Sunday, June 7, 2015
ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்கள்!!
ராமநாதபுரம்
ரயில் நிலையத்தில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்கள் இரண்டு அண்மையில்
அறிமுகம் செய்யப்பட்டன. இருப்பினும், பயணிகள் பயணச்சீட்டு பெற நீண்ட நேரம்
வரிசையில் காத்திருந்தனர்.
ராமேசுவரத்திலிருந்து
ராமநாதபுரம் வழியாக சென்னை, மதுரை,
திருச்சி உள்பட
பல்வேறு நகரங்களுக்கு தினசரி ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் பயணிகள்
சிரமத்தை தவிர்க்கும் வகையில், தற்போது அனைத்து முக்கிய ரயில்
நிலையங்களிலும் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்களை ரயிவே நிர்வாகம்
நிறுவி வருகிறது.
அதனடிப்படையில், மாவட்டத்தின் தலைநகரான ராமநாதபுரத்தில் இரு இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.
ஆனால், ரயில் பயணிகளிடையே இது பற்றிய
விழிப்புணர்வு இல்லாததால் அவர்கள் வழக்கம் போல் வரிசையில் காத்திருந்து பயணச்
சீட்டை பெற்றுச் செல்கின்றனர். எனவே, புதிதாக நிறுவப்பட்ட இயந்திரங்கள்
கேட்பாரற்ற நிலையிலேயே உள்ளன.
இதுகுறித்து
ராமநாதபுரம் ரயில் நிலைய வர்த்தகப் பிரிவு மேற்பார்வையாளர் எஸ். ஜேக்கப்
கூறியதாவது: இயந்திரம் மூலம் பயணச்சீட்டு பெற விரும்புவோர், ரூ.50 மட்டும் செலுத்தி ஸ்மார்ட் கார்டு
பெற்றுக் கொள்ள வேண்டும்.
அந்த கார்டில் உள்ள நம்பரை பயன்படுத்தி, ரூ.100 முதல் ரூ.5
ஆயிரம் வரை
செல்போன் ரீசார்ஜ் போல டாப்-அப் செய்து கொள்ளலாம். ரீசார்ஜ் செய்து கொள்ளும்
தொகைக்கேற்ப போனஸýம் உண்டு.
ரீசார்ஜ் செய்து
கொண்ட தொகை ஓராண்டு வரை செல்லத்தக்கது. ஓராண்டுக்குள் எந்த ரயிலிலும் முன்பதிவு
இல்லாத பெட்டிகளில் பயணம் செய்யலாம். 150
கி.மீட்டருக்கும்
குறைவான தொலைவு செல்லும் ரயில் பயணிகளுக்கு 5 சதவிகித போனஸ் வழங்கப்படுவதால், ரயில் பயணக் கட்டணம் மேலும் குறைய வாய்ப்புள்ளது.
இந்த ஸ்மார்ட்
கார்டு வைத்திருப்பவர்கள் அது தேவையில்லையென்றால்,
எந்த ரயில்
நிலையத்திலும் திருப்பிக் கொடுத்து டெபாசிட் தொகை ரூ.50 மற்றும் ரயிலில் பயணம் செய்வதற்காக ரீசார்ஜ் செய்துகொண்ட தொகை உள்பட
அனைத்தையும் திரும்பக் பெற்றுக் கொள்ளமுடியும். தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் மூலமாக
பயணச்சீட்டு பெறும்போது, வரிசையில் நின்று பயணச்சீட்டு பெற
வேண்டிய அவசியம் இருக்காது. உடனே டிக்கெட்டை பெற முடியும். சில்லறைத்
தட்டுப்பாடும் தவிர்க்கப்படும்.
ராமேசுவரம், ராமநாதபுரம், பரமக்குடி, காரைக்குடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில்
தலா 2 இயந்திரங்களும், மானாமதுரையில் ஒரு இயந்திரம் உள்பட 27 ரயில் நிலையங்களில் 50 இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
No comments :
Post a Comment