(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, June 17, 2015

தனுஷ்கோடியில் 650 கிலோ கஞ்சா, கைப்பற்றியது இந்திய கடலோரக் காவல் படை!!

No comments :
ராமேசுவரம் அருகே தனுஷ்கோடியில்  650 கிலோ கஞ்சாவை இந்திய கடலோரக் காவல் படை செவ்வாய்க்கிழமை கைப்பற்றியது. இதன் மதிப்பு இந்தியச் சந்தையில் ரூ.65 லட்சம் இருக்கக் கூடும் எனத் தெரிகிறது.

இது குறித்து சென்னையிலுள்ள இந்திய கடலோரக் காவல் படை கிழக்கு பிராந்திய அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:  இந்திய கடலோரக் காவல் படை பாக் நீரிணைப்பு பகுதியில் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. செவ்வாய்க்கிழமை ராமேசுவரம் அருகே தனுஷ்கோடியில் நீரிலும், நிலத்திலும் செல்லும் ஹோவர்கிராப்ட் ரோந்து வாகனத்தில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு சந்தேகத்துக்குரிய முறையில் சாக்கு மூட்டைகள் குவித்து வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.


இதனையடுத்து கடலில் குதித்து நீந்திச் சென்று சாக்கு மூட்டைகளை மீட்டு சோதனையிட்டனர். அப்போது சாக்கு மூட்டைக்குள் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. 32 சாக்குப் பைகளில் சுமார் 250-க்கும் மேற்பட்ட கஞ்சா பொட்டலங்கள் வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு பொட்டலத்திலும் தலா இரண்டரை கிலோ எடையுள்ள கஞ்சா இருந்தது. பிடிபட்ட கஞ்சாவின் மொத்த எடை 650 கிலோ என அளவிடப்பட்டது. இதன் இந்திய சந்தை மதிப்பு ரூ. 65 லட்சம் ஆகும்.

 இதனையடுத்து கஞ்சாவைக் கடத்த முயன்றவர்களைப் பிடிக்க அந்தப் பகுதியில் தேடுதல் வேட்டையில் காவல் படையினர் ஈடுபட்டனர். ஆனால், அந்தப் பகுதியைச் சுற்றி சந்தேகத்திற்கிடமான படகுகளோ, ஆட்களோ தென்படவில்லை. இது குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இது குறித்து சுங்கத்துறை, போதைப் பொருள் தடுப்புத் துறை, தமிழ்நாடு காவல் துறை உள்ளிட்டவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாக் நீரிணைப்பு பகுதியில் கடலோரக் காவல் படையினர் சமீபத்தில் கண்டுபிடித்து தடுத்த மிகப் பெரிய கடத்தல் இது என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


செய்தி: தினமணி

No comments :

Post a Comment