(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, July 29, 2015

பி.இ கவுன்சிலிங் நிறைவுற்றது, 91 ஆயிரம் இடங்கள் காலி!!

No comments :
சென்னையில் நடைபெற்று வந்த பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான கவுன்சிலிங் நேற்றுடன் நிறைவடைந்துவிட்டது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் சுமார் 91 ஆயிரம் அரசு இடங்களே காலியாக இருக்கும் நிலை உள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கவுன்சிலிங் மையத்தில் இதற்கான கவுன்சிலிங் நடைபெற்று வந்தது.

2015-16 கல்வியாண்டு கவுன்சிலிங் கடந்த ஜூன் 28-ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும், 29-ல் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான கவுன்சிலிங்கும் நடத்தப்பட்டது.


பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் ஜூலை 1 ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. பொதுப் பிரிவு கவுன்சிலிங்கில் பங்கேற்க 1,48,794 பேர் அழைக்கப்பட்டனர்.


இவர்களில் 1,01,620 பேர் இடங்களைத் தேர்வு செய்து கல்லூரி சேர்க்கைக் கடிதங்களைப் பெற்றுச் சென்றனர். இதில் 62,970 பேர் மாணவர்கள், 38,650 பேர் மாணவிகள்.

அழைக்கப்பட்டவர்களில் 46,571 பேர் கலந்தாய்வில் பங்கேற்பதைத் தவிர்த்துவிட்டனர். 603 பேர் கலந்தாய்வில் பங்கேற்றபோதும் இடங்களைத் தேர்வு செய்வதைத் தவிர்த்துவிட்டனர்.

அதே நேரத்தில் சுமார் 91 ஆயிரம் இடங்கள் காலியாகவுள்ளன. அரசு என்ஜினீயரி்ங் கல்லூரிகள், தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள இடங்களாகும் இவை. இவை அனைத்துமே அரசு ஒதுக்கீட்டின் கீழே கொடுக்கப்பட்ட இடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு அதிக மவுசு இருந்தது. என்ஜினீயரிங் படித்தாலே போதும். நல்ல வேலை கிடைத்துவிடும் என்று அறியப்பட்டு வந்தது. ஆனால் உலகப் பொருளாதார அளவில் ஏற்பட்ட மந்தநிலை காரணமாக என்ஜீனியரிங் படிப்புகளுக்கு தற்போது மவுசு குறைந்துள்ளது. அதனால்தான் என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை வெகுவாகக் குறைந்துள்ளது என்று அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் தெரிவித்தார்.

சில கல்லூரிகளில் ஒரு சீட் கூட நிரம்பாத நிலை உள்ளதாக அண்ணா பல்கலைக்கழக கவுன்சிலிங் மைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். போதிய அடிப்படை வசதிகள் இல்லாத நிலை, தரவரிசையில் பின்தங்கிய நிலை போன்றவற்றால் இந்தக் கல்லூரிகளில் ஒரு சீட் கூட நிரம்பவில்லை என்றார் அவர்.

நன்றி: ஒன் இண்டியா

No comments :

Post a Comment