(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, May 23, 2015

டிமான்ட்டி காலனி – தமிழ் திரை விமர்சனம

No comments :
ஹீரோயினே இல்லாத ஒரு தமிழ்த் திரைப்படம். பாடல்கள் இல்லாமல் வந்திருந்தாலும் வரவேற்கத்தக்கதே..!

4 நண்பர்கள். பட்டினப்பாக்கம் அரசு குடியிருப்பில் வீட்டிற்கு ஏசி வசதி செய்து வசிக்கிறார்கள். இருப்பவர்களிலேயே அதிகம் வசதியுள்ளவர் அருள்நிதி. ஒரு ஆண்ட்டிக்கு சின்ன வீடாக செட்டப்பாகி அந்த ஆண்ட்டி கொடுக்கும் காசில் மற்ற மூன்று நண்பர்களுக்கும் கொடுத்து உதவும் அன்னதான பிரபு.
ஒரு நாள் இரவு டாஸ்மாக் கடையில் நான்கு நண்பர்களும் ஓவர் மட்டையாகி கிளம்பும்போது மழை பிடித்துக் கொள்கிறது. எங்கயாவது ஒதுங்கலாம் என்று நினைக்கும்போது இந்த டிமான்ட்டி காலனி பங்களாவிற்கு போகலாம் என்று முடிவெடுக்கிறார்கள்.


உள்ளே போன இடத்தில் கிடைக்கும் ஒரு செயினை லவட்டிக் கொண்டு வருகிறான் நண்பன். கூடவே அந்த வீட்டில் இருந்த ஆவிகளும் இவர்கள் வீட்டில் வந்து குடியேறுகின்றன.


அன்றைய இரவில் இருந்து அந்த வீட்டில் எல்லாமே தாறுமாறாக நடக்கின்றன. பேய்களின் அட்டூழியம் அர்த்தராத்திரியில் அட்டகாசம் செய்ய நான்கு நண்பர்களும் அவைகளிடமிருந்து தப்பித்தார்களா இல்லையா என்பதுதான் கதை.
இப்போதெல்லாம் பேய்களை உருவாக்க காரணம், காரியமெல்லாம் தேவையே இல்லை. இறந்தவர்களெல்லாம் பேய்கள்தான். ஆவிகள்தான். தன்னைத் தொந்திரவு செய்தவர்களை எப்போதும் பின் தொடர்வார்கள் என்பதை தொடர்ச்சியான படங்களின் மூலம் தமிழர்களின் மனதில் பதிய வைக்கும் வேலையைக் கச்சிதமாகச் செய்து வருகிறார்கள் இது போன்ற பேய்ப் படத்தின் இயக்குநர்கள்.

சென்னை மாநகரம் உருவாகாத காலக்கட்டம். போர்த்துக்கீசியர்கள் முதன்முதலாக சென்னையில் காலடி எடுத்து வைத்த நேரத்தில் உருவான ஒரு பங்களா.. அந்த பங்களாவில் நிகழ்ந்த சில படுகொலைகளால் அந்த வீட்டில் யாரும் வசிக்கவில்லை. உள்ளே வந்தவர்கள் மறுநாள் வெளியில் வந்து ரத்தம் கக்கி சாவதைப் பார்த்துவிட்டு இன்னமும் அந்த வீட்டில் யாரும் கால் வைக்காமல் இருக்கிறார்கள்.  இந்தக் கிளைக்கதையும் படத்தில் இடம் பெற்றிருக்கிறது.


பீட்சா-2-ல் வந்த அதே பேய் பங்களா.. திகிலுக்கும், சஸ்பென்ஸுக்கும் அதிகம் வேலை வைத்திருக்கும் திரைக்கதை. கூடுதலான பயத்தைக் கொடுக்கும் அளவுக்கு பயமூட்டிய இசைமைப்பு.. அடுத்தடுத்த டிவிஸ்ட்டுகளின் தொகுப்பாக கேரக்டர்களின் நடவடிக்கைகள்.. என்று படத்தின் பிற்பாதியில் பல சுவாரஸ்யங்கள்.. இறுதிவரையிலும் சஸ்பென்ஸை அப்படியே மெயின்டெயின் செய்து கொண்டு போயிருக்கிறார் இயக்குநர்.


அப்பாவியாகவே நடித்து பெயர் பெற்றுவிட்ட அருள்நிதி தமிழரசு கொஞ்சம் பயந்தவனாகவும் நடிப்போமே என்றெண்ணி இப்படத்தில் நடித்திருக்கிறார் போலும். ஆனாலும் நன்றாகவே நடித்திருக்கிறார். பேய் படங்களில் பயமுறுத்தினால்தானே அது நடிப்பு. கச்சிதமாகச் செய்திருக்கிறார்.


டாஸ்மாக் கடையில் இனிமே யாரும் புலம்பக் கூடாது..?” என்று அட்வைஸில் துவங்கி, “ஜில்லு…” என்று தனது கள்ளக் காதலி ஆண்ட்டியை அழைத்துவிட்டு அதற்கான விளக்கத்தை அதே முகபாவனையுடன் சுவாரஸ்யமே இல்லாமல் சொல்லும்விதமும் ரசிக்க வைத்திருக்கிறது. அவருடைய நண்பர்களாக நடித்தவர்களில் கடைசி பேயாக வெளியேறுபவரை காட்டிலும் மற்ற இருவரும் நிறையவே நடித்திருக்கிறார்கள். பயமுறுத்தியிருக்கிறார்கள்.


திரைக்கதையில் புதுமையான முறையில் கதை சொல்லியிருப்பதால் யாராவது செல்போனை நோண்டிவிட்டு மறுபடியும் தலை நிமிர்ந்து படம் பார்த்தால் கொயப்பம்தான் மிஞ்சும்.. அவ்வளவு வேகமாக நகர்கிறது திரைக்கதை.

முதலில் டிவியில் ஆரம்பிக்கும் கதை.. பின்பு நிஜத்தில் நடக்கத் துவங்கி.. அடுத்து அது டிவியிலேயே முடிந்து மீண்டும் நிஜத்தில் துவங்கி.. கடைசியாக எல்லாமே பொய் என்றாகி நிற்கும்போது எத்தனை டிவிஸ்ட்டுகளைத்தான் மனதில் வைத்துக் கொள்வது என்கிற சிறிது அயர்ச்சியே ஏற்பட்டு சலிப்பாக்கிவிட்டது.
இறுக்கமான இயக்கத்தினால் மட்டுமே படத்தினை கடைசிவரையிலும் ரசிக்க முடிந்தது. அதிலும் அந்த கிளைமாக்ஸில் லாரிக்குள் அமர்ந்தபடியே மெளனப் புன்னகை புரிந்து நகையுடன் செல்லும் காட்சி படம் மொத்தத்தையும் தாங்கிப் பிடிக்கிறது. நமக்குப் புரிந்ததுபோல எத்தனை பேருக்கு அந்தக் காட்சி புரியுமென்று தெரியவில்லை. திரைக்கதையை இன்னமும் எளிமையாக்கியிருக்கிறலாம்.

வாடா வா மச்சிபாடல் காட்சி முழுமையாகவும், ‘டம்மி பீஸ் போலபாடல் காட்சி கொஞ்சமாகவும் படத்தில் இடம் பெற்றிருக்கின்றன. ஒளிப்பதிவுக்காக பாராட்டு அரவிந்த் சிங்கிற்கு.. பாத்ரூமில் நடைபெறும் சண்டை காட்சி.. வீட்டிற்குள் தீப்பற்றி எரியும் காட்சி போன்றவற்றில் எடிட்டரின் கைவண்ணத்தால் காட்சிகள் பரபரக்க வைத்திருக்கின்றன. கேபா ஜெர்மியாவின் இசைதான் கொஞ்சம் அதீதமாக இருந்துவிட்டது. பின்னணி இசை பேய்ப் படங்களுக்கு மிகவும் அவசியம்தான். ஆனால் அதற்காக இப்படியா..?


பேய்களில் பெரிய பேய், சின்ன பேயெல்லாம் இல்லை.. தொட்டால் விடாது என்பதுதான் இயக்குநர்கள் நமக்குச்  சொல்லும் கருத்து. இது கொஞ்சம் அறிவிப்பூர்வமான பேயாக மாறி ஜன்னல்கள், வாசல் கதவுகளை அடைத்து வைத்து டார்ச்சர் செய்வது.. ஏசியை கூட்டி வைத்து வீட்டில் இருப்பதையெல்லாம் உறைந்து போக வைப்பது.. ஆள் மாற்றி ஆள் உடலுக்குள் ஊடுறுவி அவர்களையே பலியாக்குவது, பரிசுத்த யேசுநாதரின் நேரடி கண் பார்வையில் படும் பகுதிக்குள் மட்டும் வராமல் எஸ்கேப்பாவது என்று பேய்களின் சேட்டைகளை இயக்குநர் தன்னால் முடிந்த அளவுக்கு கொடுத்திருக்கிறார்.


பேய்ப் பட ரசிகர்கள் பார்க்கலாம்..

No comments :

Post a Comment