(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, June 18, 2015

ராமநாதபுரம் - கீழக்கரை சாலையில் மரபணுப் பூங்கா, முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்!!

No comments :
கிழக்கு கடற்கரைச் சாலையில், ராமநாதபுரம் அருகே அச்சடிப்பிரம்பு கிராமத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் ரூ. 7.29 கோடி மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஐந்திணை மரபணுப் பூங்காவை, முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.

ராமநாதபுரத்திலிருந்து கீழக்கரை செல்லும் சாலையில் அச்சடிப்பிரம்பு கிராமத்தில், தோட்டக்கலைத் துறை சார்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள இந்த மரபணுப் பூங்கா திறப்பு விழாவில், வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் மற்றும் ஒழுங்குமுறை விற்பனைக் கூட அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். பின்னர், பூங்காவுக்கு வந்திருந்த பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.


ராமநாதபுரத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள இப்பூங்கா, சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இங்கு, அழகிய நுழைவுவாயில், தகவல் தொழில்நுட்ப மையம், புல்வெளிகள்,  பாலைவனம் போன்று மணல் திட்டுகள், சங்ககால மனிதர்களின் நாகரீகம், வாழ்வாதாரம் பற்றி விவரிக்கும் சிலை அமைப்பு, நீர்த்தடாகம், விலங்குகளின் சிலைகள், நிழல் தரும் அழகிய ஓலைக் குடில்கள், ஒளி தரும் வண்ண விளக்குகள், திறந்தவெளி அரங்கம், தானியங்கி நீர்த் தெளிப்பான்கள், உணவகம் உள்ளிட்டவையும் அமைக்கப்பட்டுள்ளன.


ராமநாதபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்தவர்கள், மாலை யில் பொழுதுபோக்க வசதியாக இப்பூங்கா சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டிருப்பதாக, தோட்டக்கலைத் துறையினர் தெரிவித்தனர்.

செய்தி: ஜெயா நியூஸ்

No comments :

Post a Comment