(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, June 6, 2015

காக்கா முட்டை - தமிழ் திரை விமரசனம்!!

No comments :
தமிழ்த் திரையுலகில் இதுவரை எவ்வளவோ படங்கள் வந்திருக்கின்றன. ஆனால், குடிசைப் பகுதி மக்களின் வாழ்வியலையும், ஏழைச் சிறுவர்களின் ஆசைகளையும் இவ்வளவு யதார்த்தமாக சொன்ன படம் இதுவரை வந்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
அறிமுகப் படத்தில் பெரிய நட்சத்திரங்களை வைத்து இயக்க வேண்டும், ஒரு ஆக்ஷன் படத்தை இயக்க வேண்டும், காதல் படத்தை இயக்க வேண்டும், இளைஞர்களைக் கவரும் விதத்தில் கிளாமரான காட்சிகளை வைத்து படத்தை இயக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மத்தியில் இந்தப் படத்தின் இயக்குனர் மணிகண்டன் மிகப் பெரும் மாற்றத்தைக் கொடுக்கும் இயக்குனராகவே தெரிகிறார்.

பொதுவாக, விருது பெரும் படங்கள் என்றாலே அதற்கென தனி பார்வை ரசிகர்கள் மத்தியில் இருக்கும். ஆனால், இந்தப் படம் அதையும் மீறி அனைவரையும் கவரும் விதமாகவே அமைந்துள்ளது. படத்தில் உள்ள கதாபாத்திரங்களுக்கான நடிகர்கள் தேர்வு முதல், கதைக் களம், உருவாக்கம் என ஒவ்வொரு விஷயத்திலும் மணி மணியாய் உழைத்திருக்கிறார் மணிகண்டன்.
சென்னையிலுள்ள ஒரு குடிசைப் பகுதியில் மாமியார், இரு மகன்கள் ரமேஷ், விக்னேஷ் ஆகியோருடன் வசித்து வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவருடைய கணவர் ஏதோ ஒரு குற்றத்திற்காக சிறையில் இருக்கிறார். எப்படியாவது கணவனை விடுவித்து கொண்டு வரும் முயற்சியில் அவர் இருக்கிறார். இவருடைய மகன்கள் இருவரும் அவர்கள் பகுதியில் புதிதாகத் திறந்துள்ள பீட்சா கடையில் நடிகர் சிம்பு பீட்சா சாப்பிடுவதைப் பார்த்து அதை தாங்களும் சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அதற்கான பணத்தைச் சேர்க்க ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் விரும்பிய பீட்சாவை சாப்பிடுவதற்குள் அவர்கள் எப்படிப்பட்ட எதிர்ப்புகளையும், கஷ்டங்களையும் சந்திக்க வேண்டியிருக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
படத்தின் ஹீரோக்களாக அந்த சிறுவர்கள் ரமேஷ், விக்னேஷ். ஒரு காட்சியிலாவது அவர்கள் நடித்திருக்கிறார்களா என்று உன்னிப்பாகப் பார்த்தால் கூட அவர்களின் நடிப்பு தெரியவில்லை. அவ்வளவு யதார்த்தமாக சின்ன காக்கா முட்டை, பெரிய காக்கா முட்டையாக  நடித்திருக்கிறார்கள். அதிலும் சின்ன காக்கா முட்டையாக நடித்திருக்கும் ரமேஷ், சின்னச் சின்ன விஷயங்களில் கூட தன்னுடைய நடிப்பால் பிரமிக்க வைத்திருக்கிறான். அண்ணன் என்றாலே ஒரு கெத்துதான், அதில் தான் எடுக்கும் முடிவுகளில் தனித்துத் தெரிகிறான் பெரிய காக்கா முட்டை விக்னேஷ். இவன் என்ன செய்தாலும், என்ன சொன்னாலும் அதை அப்படியே கேட்கும் தம்பி ரமேஷ். இருவருக்குமிடையே இருக்கும் அந்த பாசமான உறவு அவ்வளவு அழகாக வெளிப்பட்டுள்ளது.
அஜித்துடன் ஜோடி சேர வேண்டும், விஜய்யுடன் ஜோடி சேர வேண்டும், சூர்யாவுடன் ஜோடி சேர வேண்டும் என இந்தக் கால இளம் ஹீரோயின்கள் கனவு காண்பார்கள். ஆனால், அதையெல்லாம் விட இப்படி ஒரு படத்தில் நடிப்பதுதான் தன்னுடைய கனவு என இந்தப் படத்தில் இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக நடிக்க சம்மதித்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஹேட்ஸ் ஆப்’…எண்ணெய் வடியும் முகம், பழைய புடவை, பேச்சில் ஒரு ஏளனம் என அந்த அம்மா கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா நடித்த விதம் அவரை இன்னும் பல காலம் ஞாபகம் வைத்திருக்கும். நல்ல படைப்புகளும், நல்ல கதாபாத்திரங்களும் உங்களை இன்னும் உயரத்திற்குக் கொண்டு போக வைக்கும் ஐஸ்வர்யா, உங்களின் இந்தத் தேடல் தொடரட்டும்.
பழரசமாக நடித்திருக்கும் ஜோ மல்லூரி, ஏரியாவின் சிறிய திருடர்களாக வரும் ரமேஷ் திலக், யோகி பாபு, பீட்சா கடை முதலாளி பாபு ஆண்டனி,  கிருஷ்ணமூர்த்தி, ஐஸ்வர்யாவின் மாமியாராக நடித்திருப்பவர் என மற்ற துணை கதாபாத்திரங்களும் அவர்களைப் பற்றி பேச வைத்திருக்கிறார்கள்.
சிம்பு நடிகர் சிம்புவாகவே நடித்திருக்கிறார். அவரால்தான் இந்தப் படத்தின் கதையே நகர ஆரம்பிக்கிறது. இருந்தாலும் பெரிய மனதுடன் இந்தப் படத்தில் தன்னை கிண்டலடிப்பதையும் மீறி அவர் நடித்தது பாராட்டுக்குரியது.
ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையில் பின்னணி இசையை படத்துடன் பின்னிப் பிணைந்திருக்கிறது. இயக்குனர் மணிகண்டனே படத்திற்கு ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். கதையை மீறாத இயல்பான ஒளிப்பதிவு.
இந்தப் படத்தை இயக்கிய மணிகண்டனுக்கு மணி மணியாய் பாராட்டுக்களை ரசிகர்களும், கூடவே ‘Money’ யையும் மற்ற  தயாரிப்பாளர்கள் அட்வான்சாக தாராளமாக அள்ளித் தரலாம்.
இப்படத்தின் தயாரிப்பாளர்கள் வெற்றி மாறன், தனுஷ் உடனே மணிகண்டனுக்கு அடுத்த படத்தின் அட்வான்சை முதலில் அள்ளித் தந்து அதை ஆரம்பித்து வைக்கட்டும்.

விமர்சனம்: ஸ்க்ரீன் ஃபார் ஸ்க்ரீன்


No comments :

Post a Comment