(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, June 2, 2015

மேகி நூடுல்ஸ்: நடிகர் அமிதாப், நடிகை மாதுரி தீட்சித் மீது வழக்கு!!

No comments :
மேகி நூடுல்ஸ் விளம்பர விவகாரம் தொடர்பாக ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன், நடிகைகள் மாதுரி தீட்சித் மற்றும் பிரித்தி ஜிந்தா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய பீகார் மாநில முஸாபர்பூர் மாவட்ட  நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.


நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான மேகி நூடுல்சில், மோனோ சோடியம் குளுட்டமேட் எனப்படும் ரசாயனம் அதிக அளவில் இருப்பதை உத்தரபிரதேச மாநில உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து நூடுல்சுக்கு உத்தரபிரதேச அரசு தடை விதித்தது. இது நாடு முழுவதும் பரபரப்பை உண்டாக்கியது.


மேலும் மேகி நூடுல்ஸ் தொடர்பான விளம்பரங்களில் நடித்ததற்காக  நடிகர் அமிதாப்பச்சன், நடிகைகள் மாதுரி தீட்சித், பிரீத்தி ஜிந்தா உள்ளிட்டோர் மீது பரபங்கி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மேகி நூடுல்ஸ் விவகாரம் தொடர்பாக ஜூலை 1 ஆம் தேதி  நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நெஸ்லே இந்தியா நிறுவனம், ஈசி டே நிறுவனம், பரபங்கியில் உள்ள ஈசி டே விற்பனை பிரிவின் உரிமையாளர் மற்றும் மேலாளர் உள்பட 6 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், நடிகர் அமிதாப்பச்சன், நடிகைகள் மாதுரி தீட்சித், பிரீத்தி ஜிந்தா மற்றும் நெஸ்லே நிறுவன அதிகாரிகள் இரண்டு பேருக்கு எதிராக வழக்குப்பதிவுசெய்ய பீகார் மாநில முசாப்பர்பூர் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. தேவைப்பட்டால் அவர்களை கைது செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. 

கூடுதல் தலைமை மாவட்ட நீதிபதி  ராமசந்திரா பிரசாத், இவர்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யவும், விசாரிக்கவும் காசி முகமத்பூர் காவல்நிலையத்திற்கு உத்தரவிட்டு உள்ளது. விசாரணைக்கு தேவைப்பட்டால் இவர்களை கைதுசெய்யுங்கள் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. வக்கீல் சுதிர்குமார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த கோர்ட்டு இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளது. மனுவில் நெஸ்லே நிறுவனத்தின் இயக்குநர் மோகன் குப்தா மற்றும் துணை இயக்குநர் சபாப் ஆலம் மற்றும் 3 பாலிவுட் நட்சத்திரங்கள் பெயரும் குறிப்பிடப்பட்டு உள்ளது இன்னும் பரபரப்பைக் கூட்டியுள்ளது. 

புகார் தெரிவித்துஉள்ள நபர், முஸாப்பர்பூரில் உள்ள லெனின் சவுக் பகுதியில் உள்ள கடையில் மேகி பாக்கெட் வாங்கி, சமைத்து சாப்பிட்டதாகவும், இதனால் உடல்நிலை சரியில்லாமல் சென்றதாகவும் தெரிவித்து உள்ளார். இதனையடுத்து நெஸ்லே நிறுவன அதிகாரிகள் மற்றும் விளம்பர தூதர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி வழக்கு தொடரப்பட்டு உள்ளது. 

லெனின் சவுக் பகுதி, காசி முகமத்பூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ளது. இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 270, 273, 276 மற்றும் 420 ஆகிய பிரிவுகளின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் போலி உணவு பொருட்கள் தொடர்பான 272 ஆவது பிரிவில் ஆயுள் தண்டனை வரை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் விளம்பரங்களில் நடித்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.

செய்தி: விகடன்

No comments :

Post a Comment