(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Friday, February 27, 2015

ராமநாதபுரம் மருத்துவமனையில் சிறுநீரக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடுதல் டயாலிசிஸ் இயந்திரங்கள்

No comments :
ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிறுநீரக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடுதல் டயாலிசிஸ் இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளது என கலெக்டர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிலைக்கு உயர்த்தப்பட்டு பொதுமக்களுக்கு அனைத்து விதமான சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிறுநீரக நோய் பாதிப்பிற்கான சிகிச்சை, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வகை சிகிச்சைகளும் சிறப்பு மருத்துவ நிபுணர்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


சிறுநீரக நோய் சிகிச்சைக்காக இரண்டு டயாலிசிஸ் இயந்திரங்கள் மூலம் இம்மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஒரு டயாலிசிஸ் இயந்திரம் தற்பொழுது நிறுவப்பட்டு, கூடுதலாக சிறுநீரக பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறுநீரக பாதிப்பால் சிகிச்சை பெற வரும் பயனாளிகளுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை வழங்கிட டாக்டர்கள், மருத்துவப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு சிகிச்சை வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு டயாலிசிஸ் இயந்திரங்கள் ஒரு மாதத்திற்குள் வாங்கிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


ராமநாதபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பயனாளிகளுக்கு சிறுநீரக பாதிப்பிற்கான சிகிச்சை வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அம்மருத்துவமனையில் சிறுநீரக நோய் சம்பந்தமான சிகிச்சை பெற்று வரும் அனைத்து நோயாளிகளும் ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இம்மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தீன் கீழ் சிகிச்சை பெற்றிட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே சிறுநீரக நோய் பாதிப்புடையோர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

செய்தி; தினத்தந்தி

No comments :

Post a Comment