(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, February 19, 2015

ராமநாதபுரம் ஸ்ரீமுத்தால பரமேசுவரி அம்பாள் கோயிலில் தேரோட்டம்

No comments :
மகா சிவராத்திரித் திருவிழாவை முன்னிட்டு, ராமநாதபுரம் அருள்மிகு முத்தால பரமேசுவரி அம்பாள் திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
 ராமநாதபுரம் வெளிப்பட்டினத்தில் உள்ள அருள்மிகு முத்தால பரமேசுவரி அம்பாள் கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரித் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்தஆண்டு விழா, கடந்த 9ஆம் தேதி காப்புக்கட்டு மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது.   
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அருள்மிகு முத்தால பரமேசுவரி அம்பாள் தேர்நிலைக்கு சென்றதும் சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது.
 இந்தத் தேரினை, ராமநாதபுரம் ஆயிர வைசிய மகாஜன சபையின் தலைவர் கே.கே. நாராயணன், செயல் தலைவர் எம்.எஸ். கேசவன் தலைமையிலான சபை
நிர்வாகிகளும், கோயில் நிர்வாக அறங்காவலர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் அறங்காவலர் குழுவினரும் வடம்பிடித்து இழுத்து, தேரோட்டத்தினை துவக்கி வைத்தனர்.
ரத வீதிகளின் வழியே நடைபெற்ற தேரோட்டத்தின்போது, ஆயிர வைசிய மகளிர் குழுவினர் கோலாட்டம், கும்மியாட்டம் ஆடியபடி அம்மனை வரவேற்று அழைத்து வந்தனர்.
விழாவில், ராமநாதபுரம் அரிமா சங்கத் தலைவர்கள் எம். சண்முகசுந்தரம், அபர்ணா வெங்கடாஜலம், நகை வியாபாரிகள் சங்க இணைச் செயலர் பார்த்தீபன், தன்னார்வ
ரத்த தான அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வேணு. சதீஷ்குமார், ஜெ.சி.ஐ. அமைப்பின் பொருளாளர் மகாலிங்கம் உள்பட முக்கியப் பிரமுகர்கள் பலரும்
கலந்துகொண்டனர்.  தொடர்ந்து, வியாழக்கிழமை பால்குடத் திருவிழாவும், அன்று இரவு அம்மன் சயன அலங்காரத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளி திருவீதி உலாவும்
நடைபெறவுள்ளன. வெள்ளிக்கிழமை உற்சவ சாந்தியுடன் விழா நிறைவு பெறுகிறது.


செய்தி: தினமணி

No comments :

Post a Comment