Sunday, February 22, 2015
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் - தமிழ்
வெவ்வேறு
கதாபாத்திரங்கள், வெவ்வேறு
பின்னணிகள், வெவ்வேறு
பயணங்கள் ஆகியவற்றை ஒரு புள்ளியில் இணைக்கும் திரைக்கதையுடன்
களமிறங்கியிருக்கிறார் புது இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா.
ஓட்டேரியில்
வசிக்கும் வசந்த் (நகுல்) எதையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் பார்க்கும் இளைஞன்.
அறிவியல் சோதனை களைச் செய்துவரும் இளம் மேதை. பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு ‘புராஜெக்ட் ரிப்போர்ட்’ எழுதிக் கொடுத்து சம்பாதிக்கிறார். இவரிடம் புராஜெக்ட்
வாங்கும் ஹரிணி (ஐஸ்வர்யா தத்தா) நகுல் மீது காதல் வயப்படுகிறார்.
வங்கியில் கடன்
ஆலோசனை அதிகாரியாகப் பணியாற்றும் சிமி (பிந்து மாதவி),
தற்கொலை எண்ணம் கொண்டவர்களுக்கு ஆலோசனை
வழங்கிக் காப்பாற்றுவதைச் சேவையாகச் செய்து வருகிறார். ரியல் எஸ்டேட் முகவர்
முகிலை (அட்டக்கத்தி தினேஷ்) தற்கொலை கேஸ் எனத் தவறாக நினைத்து கவுன்சிலிங்
கொடுக்கப் போய் அது காதலாக மாறுகிறது.
கால் டாக்ஸி
ஓட்டுநர் ராஜாவின் (சதீஷ்) வண்டியில் ஒருவர் தன் பெண்ணுடன் (ஷாலு) பயணம்
செய்கிறார். தன்னை ‘மாப்பிள்ளை பார்க்க’ அவர்கள் வந்திருப்பது தெரியாமல் ஓவராகப் பேசும் சதீஷைப்
பெண்ணின் அப்பாவுக்குப் பிடிக்கவில்லை. பெண்ணுக்குப் பிடித்துவிடுகிறது.
சென்னையில் குண்டுவெடிப்பை நிகழ்த்த வருகிறான் ஒரு தீவிரவாதி. சதீஷின் கால்
டாக்ஸியில் செல்போன் வெடிகுண்டு பொருத்தப்படுகிறது.
இதற்கிடையில்
சூரியனிலிருந்து பூமியை நோக்கி வரும் காந்தப் புயலின் தாக்கம் காரணமாக செல்போன்
அலைவரிசை பாதிக்கப் படுகிறது. செல்போன் தொடர்பு கிடைக்காததால் தீவிரவாதியின் சதித்
திட்டம் முடங்குகிறது. பிந்து மாதவி கட்டுமானம் நடக்கும் இடத்தில் குழியில்
சிக்கிக் கொள்கிறார். தன்னைக் காப்பாற்றும்படி காதலனுக்கு அவர் அனுப்பிய குறுஞ்செய்தி
அலைவரிசை பிரச்சினையால் போய்ச் சேரவில்லை. இன்னும் கொஞ்ச நேரத்தில் அந்தக்
குழியின் மீது மாபெரும் பாறை ஒன்று விழவிருக்கிறது.
நகுல் தன்னுடைய
அலாதியான வழியில் செல்போன்களை வேலை செய்யவைக்க முயல்கிறார். செல்போன்கள் வேலை
செய்யத் தொடங்கினால் பிந்து மாதவி காப்பாற்றப்படலாம். அதே நேரம் குண்டு வெடித்துப்
பலர் இறக்கலாம். கடைசியில் என்ன ஆயிற்று?
தனித்தனிப்
பாதைகளில் பயணிக்கும் நான்கு கதைகளையும் செல்போன் அலைவரிசை என்னும் புள்ளியில்
சந்திக்கவைக்கிறார். இயக்குநர். கதாபாத்திரங்களைக் கவனமாகச் செதுக்கியிருக்கிறார்.
மூன்று கதைகளும் விறுவிறுப்பாக நகரும்படி முடிச்சுகளைச் சரியாகப்
போட்டிருக்கிறார். ஒரு பிரச்சினை வெவ்வேறு சூழல்களில் உள்ள மனிதர்களை எப்படிப்
பாதிக்கிறது என்பதைச் சுவையாகவே காட்டியிருக்கிறார். மூன்று காதல்களையும்
வித்தியாசமாகச் சித்தரித்திருக்கிறார்.
பிந்து மாதவியின்
காதல் அவஸ்தைகள் ரசமாக உள்ளன. கடைசிக் கட்டத்துப் பரபரப்பு பார்வையாளர்களையும்
தொற்றிக் கொள்ளுமளவு காட்சிப்படுத்தப் பட்டிருக்கிறது. மும்பை தீவிரவாதி குண்டு
வெடிக்கச் செய்வதற்கான முயற்சிகள் பலவீனமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கடைசியில் குண்டு வெடிக்கும் விதம் கொஞ்சம் ஓவராகத்தான் தெரிகிறது. பல் வேறு ‘தற்செயல்’ நிகழ்வுகளின் துணையுடன் கிளைமாக்ஸைக் கட்டமைத்திருப்பதைத்
தவிர்த்திருக்கலாம். வாஸ்து கல் சம்பந்தமான கதையை நம்ப முடியவில்லை.
செல்போன்
பறிகொடுத்தவனுக்கும் திருடுபவனுக்கும் இடையிலான உரையாடல்கள் சுவாரஸ்யமாக
இருந்தாலும் நம்பகமாக இல்லை. பொறியியல் கல்லூரி கிண்டல்கள் விவாதத்துக்கு
உரியவையாக இருக்கலாம். ஆனால் திரை அரங்கில் இந்தக் காட்சிகளுக்குப் பலத்த
வரவேற்பு. மூன்று காதல்களில் காமெடியனின் காதலை மட்டும் இளக்காரமாகக் கையாண்டதைத்
தவிர்த்திருக்கலாம். மற்ற இரு பெண்களும் கண்ணியமாகக் காட்டப்பட்டி ருக்கையில்
கீழ்மட்ட நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணின் நடத்தையைப் பற்றிய பரிகாச
வசனங்கள் உறுத்தலாக இருக்கின்றன.
நகுல்,
தினேஷ், ஐஸ்வர்யா, பிந்து மாதவி, மனோபாலா, சதீஷ் ஆகியோர் தத்தமது பாத் திரங்களை உணர்ந்து நன்றாகவே நடித்திருக்கிறார்கள்.
ஊர்வசியின் நடிப்பு எல்லோரையும் தூக்கிச் சாப்பிட்டுவிடுகிறது. வெவ்வேறு
கோணங்களில் பயணிக்கும் திரைக்கதைக்குப் பின்னணி இசை முக்கியமானது. அந்த
முக்கியத்துவம் எஸ்.எஸ்.தமனின் இசையில் பிரதிபலிக்கவில்லை.
திரைக்கதையின்
விறுவிறுப்புக்கு வி.ஜே. சாபு ஜோசப்பின் கச்சிதமான படத்தொகுப்பு முக்கியப்
பங்காற்றியிருக்கிறது.எந்தக் கதாபாத்திரத்தையும் வீணாக்காமல்,
லாஜிக்கை விட்டு அதிகம் விலகாமல் கதை
சொல்ல முயன்றிருக்கும் இயக்குநரைப் பாராட்டலாம். வெடிகுண்டு விஷயத்தில் கூடுதல்
கவனம் செலுத்தியிருந்தால் படம் வேறு தளத்துக்குச் சென்றிருக்கும்.
No comments :
Post a Comment