Thursday, February 5, 2015
அறக்கட்டளை நடத்தி பொதுமக்களிடம் மோசடி
ராமநாதபுரம்,
: கடலாடி
அருகே அறக்கட்டளை நடத்தி பொதுமக்களிடம் ரூ.2 கோடி மோசடி செய்தவரை ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தேடி
வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா நரிப்பையூர் கிராமத்தை
சேர்ந்தவர் முகமது உபைஸ். இவர் ஹிஸ்புல்லா இளைஞர் சங்கம் மற்றும் நரிப்பையூர்
முன்னேற்ற அறக்கட்டளை என்ற பெயரில் இரு தொண்டு நிறுவனங்களை நடத்தி வந்தார்.
ஏழைகளுக்கு வட்டியில்லாத நகைக் கடன் வழங்குதல், லாபத்துடன் கூடிய மாதாந்திர சீட்டுத் திட்டம், வெளிநாட்டுப் பண பரிமாற்றம், பெரியவர்கள் மற்றும் சிறுவர்களுக்கான
சிறு சேமிப்புத் திட்டம் போன்றவற்றை நடத்தினார். இதில் அக்கிராமத்தைச் சேர்ந்த
நூற்றுக்கணக்கானோர் பண முதலீடு செய்ததுடன், நகைக்கடனும் பெற்றனர். இந்நிலையில் அப்பகுதிமக்களிடம் இருந்து பெற்ற பணம்
மற்றும் நகைகளுடன் முகமது உபைஸ் திடீரென தலைமறைவானார்.
இதனையடுத்து கடந்த 2ம் தேதி தவ்ஹீத் ஜமாத் மாவட்ட செயலாளர் அகமது தலைமையில், முஸ்லிம் பெண்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் ராமநாதபுரம் எஸ்பி மயில்வாகனனிடம் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் முகமது உபைஸ், 250க்கும் மேற்பட்டோரிடம் 5 கிலோ அளவிலான தங்க நகைகள் மற்றும் ரூ.40 லட்சம் ரொக்கம் என ரூ.2கோடி வரை மோசடி செய்து விட்டு தலைமறைவாகிவிட்டார். அவரை கைது செய்து, தங்களது பணம், நகைகளை மீட்டுத்தர வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தனர். இதனை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க எஸ்பி உத்தரவிட்டிருந்தார். நரிப்பையூரைச் சேர்ந்த யாகூப் மனைவி பரீதா பீவி புகாரின்பேரில், நேற்று முகமது உபைஸ் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.
பரீதா பீவி தனது புகாரில், முகமது உபைஸிடம் 51 பவுன் தங்க நகைகளை வைத்து ரூ.4 லட்சம் நகைக்கடன் பெற்றிருந்தேன். பணத்தை திருப்பிச் செலுத்தி நகையை மீட்கச் சென்றபோது, முகமது உபைஸ் தலைமறைவாகிவிட்டார். எனவே தனது நகையை மீட்டுத்தரவேண்டும் என அதில் தெரிவித்துள்ளார். இதேபோல் மேலும் 60 பேரிடம் முகமது உபைஸ் மோசடி செய்துள்ளதாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
செய்தி: தினகரன்
No comments :
Post a Comment