முகல்லம், சிறிய முகல்லம் ஜமாத்துக்கள், பாசிப்பட்டறை ஜமாத், அம்பலகாரத்தெரு ஜமாத், காதர் பள்ளிவாசல் ஜமாத் ஆகிய 5 பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொழுகையின் முடிவில் முஸ்லிம்கள் அனைவரும் ஒருவரைஒருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். ஏழை எளியவர்களுக்கு அரிசி, புத்தாடை மற்றும் பித்ரா பணம் போன்றவற்றை தானமாக வழங்கினர்.

வெளிபட்டினம் மஸ்ஜித் தக்வா பள்ளிவாசலில் நடை பெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் கலந்து கொண்டு தொழுகை நடத்தி னர். இதுதவிர ஆங்காங்கே உள்ள மதரசாக்களில் பெண்கள் தொழுகை நடத்தினர். 

கீழக்கரை:

கீழக்கரையில் 8 முஸ்லிம் ஜமாத்துக்களை உள்ளடக்கிய பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. நடுத்தெரு ஜும்மா பள்ளி, தெற்குத்தெரு இஸ்லாமியா பள்ளி, கிழக்கு தெரு ஈத்கா திடல் ஆகியவற்றிலும், மதரசாக்களிலும் சிறப்பு தொழுகை நடந்தது. \


இதேபோல ஏர்வாடி, பெரியபட்டணம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர். காரிக்கூட்டத்தில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் சக்கரக்கோட்டை ஊராட்சி தலைவர் நூர்முகமது கலந்து கொண்டார். 

தொண்டியில் ரம்ஜான் சிறப்பு தொழுகை மலுங்கு சாகிப் தெரு திடலில் நடைபெற்றது. தொண்டி ஐக்கிய ஜமாத் தலைவர் அபுபக்கர் தலைமையில் தொண்டி ஜமாத் தலைவர்கள் ஜலால், செய்யது அலி, பந்தேநவாஸ், வின்னத்துல்லா, இலியாஸ், கமலுதீன் ஆகியோர் முன்னிலையில் ஏராளமான முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை செய்தனர். பள்ளிவாசல் இமாம்கள் முகமது காசின் யூசுதி, அபுபக்கர், முகைதீன் ஆகியோர் சிறப்பு தொழுகை நடத்தினர். இதில் 5000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர். நிகழ்ச்சியில் அமீர்சுல்தான் அகாடமி பள்ளி நிர்வாகி அப்துல் ரவூப், இஸ்லாமிக் மாடல் மெட்ரிக் பள்ளி நிர்வாகி சாதிக், தொண்டி பேரூராட்சி தலைவர் சேகுநயினா, துணை தலைவர் பவுசுல்ஹக், த.மு.மு.க. மாவட்ட செயலாளர் சாதிக் பாட்சா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

இதேபோல இந்தபகுதியில் உள்ள நம்புதாளை, சோழியக்குடி, புதுப்பட்டினம், வீரசங்கிலிமடம், பாசிப்பட்டினம், எஸ்.பி.பட்டினம், வட்டாணம், வெள்ளையபுரம், மங்களக்குடி, அஞ்சுகோட்டை, திருவாடானை, கவலைவென்றான், சிறுகம்பையூர், மச்சூர், எம்.ஆர்.பட்டினம், பி.வி.பட்டினம், புதுவயல் ஆகிய இடங்களிலும் ரம்ஜான் சிறப்பு தொழுகை அந்தந்த பள்ளிவாசல்களிலும், திடல்களிலும் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு தொழுகை செய்தனர். 

செய்தி: தினத்தந்தி

No comments :

Post a Comment