(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, July 14, 2015

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!!

No comments :




சிறுபான்மையின மாணவர்கள் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, தமிழ்நாட்டிலுள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பிளஸ்1, பிளஸ் 2, ஐ.டி.ஐ, பாலிடெக்னிக், பட்டய, பட்டப்படிப்புகள், ஆராய்ச்சி படிப்பு பயிலும் கிறிஸ்துவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்த, பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சார்ந்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. 

www.scholarships.gov.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிப்பதற்கான காலவரம்பு புதிய இனங்களுக்கு செப்.15 மற்றும் புதுப்பித்தல் இனங்களுக்கு அக்.10வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 



தமிழ்நாட்டிற்கு மொத்தம் 18ஆயிரத்து 989 மாணவர்களுக்கு புதிய கல்வி உதவித் தொகை 2015-16-ம் ஆண்டிற்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகை பெற மாணவ, மாணவிகள் கடந்த ஆண்டு பொது தேர்வில் குறைந்த பட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும். பெற்றோர் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் மதிப்பெண் சான்று, மதத்திற்கான சான்று, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றின் நகலுடன், கல்வி கட்டணம் செலுத்திய ரசீது, இருப்பிட முகவரி, வங்கி கணக்கு எண், வங்கி ஐஎப்எஸ் எண் ஆகிய விவரங்களுக்கான ஆவணங்களை இணைக்க வேண்டும். பயிலும் கல்வி நிலையங்களில் செப்.15க்குள் புதியதற்கும் அக்.10க்குள் புதுப்பித்தலுக்கும் சமர்பிக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments :

Post a Comment