(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, June 11, 2015

கீழக்கரையில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 3 திருடர்கள் கைது!!

No comments :
கீழக்கரையில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 3 திருடர்களைப் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 12 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டன.

கீழக்கரை கஸ்டம்ஸ் சாலைப் பகுதியை சேர்ந்தவர் உமர்பாரூக் மனைவி முஹம்மது ஜலீலா(48). இவரது வீட்டில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு புகுந்த மர்மநபர்கள் பீரோவில் இருந்த ஒன்றரைப் பவுன் தங்கச் சங்கிலியை திருடிச் சென்றனர். இது தொடர்பான புகாரின் பேரில் கீழக்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

இதற்கிடையில், கீழக்கரைப் பகுதியில் தொடர்ந்து நடைபெறும் திருட்டுச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில், காவல் ஆய்வாளர் பால்பாண்டி தலைமையில் உதவி   ஆய்வாளர்கள் சிவசுப்பிரமணியன், தங்கசாமி ஆகியோர் அடங்கிய தனிப்படையை அமைத்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் மகேஸ்வரி திங்கள்கிழமை உத்தரவிட்டார்.

  இந்த தனிப்படையினர் நடத்திய விசாரணையில், பெரிய மாயாகுளம் பள்ளிவாசல்தெரு காஜாநஜிமுதீன் மகன் ஷேக்அலாவுதீன்(28), கீழக்கரை புதுக்கிழக்குதெரு ஜாகிர்உசேன் மகன் சதாம் உசைன்(25), கஸ்டம்ஸ்சாலை சுல்தான் மகன் அமீர் சர்தார்(24) ஆகிய 3 பேரும் கடந்த மாதம் மதுரை சிறையிலிருந்து வெளியே வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை தேடிவந்தனர்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு மயானப் பகுதியில் பதுங்கியிருந்த ஷேக்அலாவுதீன், சதாம் உசைன் ஆகிய இருவரையும் போலீஸார் பிடித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மணல்மேடு பகுதியில் இருந்த அமீர் சர்தாரையும் போலீஸார் பிடித்தனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில், முஹம்மது ஜலீலா வீட்டிலும், கீழக்கரை புதுக்கிழக்குதெரு சுல்தான் செய்யது இபுராஹிம் வீட்டிலும், கீழக்கரை தட்டாந்தோப்பு கணேசன் வீட்டிலும் திருடியதை ஒப்புக் கொண்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 12 பவுன் தங்க நகைகளையும். ரூ.5 ஆயிரம் மதிப்பிலான வெள்ளிப் பொருள்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட 3 பேரும் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில்  அடைக்கப்பட்டனர்.
செய்தி: தினமணி   


No comments :

Post a Comment